இன்று சதாம் பிறந்தநாள், அந்த மாவீரனுக்கு ஆழ்ந்த அஞ்சலி

Image may contain: 1 person

இந்த தலைமுறை கண்ட மாவீரனும், ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என சொன்னவனும், தன் நாட்டு வளங்களை தன் மக்களுக்கே பயன்படுத்துவேன் என நின்றவனும் , தான் ஆட்சியில் இருந்த காலத்தில் ஈராக்கை தூக்கி நிறுத்தியவனும்,

இந்தியா என் நட்பு நாடு இந்திராகாந்தி என் சகோதரி நாங்கள் இருக்கும்வரை அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆசியாவில் நுழையமுடியாது என சவால்விட்டவனுமான மாவீரன் அவன்

காலம் அவனை மாவீரன் வரிசையில்தான் வைத்திருக்கின்றது, வடகொரியா போல் அணுகுண்டோ அல்லது இன்றைய புட்டீன் போல வலுவான எதிர்சக்தியோ 1990களில் இருந்திருந்தால் அத்தலைவன் வீழ்ந்திருக்க மாட்டான்

சதாமின் வீழ்ச்சி தனிமனித வீழ்ச்சி அன்று , அரபு நாடுகளின் வீழ்ச்சி அவர்களின் சுதந்திரமும் எதிர்காலமும் பறிபோன அவலத்தின் தொடக்கம்

இன்று அந்த மாவீரனின் பிறந்த நாள்

அண்டை நாடுகளில் நாட்டு எண்ணை எல்லாம் அரசனுக்கே என்றபொழுது, என் நாட்டு எண்ணெய் எம் மக்களுக்கே என அரபுலகில் முதலில் அடித்து சொன்னவன் அவன்.

இஸ்ரேல் இருக்கும் வரை அரேபியா அமைதியாய் இராது என மிக துணிவாய் சொன்னவன்

அவன் போராடியதும், வீழ்ந்ததும் நிச்சயம் அவனுக்காக அல்ல அந்நாட்டிற்காக‌

அவன் இருக்கும்வரை மிக முக்கிய பொருளாதார கேந்திரமாக இருந்த ஈராக் இன்று தரித்திர தேசமாயிற்று

இரும்பு கோட்டையாக இருந்த நாடு இன்று ஆளாளுக்கு வந்து அடிக்கும் தமிழக பிஜேபி அளவிற்கு சென்றாயிற்று

அவன் இல்லா இக்காலத்தில் புகழ்பெற்ற டைரிஸ் யூப்ரடிஸ் நதியினை கூட நிறுத்திவிட்டது துருக்கி, அது அப்பகுதியின் கர்நாடகம்

ஈராக்கியர் இன்று படும் அவலம் கொஞ்சமல்ல, பல நாடுகள் அவர்களை குதறுகின்றன, உள்நாட்டு சிக்கல் வேறு

இரும்பு மனிதனாக ஈராக்கை ஆண்டு அதன் அமைதியான வாழ்வினை வளமாக கொடுத்த சதாம் உசேனை இன்றும் தேடுகின்றார்கள்

பாலஸ்தீனியரும், சிரியரும் தங்களை அரண்போல் காத்த சதாமினை இன்றும் நினைக்கின்றார்கள்

அவனோடு மோதினோம் ஆனால் அவன் இருந்திருந்தால் இன்னும் இப்பகுதிக்கு பலமே என மனதார எண்ணுகின்றது ஈரான்

வஞ்சத்தில் வீழ்ந்த அந்த மாவீரனுக்கு இன்று பிறந்த நாள்

இந்தியர் என் சகோதரர் என மார்தட்டி சொன்ன அந்த மாவீரன் இல்லா ஈராக்கில் இன்று இந்தியர் எல்லாம் கொல்லபடுகின்றனர்

அமெரிக்கா தன் அதிகாரத்தை அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் நிறுத்தவேண்டும் என சுயமரியாதையாக போராடிய அவனைப்போல் இனி யார் வருவர்?

கட்டபொம்மனை, மருதிருவரை , திப்பு சுல்தானை நாம் கண்டதில்லை ஆனால் அவர்கள் எல்லோரையும் சதாம் எனும் மாவீரனின் உருவில் கண்டிருக்கின்றோம்

இந்த நூற்றாண்டில் நம் கண்முன் வாழ்ந்த மாபெரும் போராளி அவன்

இன்று அவனுக்கு பிறந்தநாள், அந்த மாவீரனுக்கு ஆழ்ந்த அஞ்சலி

இன்று நொறுக்கபட்டாலும் இன்னொரு நாள் அத்தேசம் எழும்பும் அது சதாமின் வழியிலே நிச்சயம் எழும்பும்

டைக்கிரிஸ் நதி ஓடுமளவும் நெபுகாத் நேச்சர் மன்னனின் புகழ் போல, சிங்கம் சதம் உசேனின் புகழும் வாழும்.