கார்ல் மார்க்ஸ் 200ம் பிறந்தநாளில் தொழிலாளரை காக்க அவதரித்த அந்த தெய்வத்தை கைகூப்பி வணங்குவோம்

Image may contain: 2 people, people sitting

உலகத்தை புரட்டி போட்டவர்களில் அழியா புகழுடையவர் காரல் மார்க்ஸ், உலகம் கண்ட வரலாற்று மனிதர்களில் அவருக்கான இடம் எக்காலமும் அழியாதது

அவர் ஒரு யூதர், ஆனால் கிறிஸ்தவ யூதர். நமக்கெல்லாம் ஹிட்லர் யூதரை ஒழித்தது தெரியும். ஆனால் இயேசுவிற்கு பின்னால் ரோமர் யூதரை போட்டு சாத்தினார்கள், ரோமின் அரசராக போப் வந்த பின் ஐரோப்பா எங்கு அடிக்கடி போட்டு அடித்தார்கள்

அப்படி அடிதாங்கமுடியாமல் கிறிஸ்தவத்திற்கு மாறிய சில யூதர்கள் உண்டு, காரல் மார்க்ஸின் முன்னோர் ஜெர்மனில் அப்படி கிறிஸ்தவரானார்கள்.

இயேசு நாதரின் உறவு வம்சமோ என்னமோ, தன்னலம் மறந்து மற்றவர்களுக்காக கவலைபட்ட யூதர் மார்க்ஸ், யூதருக்கே உரிய அறிவு அவரிடமும் இருந்தது, மிக சிறந்த அறிவாளி அதனை விட முக்கியம் அவரின் எழுத்துக்கள்

கல்லூரி படிப்பில் தனித்து நின்றான் , பொருளாதார அறிவில் தன்னிகரற்று விளங்கினான்

அவரின் பட்டமும், பதவியும், அறிவும், வாதமும் அவருக்கு பெரும் புகழை கொடுத்தன, வாதத்தில் அன்று அவரை வெல்வார் யாருமில்லை

பெரும் அறிவாளிகள் உலகினை ஒட்டிவாழமுடியாது, பெருந்த்த அறிவு ஒரு வகை பிணி, ஒரு சாபம். அது அந்த மனிதனை அவன் வாழும் சமூகத்தால் பரிகசிக்க வைக்கும், ஒதுக்கி வைக்கும், அவனை பைத்தியக்கார வகையில் சேர்க்கும், அவன் வாழ்வு மிக அலங்கோலமாய் அமையும்

ஆனால் பின்னால் வரும் தலைமுறை அவனை கொண்டாடும், அவனுக்காய் அழும், உலக வினோதம் இது, மிக சிறந்த உதாரணம் தமிழகத்து பாரதி

பாரதிக்கு முன்னோடி அந்த‌ மார்க்ஸ்,

அவன் அறிவும் எழுத்தும் உலகம் அவனை வினோதமாக பார்க்க வைத்தன‌, நிச்சயம் ஏதோ சொல்கின்றான், ஆனால் சமூகத்திற்கோ குடும்ப வாழ்க்கைக்கோ ஒத்து வராதவன் என உலகம் அவனை ஒதுக்கியது.

ஒரே ஒருத்திமட்டும் அவனின் அறிவுக்காக அவனை விரும்பினாள்.

அந்த பெண்ணும் அவள் காதலும் இல்லை என்றால் மார்க்ஸ் இல்லை, கம்யூனிசம் இல்லை, லெனின் இல்லை, சோவியத் ரஷ்யா இல்லை, மாவோ இல்லை சீனா இல்லை, ஹோசிமின் இல்லை, பிடல் காஸ்ட்ரோ இல்லை , ஏன்? வடகொரிய அதிபரும் இல்லை

தமிழகத்தில் திராவிட குரலும் இல்லை

அவள் ஜென்னி, மிகுந்த பணக்கார வாரிசு, அழகியும் கூட. யூதனாயிலும் பார்க்க சகிக்காத அழகர் மார்க்ஸ், கிட்டதட்ட நம் போல அழகற்ற முகம், ஆனால் மிக மெலிந்த தேகம், மொத்தத்தில் பெண்கள் விரும்பாத ஆண் அவர்.

