கக்கன் மறைந்த தினம் 23 டிசம்பர்… அழுவோம் வாய்விட்டு அழுவோம்

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு காலத்தில் தூய்மையான தியாகிகளும், மக்களை தவிர ஏதும் சிந்தியா மகா உத்தமர்களும் இருந்தார்கள், அப்படியும் ஒரு பொற்காலம் இருந்தது
அப்படி ஒரு குறையும் சொல்லமுடியாத தூய்மையான அரசியல்வாதிகளில் ஒருவர்தான் கக்கன் , காந்தி, சாஸ்திரி, காமராஜரை போலவே மகா தூயவாழ்வு வாழ்ந்த அரசியல் மகான் அவர்
சுதந்திரபோராட்ட தியாகி, வெள்ளையனிடம் சிறையில் சித்திரவதை பட்டவர்களில் அவரும் உண்டு, கடுமையான அடிகள் அவை
சுதந்திர இந்திய பொதுதேர்தலில் மதுரை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கபட்டவர். பின்னர் காமராஜர் அமைத்த அரசில் அமைச்சரானார்
அமைச்சர் ஆனாலும் சாதாரண மக்களோடு பேருந்து பயணம், எளிமையான வாழ்வு என்றுதான் இருந்தார். மகா எளிமையான வாழ்வு
பொதுபணிதுறை, மின்சார துறை, விவசாயதுறை, காவல்துறை என அந்த காங்கிரஸ் அரசின் எல்லா துறைகளிலும் அமைச்சராக இருந்தும் சல்லி காசு கூட சம்பாதிக்க தெரியாத நேர்மையான அரசியல்வாதி அவர்
அவர் பொதுபணிதுறை அமைச்சராக இருந்தபொழுதுதான் மேட்டூர் அணை உயரம் அதிகரிக்கபட்டது, மணிமுத்தாறு வைகை அணைகள் எல்லாம் கட்டபட்டன
அவர் விவசாய அமைச்சராக இருந்தபொழுதுதான் உரங்கள் கிடைக்க வசதி, கூட்டுறவு முறை எல்லாம் கொண்டுவரபட்டது
அவர் காவல்துறை அமைச்சராக இருந்தபொழுது சாதி கலவரங்கள் நேர்மையாக இரும்புகரம்கொண்டு அடக்கபட்டது, சாதி கலவரங்களை தடுக்க உளவு போலிஸ் துறை எல்லாம் உருவாக்கினார்
மிக பெரும் திட்டங்களை உருவாக்கியவர், பெரும் பதவியில் இருந்தாலும் தன் பிள்ளைகளை அரசு பள்ளியிலே படிக்க வைத்தார், கக்கனின் சிபாரிசில் வேலைக்கு வந்தவர்கள் என்றோ, கக்கனின் சிபாரிசில் தப்பிய குற்றவாளி என்றோ ஒருவனையும் காட்ட முடியாது
அரசியல் தவ வாழ்க்கை வாழ்ந்த மகான் அவர் , அவரைத்தான் எதிர்த்து நின்றன திமுக புலிகள்.
அதுவும் பெரியார் சொன்னார், “இந்த கக்கனோ காமராஜரோ பிராமணர் இல்லிங்க, அவர்களும் தாழ்த்தபட்ட சூத்திரர்கள். நன்றாகத்தான் ஆளுகின்றார்கள்,
ஏ அயோக்கிய பயலுகளா அவர்களை ஆளவிடுங்க.. உங்கள பற்றி எல்லோரையும் விட எனக்கு நல்லா தெரியும்”
அவர் சொன்னதை எல்லாம் திமுக கேட்கவில்லை
எங்கு பெரியார் பேச்சை கேட்கவேண்டுமோ அங்கு மிக சரியாக காதை பொத்திகொள்பவர்கள் அவர்கள்
1967ல் திராவிட புரட்சியில் தோற்றார், 1971லும் தோற்றார். நாட்டுக்காக, தமிழக மக்களின் நல்வாழ்விற்காக முனிவர் போல உழைத்துகொண்டிருந்த அவர், காமராஜர் போன்றோரை விரட்டிவிட்டுத்தான் திமுக ஆட்சிக்கு வந்தது
அதன் பின் கக்கனை பற்றி செய்தி இல்லை, அவர் பராரி கோலத்தில் சென்னையில் மக்களோடு மக்களாக சுற்றினார். இவ்வளவிற்கும் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த அவர சத்யமூர்த்திபவனும் கைவிட்டது
மிக்க வறுமையில் சிக்கிய அவரை சிவாஜி கணேசன் சந்தித்து கண்ணீர் சிந்தினார், சிவாஜி கஞ்சன் என்பார்கள் ஆனால் செய்ய வேண்டிய இடங்களில் செய்தார்
தனக்கு பரிசாக வந்த தங்க சங்கிலி ஒன்றை ஏலம் விட்டார், பணம் குவிந்தது, தன் பணத்தையும் போட்டு வங்கியில் டெப்பாசிட் செய்து கக்கனின் வறுமை போக்க முனைந்தார் சிவாஜி கணேசன்
அந்த மாமனிதனை அன்று தமிழக அரசும் எட்டிபார்க்கவில்லை, நேரு பின்னால் கொடி பிடித்த அவரை இந்திரா அரசும் எட்டிபார்க்கவில்லை
