அவர் முதலில் பாஜகவில் இணைந்திருக்க வேண்டும்

மாரிதாஸ் எதுவும் பேசுவதும் கருத்து தெரிவிப்பதும் அவரின் சொந்த உரிமை, அது பற்றி நாம் ஏதும் சொல்லமுடியாது

ஆனால் அவர் முதலில் பாஜகவில் இணைந்திருக்க வேண்டும், கட்சி அடையாளம் பெற்றிருக்க வேண்டும்

ஆனானபட்ட மோடி முதல் நட்டாவரை கடைநிலை தொண்டனாய் இருந்துதான் உயர்ந்தார்கள், யாரும் பெரும் அடையாளத்தோடு புகுந்தவர்கள் அல்ல‌

அது தேசிய கட்சி, இந்தியாவினை ஆளும் பலமான கட்சி, எல்லா அரசியல் நகர்வுகளையும் தெரிந்த வளர்ந்து நிற்கும் பெரும் கட்சி, அவர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பது நிச்சயம் தெரியும், எப்பொழுது செய்யவேண்டும் என்பதும் தெரியும்

அக்கட்சியில் சேர்ந்து அதனில் ஒரு தொண்டனாக உழைப்பதுதான் மாரிதாஸுக்கு சரியே தவிர, பதவிக்காகவோ இதர விஷயங்களுக்காகவோ சர்ச்சை உருவாக்கினால் அது சரியல்ல‌

அப்படி செய்வாரெனில் இதுகாலமும் அவர் செய்த போராட்டமெல்லாம் அவரின் உழைப்பும் நற்பெயரும் விழலுக்கு இழைத்த நீராகும், சராசரி திராவிட அரசியல்வாதி போல அவர் ஆகிவிடலாம்

இப்பொழுதும் அவர் எதுவும் சொல்லவில்லை என்பதால் நிலமை எல்லை மீறவில்லை

அவருக்கு இருப்பது இரண்டே வாய்ப்பு

முதலாவது பாஜகவில் தன்னை ஒரு தொண்டனாக இணைத்து கொண்டு இப்போதைய பணிகளை முன்னெடுப்பது

இரண்டாவது கட்சி பதவி தேவை இல்லை என சோ ராமசாமி பாணியில் தேசாபிமானிகள் ஆதரவுடன் வீடியோ பத்திரிகை நடத்துவது

இது இரண்டையும் தவிர அவருக்கு வேறு வாய்ப்பே இல்லை, அப்படி இருப்பதாக கருதினால் அவரால் நிலைக்க முடியாது, நெடுநாளைக்கு ஒளிவீசமுடியாது அவரின் உழைப்புக்கள் பலன் தராது

வரலாற்றில் மாரிதாஸை விட பிரமாண்ட பிம்பம் கொண்ட ஈவிகேஸ் சம்பத், கண்ணதாசன், சிவாஜி கணேசன் வலம்புரி ஜாண், இன்னும் யார் யாரெல்லாமோ சரியான வியூகத்தில் தங்களை மலை என நம்பி சரிந்தார்கள்

மாரிதாஸுக்கு அந்நிலை வந்துவிட கூடாது என்பதுதான் தேசாபிமானியரின் பெரும் கவலை

இனி அவர்மேல் ஆயிரமாயிரம் விமர்சனங்கள் வரலாம், ரஜினி கொண்டு முயற்சித்தார் பதவிக்கு வர விரும்பினார் இப்பொழுதும் விரும்புகின்றார் என ஆளாளுக்கு பொரிந்து தள்ளுவார்கள்

ஆனால் பாஜக இதனை நிச்சயம் பெரிதாக கண்டு கொள்ளாது

அனுதினமும் ஆயிரமாயிரம் சிக்கல்களை எதிர்கொள்ளும் பாஜக நிச்சயம் மாரிதாஸை மிக பெரிய் பிம்பமாக கருதாது, அவர்களை பொறுத்தவரை இவர் வந்தால் நல்லது வராவிட்டால் கவலை இல்லை என்பதாக மட்டும்தான் இருக்கும் அதுதான் பாஜக‌

யாராக இருந்தாலும் ஏன் ஒரு வியூகம் தெரிந்த ராணுவ வீரனாகவே இருந்தாலும் தலமைக்கு அடங்குதல்தான் படைக்கு அழகு

நல்ல வேளையாக இப்பொழுது அந்த பெரியவர் இல்லை, இருந்திருந்தால் டிரம்ஸ் மியூசிக்கில் இந்நேரம் வரிகள் ஓடி வரும்

“ஆரிய கொடுமையினை உணர்ந்தாயா தம்பி , தாய்கழகம் காத்திருக்கின்றது உடனே வா

காயம்பட்ட கண்மணியே வா

அறியாமல் தன் முகத்தில் அடித்த குழந்தையினை தாய் அன்போடு அரவணைப்பது போல் கைநீட்டுகின்றேன் என் செல்லமே வா

ஆரிய விடபாம்பினை கண்டு அலறும் உன்னை அணைக்க வந்திருக்கின்றேன் வா, மாரியாய் பொழிவாய் திராவிடம் வளர்ப்பாய், அறிவுடையோர் இருக்கவேண்டிய இடம் அறிவாலயம்”