ஆனால் ஜென்னி அவன் அறிவிற்காக காதலித்தாள். அந்த ஒன்றிற்காக அவனை சுற்றி சுற்றி வந்தாள். அவளின் அணைப்பு ஒன்றிலே தன் அவமானத்தை எல்லாம் துடைத்துவிட்டு எழுதினார் மார்க்ஸ்

அது எந்திரங்கள் வந்து உற்பத்தி பெருகிய தொழில் புரட்சி காலம், ஆனால் தொழிலாளர்கள் உரிமை இல்லா காலம். மார்க்க்ஸ் அழுதது அவர்களுக்காக, சிந்தித்தது அவர்களுக்காக ஏதும் செய்யமுடியுமா? என முழுநேரமும் வாழ்ந்தது அவர்களுக்காக‌

காரணம் அத்தொழிலாளிகள் 18 மணி நேர வேலை செய்யவேண்டும், உரிமை என உணவினை தவிர எதுவுமில்லை. சுருக்கமாக சொன்னால் ஏரில் கட்டிய மாடும் அக்கால தொழிலாளியும் ஒன்று

மார்க்ஸ் வீட்டிலோ வறுமை, முதலாளிகளை பகைத்ததில் சுத்தமான வறுமை. ஆனாலும் ஜென்னி அவனை விட்டு செல்லவில்லை. அவள் காதல் அறிவிற்காக வந்ததல்லவா? அது மார்க்ஸிடம் நிரம்ப இருந்ததால் அவள் காதல் குறையவில்லை, இவன் 4 காசு சம்பாதிக்க மாட்டான், இவனுக்கு உன்னை திருமணம் செய்துகொடுக்கமாட்டோம் என சொன்ன பெற்றோர்களை தூக்கி எறிந்தாள் ஜெனி

மார்க்ஸின் எழுத்துக்கள் அடிமையான தொழிலாளர்களுக்கு கடவுளின் வார்த்தையாய் ஓளிவீசின, அவர் கொண்டாடபட்டார், விளைவு ஐரோப்பா எங்கும் விரட்டபட்டார். நீ எழுதகூடாது என சொல்லியே நாடுகள் அவரை அனுமதித்தன‌

எந்த ஒரு புரட்சியாளனும் தன்னைபோல ஒருவன் கிடைத்துவிட்டால் பற்றி எரிவான், ஏங்கல்ஸை சந்தித்தபின் அப்படி எரிய தொடங்கினார் மார்க்ஸ், “உலக தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்” என அவன் நாடு, மொழி,இனம்,மதம் கடந்து அழைத்தபொழுது ஐரோப்பா திடுக்கிட்டது

ஆம் அவன் ஜெர்மன் தொழிலாளியே, பிரான்ஸ் தொழிலாளியே என அழைக்கவில்லை, உலக தொழிலாளிகளே என உலகம் முழுக்க உள்ள தொழிலாளிகளை அழைத்தான்

ஏங்கல்சும் மார்க்சும் இணைந்தபின் ஐரோப்பா எங்கும் தொழிலாளர் குரல் ஓங்கியது, அது பிரான்சில் தெரிந்தது, பெல்ஜியத்தில் தெரிந்தது, ரஷ்யாவில் எதிரொலித்தது, அரசுகள் திகைத்தன‌

மறுபடியும் ஓட விரட்டபட்டார் மார்க்ஸ், ஜென்னியினை விபசார பொய்வழக்கில் எல்லாம் சிக்க வைத்து மார்க்ஸை சித்திரவதை செய்தனர்.

அவள் அசரவுமில்லை, மார்க்ஸை அழவிடவும் இல்லை. என் மீது எத்தனை வழக்கும் போடுங்கள் என்னை மார்க்ஸ் மட்டும் நம்பினால் போதும் , நான் யாருக்காய் வாழ்கின்றேனோ அவன் மட்டும் நம்பினால் போதும்.