தன்மானத்தில் உயர்ந்துநின்ற கக்கன் அவர்களிடம் கையேந்தவுமில்லை
பின்னொருநாள் ராமசந்திரன் முதல்வரான காலத்தில் அரசு மருத்துவமனைக்கு சுற்றிபார்க்க சென்றார், அங்கே ஓர் முதியவர் பாய் விரித்து படுத்திருந்தார், நோய் அவரை படாதபாடு படுத்தியிருந்தது
ராமசந்திரனிடம் அதுதான் கக்கன் என சொன்னார்கள்
தான் சினிமாவில் நடித்துகொண்டிருந்தபொழுது பெரும் அமைச்சராக கோலோச்சியவர் இவரா? அந்த பெருமகனா என மனம் நொந்த ராமசந்திரன் அவரை நல்ல மருத்துவமனையில் சேர்த்தார்
எந்த ராமசந்திரன்? மக்களை மயக்க எந்த முகத்தை திமுக பயன்படுத்தியதோ? கக்கன் காமராஜரை வீழ்த்த எந்த ராமசந்திரனை ஒப்பனையிட்டு மக்கள் முன்னால் நிறுத்தியதோ அந்த ராமசந்திரன்
நிச்சயம் அன்று ராமசந்திரனின் மனம் கலங்கி இருக்க வேண்டும், இந்த மாமனிதனை என்னை வைத்தா தோற்கடித்தார்கள் என அவர் கலங்கி இருக்க வேண்டும், அப்படி கலங்கினார் என்றுதான் நெருக்கமானவர்கள் சொல்கின்றார்கள்
உண்மையில் ராமசந்திரன் அவர் நலம் காக்க போராடினார், ஆனால் இம்மக்களுக்காக உழைத்து பின் அவர்களால் தோற்கடிக்கபட்டு புழுதியில் எறியபட்டு மனதால் செத்திருந்த கக்கன், உடலாலும் பிணமானார்
அது டிசம்பர் 23
கக்கனின் வாழ்வே கொடுமை நிறைந்தது, அதனை விட கொடுமையான செய்தி கக்கனின் மகன் ஒருவன் வாழ வழியின்றி பைத்தியமாகிவிட்டான் என்ற செய்தி அது
அந்த பொதுநல பித்தன் இம்மக்களுக்காக உழைத்து தன் மகனை பராரியாக்கி பித்தனாக்கி இருக்கின்றான்
14 ஆண்டுகள் அமைச்சராக இருந்தவன் ஒரு பைசா இல்லாமல் அரசு ஆஸ்பத்திரியில் கிழிந்த பாயில் கிடந்த தமிழகத்தில்தான், முதல்வர் வீட்டு வேலைக்காரர்கள் எல்லாம் பல்லாயிரம் கோடி சொத்துக்களோடும், பெரும் பணத்தோடும் பெரும் உல்லாச வாகனங்களில் அலைகின்றார்கள்
கக்கனை விரட்டினார்கள் திமுகவினர், இதோ கக்கனின் குடும்பத்து சொத்து என ஒரு செங்கல்லை காட்ட முடியுமா? ஆனால் திமுகவினர் சொத்து மதிப்பு வங்க கடலையும் விட பெரியதாக போகின்றது
இதனை பார்க்கும்பொழுது தமிழகம் நாணத்தால் தலைகுனிகின்றது, எப்படிபட்ட வீழ்ச்சியினை சந்தித்துவிட்டோம் என வெட்கி அழுகின்றது
நேர்மைக்கு அடையாளம் அந்த கக்கன், எளிமையான மக்கட் பணிக்கு பெரும் அடையாளம் அந்த மாமனிதன்
அவரை போன்றவர்கள் இனி வரமாட்டார்கள்,
தமிழக அரசியல் நதி அவ்வளவு சுத்தமான நதியாக ஓடியிருக்கின்றது, அந்த சோலை அவ்வளவு மணமாக இருந்திருக்கின்றது, அந்த விளக்கு அவ்வளவு பிரகாசமாக ஒளிவீசியிருக்கின்றது என கக்கன், காமராஜரின் வரலாறுகள் நமக்கு காட்டுகின்றன
இன்று நாறிவிட்ட சாக்கடையாக, கருவாட்டு மூட்டையாக, பெரும் இருளில் சிக்கிவிட்ட அந்த அரசியலில் இருந்து ஓரமாக நின்று அந்த பொற்காலத்தை நினைத்து அழுவோம்
தெய்வங்கள் அருள்வழங்கிய அந்த ஆலயத்திலிருந்து அவைகளை விரட்டிவிட்டு சாத்தான்களை குடி வைத்ததற்காய் அழுவோம்
அதில் கக்கனுக்காகவும் அழுவோம் , இவர்களை போல உத்தமர்களை அதுவும் தோற்றபின்னும் மறுபடியும் வந்து வாக்கு தாருங்கள் உங்களுக்காக உழைக்கின்றோம் என நின்ற அந்த அப்பாவிகளை விடாமல் துரத்தினோம் என்றால்
கிறிஸ்துவினை கொன்ற யூதனுக்கும், இவர்களை விரட்டிய தமிழனுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்?
அந்த பாவத்திற்கு பெரும் தண்டனையும், பெரும் கண்ணீரும் பெற்றுத்தான் தீரவேண்டும்
அதனால்தான் இந்த அழுகை அழவேண்டியிருக்கின்றது தமிழகம், அழுவோம் வாய்விட்டு அழுவோம்
அதில் இந்த அப்பாவி கக்கனுக்காக ஓங்கி அழுவோம்