வாழ்வெல்லாம் சோதனையினை மட்டும் கடந்தன அந்த காதல் ஜோடிகள், லண்டன் வாழ்வு அவர்கள் சோதனையின் உச்சமானது, ஆம் மூன்று குழந்தைகளும் வறுமையால் இறந்தன‌

மார்க்ஸ் அந்த பிஞ்சு குழந்தையின் சடலத்தை மார்போடு அணைத்து சொன்னார், “மகனே நீ பிறக்கும்பொழுது தொட்டில் வாங்க காசில்லை, நீ இறக்கும்பொழுது சவபெட்டி வாங்கமும் பணமில்லை”

அப்படித்தான் இருந்தது வறுமை. தாங்க முடியா வறுமை. முதலாளிகளை பகைத்தால் என்னாகும் என்பது மார்க்ஸுக்கு நடந்தது.

எவ்வளவு பெரும் சோகம்? யார் தாங்குவார்?

ஆனால் ஜென்னி தாங்கினாள், உங்களுக்கு பிறகுதான் எனக்கு குழந்தைகள் வந்தார்கள், நீங்கள்தான் முக்கியம், உங்கள் அறிவுதான் முக்கியம் என கொஞ்சமும் அசராமல் சொன்னாள்

“ஒரு பெரும் அசாத்தியமான பெண்ணான ஜெனி என்னை தாங்கி நின்றபொழுதுதான், நான் மகத்தான காரியத்தை படைக்க பிறந்தேன் எனும் நம்பிக்கை எனக்கு வந்தது” என மார்க்ஸே சொன்னார்

உலக காதலர்களில் மிக உன்னத இடத்தில் வைக்கவேண்டியது மார்க்ஸ் ஜென்னி காதல். உலகத்தின் நம்பர் 1 காதல் இதுதான்.

ஆனால் உலகம் சொல்லாது, காரணம் இந்த காதலில் சுயநலமின்றி ஏழை தொழிலாளரின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அல்லவா இருந்தது

இந்த சோதனைக்கு பின்புதான் மார்க்ஸ் மூலதனம் எனும் புத்தகத்தை எழுதினார், மூன்று பாகமாக எழுதினார்

இயேசு கிறிஸ்து போதனை, டார்வின், வரிசையில் , உலத்தை அதிரவைத்த வரிசையில் மார்க்ஸ் வந்தது அந்த புத்தகம் மூலம்தான்

அது ஒன்றும் பெரும் விஞ்ஞானம் அல்ல, எளிய தத்துவம் அதாவது விவசாயி காய்கறியினை உற்பத்தி செய்கின்றான், நாம் கடையில் வாங்குகின்றோம். உண்மையில் நாம் நமது தேவைக்கு அவன் உழைப்பினை கோருகின்றோம், அவன் உழைத்து தருகின்றான். ஆனால் நாம் கொடுக்கும் பணம் அவனுக்கு முழுவதுமாக சேர்கின்றதா? இல்லை இடையில் இருக்கும் வியாபாரி கையில் சேர்கின்றதா?

இதனை தடுத்து உழைப்பவனுக்கு முழுபலனும் கிடைக்க என்ன வழி? என போதிகும் புத்தகம்தான் அந்த மூலதனம்

அதுவரை மத புத்தகங்களையும் இன்னபிற ஏமாற்றுகொள்கைகளையும் பார்த்துகொண்டிருந்த ஐரோபா அந்த புத்தகத்தால் அதிர்ந்தது, இது சாத்தியமா? உழைப்பவனுக்கு அவன் முழு உரிமையும், பொருளும் கிடைக்குமா?

நிச்சயம் கிடைக்கும் அதற்கான வழிமுறை இது என பல்லாண்டு கால ஆராய்சியில் அழகாக சொல்லியிருந்தார் மார்க்ஸ், அது ஒரு லாஜிக், சூத்திரம் போன்றது. இப்படி செய்தால் தொழிலாளர்களை வாழ வைக்கலாம் எனும் சித்தாந்தம் அது

முதன் முதலில் உலகில் தொழிலாளர் நலனுக்காக எழுதபட்ட புத்தகம் அதுதான், அது ஒன்றுதான்.

இந்த புத்தகம் தான் கம்யூனிஸ்டுகளின் பைபிள் ஆனது, உலகெல்லாம் எல்லா கம்யூனிஸ்டுகளுக்கும் வேதமானது. அதாவது அதுவரை தொழிலாளர்களை வாழவைக்க முதலாளிகளால் மட்டும் முடியும் என உலகம் நம்பிகொண்டிருந்தது. மார்க்ஸின் சிந்தனை அவற்றை தகர்தெறிந்து எப்படி தொழிலாள்ர்கள் நிர்வாகத்தையே நடத்தமுடியும் என சொல்லிகொடுத்தது

கிட்டதட்ட ஆதாமுக்கு கிடைத்த ஞானபழம் போல, தொழிலாளருக்கு மூலதனம் எனும் புத்தகம் கிடைத்தது, அது உலகை மாற்றிற்று

அதனை பின்பற்றி சோவியத் ரஷ்யா அமைந்தது, சீனா, கியூபா என எல்லா தேசங்க்ளும் அமைந்தன, கொரியாவும் ஒரு கம்யூனிச தேசமாக மலர்ந்திருக்கும், அமெரிக்கா கெடுத்தது அது இன்றுவரை தீரவில்லை, இன்று அந்த கம்யூனிச வடகொரியா அமெரிக்காவின் சவால்

இன்று எல்லா நாடுகளிலும் உள்ள தொழிலாளர் நலனுக்கான சட்டங்களின் மூலம் இந்த கார்ல் மார்க்ஸின் கொள்கைகளே, அவரின் சிந்தனைதான் இன்று ஓரளவிற்காவது உலக தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு தருகின்றது

இன்று காரல் மார்க்ஸுக்கு 200ம் ஆண்டு நினைவுநாள்

மானிட நேயம் என்றால் என்ன? தொழிலாளர் நலன் என்றால் என்ன? என முதன் முதலில் சிந்தித்த அந்த கடவுளின் பிறந்தநாள்.

சாதிப்பது பெரிதல்ல , வறுமையிலும் சாதித்தான் அல்லவா? அதுதான் பெரிது

கம்யூனிச உலகிற்கு அவனும் அந்த ஜெனியும் மறக்க முடியாதவர்கள்

உலகெல்லாம் இன்று மார்க்ஸ் கொண்டாடபட்டாலும், பல நாடுகளின் தலைமகனாக அவன் வீற்றிருந்தாலும் அன்று வறுமை அவன் குடும்பத்தை கொன்றது, பின் அவனருமை ஜெனியினை கொன்றது

ஜெனி இறந்த கொஞ்சநாளில் மார்க்ஸும் இறந்தார், அந்த ஜெனியும் அவள் காதலும் இல்லையேல் மார்க்ஸ் இல்லை, இல்லவே இல்லை

மார்க்ஸின் அறிவு மீது அவளுக்கு அவ்வளவு நம்பிக்கையும், காதலும் இருந்திருக்கின்றது, அது பொய்க்கவில்லை மாறாக வரலாறு ஆயிற்று என்பதுதான் அவள் கண்ட ஒரே நிம்மதி

மார்க்ஸின் வாழ்விற்கும் பாரதி வாழ்விற்கும் நிறைய ஒற்றுமை காண முடியும், மார்க்ஸ் கவிஞன் கூட‌

பெருத்த அறிவு பெரும் நோவு என சொன்ன பழமொழி பொய்யல்ல, பெரும் அறிஞர்களின் வாழ்வு இப்படித்தான் இருந்திருக்கின்றது. அவர்களை புரிந்துகொள்ள 100 ஆண்டுகளுக்கு பின் கழிந்து முடிந்திருக்கின்றது, அதன் பின்புதான் புரட்சி வெடித்தது

அந்த புரட்சிக்கு பின்புதான் உலகெல்லாம் தொழிலாளருக்கு பலன்கல் கிடைத்தன. லெனின் அவரின் கொள்கைபடி அரசை அமைத்தபின்புதான் தொழிலாளர் உலகம் விடிந்தது

மக்களே மக்களை ஆளும் காலங்கள் அதன்பின் வேகம் பெற்றன. பல நாட்டு தலைவிதிகள் மாறி தொழிலாளர் உலகம் பெரும் நலம் பெற்றது

இன்று காணும் உரிமையும், சலுகையும் இன்னும் ஏராள விஷயங்களுக்கும் அடிக்கல் நாட்டியவன் மார்க்ஸ். அவன் உழைப்பின் பலனே இன்று தொழிலாளி உரிமையாக உலகெல்லாம் அவர்களை வாழ வைக்கின்றது

வரலாற்றில் இயேசுவிற்கு பின் பெரும் இடம் பெற்றுவிட்டர் மார்க்ஸ். இந்த உலகை புரட்டி போட்டவர்

அவர் இறந்த 100 ஆண்டு காலம் கழித்து செங்கொடி உலகின் சரிபாதியினை ஆண்டது. எந்த மன்னாதி மன்னனும் சங்கரவர்த்தியும் ஆளாத ஆட்சி அது

மார்க்ஸ் கண்ட கனவு அது, அவன் பிடித்த கொடி அது, பின்னாளில் உலகை ஆண்டது. ஆனால் பார்க்க அவன் இல்லை

வாழ்வெல்லாம் அவன் கண்டது அவமானமும் வறுமையுமே.

மார்க்ஸுக்கு ஜெனியும், ஏங்கல்சும் கிடைத்தார்கள் ஆயுளும் கிடைத்தது, ஆனால் நம் பாரதிக்கு இப்படி ஒன்று கூட வாய்க்கவில்லை.

வாய்த்திருந்தால் அவன் உலகில் பெரும் உயரத்தில் எங்கோ சென்றிருப்பான்.

இன்று மார்க்ஸின் பிறந்த நாள் , முதன் முதலில் தொழிலாளிகளுக்காய் கண்ணீர் விட்ட, உலக தொழிலாளர்களின் வாழ்விற்காய் தன் வாழ்வினை அர்பணித்தவனும், இக்காலம் வரை தொழிலாளர் பெறும் அனைத்து சலுகைகளுக்கும் மூல காரணமான அவருக்கு ஆழ்ந்த அஞ்சலி

இது கணிணி யுகமாக இருக்கலாம் ஆனால் தொழிற்சங்கம் அமைத்து தொழில்பாதுகாப்பாக இருக்கும் கொத்தனாருக்கும், மில் தொழிலாளிக்கும் உள்ள தொழில்பாதுகாப்பு ஐடி தொழிலாளிக்கு இல்லை

தொழில்நுட்பம் எவ்வளவும் மாறலாம், உலகம் மாறலாம் ஆனால் உழைப்பவன் உரிமையினை மீட்டெடுக்க எந்நாளும் மார்க்ஸ் தேவைபடுவார்

காரணம் அவர் தனக்காக வாழ்ந்தவர் அல்ல, தொழிலாளரின் நல்வாழ்வுக்காக வாழ்ந்தவர் , பிறருக்காக வாழ்ந்தவர்

அந்த ஜெனி மார்க்ஸின் அறிவிற்காக வாழ்ந்தவள். இருவருக்கும் தன்னலம் என்பது கொஞ்சமுமில்லை

சரித்திரத்தில் கடவுளை போலவே அவர்கள்
அமர்ந்துவிட்டது இதனால்தான்

இந்த இருநூறாம் பிறந்தநாளில் , தொழிலாளரை காக்க அவதரித்த அந்த தெய்வத்தை கைகூப்பி வணங்குவோம்