காளிதாசனின் ரகுவம்சம் : 61-65

காளிதாசனின் ரகுவம்சம் : 61

தான் எப்போதும் உண்மையினை மறைக்காமல் பேசுவது போல் மற்றவரும் உண்மையினை மறைக்காமல் தன்னிடம் பேசவேண்டும் என எதிர்பார்ப்பவன் என்பதால் அந்த உளவுக்காரன் உள்ளதைச் சொன்னான்.

“அரசே, ராட்சசனின் மாளிகையில் சில காலம் இருந்த சீதையினை நீங்கள் ஏற்றுக்கொண்டு அயோத்திக்கு அழைத்து வந்ததை தவிர எல்லா வகையிலும் மக்கள் உங்களைக் கொண்டாடுகின்றார்கள்” என்றான்.

தன் அன்புக்குரிய மனைவியான சீதையினைப் பற்றி எழுந்த இந்த அபகீர்த்தியானது பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்பினைச் சம்மட்டி அடித்து உடைப்பதைப் போல உடைத்துப்போட்டது.

தன்னைப்பற்றிய இந்தப் பெரும் அபகீர்த்தியுடன் அவளுடன் வாழ்வதா, சிறிதும் குற்றமற்ற அவளை விலக்கி வைத்து தன் கீர்த்தியினைத் தக்க வைப்பதா என அவன் குழம்பினான், இப்படி இருமனத்தோடு போராடினான் அந்த ஒருமனத்தான்.

சாஸ்திரம் அறிந்த நல்ல மனிதர்க்கு மானமே பிரதானம் என்பதால் உயிரைப் பிரித்தேனும் மானம் காப்பர், அதனால் தன் மானம் காக்க தன் உயிரணைய சீதையினைப் பிரிய முடிவெடுத்தான் ராமன், வேறு எந்த வகையிலும் இந்தக் களங்கத்தைத் துடைக்க முடியாது என அவன் உணர்ந்திருந்தான்.

தன் நாடு, தன் தகப்பன், தன் தாய், தன் தம்பியர், தன் மக்கள், தன் மணிமுடி, தன் அரசு எனத் தியாகங்கள் மூலமே தன் கீர்த்தியினைக் காத்துக்கொண்ட ராமன் இப்போதும் சீதையினைத் தியாகம் செய்தே அந்தக் கீர்த்தியினைக் காக்க முடிவெடுத்தான். மனைவி இல்லாதவன் யாகத்தில் அமரக்கூடாது எனத் தெரிந்திருந்தும் யாகங்களை காக்கும் அவன் அவளைத் தியாகம் செய்ய முன்வந்தான், ரகுவம்ச மன்னனின் கீர்த்தி அவ்வளவு முக்கியமென கண்டான் ராமன்.

தன்னைப் பற்றி அபகீர்த்தியினை அவன் தன் பாசத்துகுரிய தம்பிகள் முன் சொல்லும்போது அவர்கள் கிரகண காலச் சந்திரனைப் பார்க்கும் அல்லி மலரென வாடிக் குழம்பி நின்றார்கள்.

மிகத் தூய்மையானதும் எல்லாவற்றையும் தூய்மையாக்குவதுமான சூரியனிடமிருந்து உதித்து மனு முதல் இஷ்வாகு போன்ற ரிஷிகளால் காத்துவரப்பட்டு, பரிசுத்தமான நடத்தையால் எப்போதுமே காக்கப்படும் குலம், அப்படியான குலத்துக்குக் கண்ணாடியில் மேகத்தில் இருந்து வரும் காற்றினால் மாசுபடிவது போல் என்னால் மாசு படிந்துவிட்டது.

எண்ணெயில் விழும் நீர்த்துளி வேகமாக பரவுவது போல் என்னைப்பற்றிய இந்த அபகீர்த்தி மக்களிடம் வேகமாகப் பரவுகின்றது, என்னைப் பற்றி முதன் முதலாக வரும் துர்ப்பாக்கிய செய்தி இது, இதனால் காட்டில் சுதந்திரமாக சுற்றிய யானை மரத்தூணில் கட்டப்பட்டால் எப்படி அடங்காமல் அந்தச் சங்கிலியினை முறிக்க போராடுமோ அப்படி என் மனம் இந்த அபகீர்த்தியினைக் களையப் போராடுகின்றது.

என் தம்பியரே இப்படியான மனப்போராட்டத்தில் சிக்கிய நான் ஆறுதல் அடையும்படி பேறுகால தருவாயில் இருக்கும் சீதையினை முன்பு நம் தந்தையின் ஆணைப்படி இப்பூமியினை விட்டு நீங்கியது போல் அவளை நீங்கிவிட முடிவெடுத்துள்ளேன்.

சீதை பரிசுத்தமானவள் என நான் அறிவேன். ஆனால், இந்த மக்கள் அறிவார்களோ? அவர்களுக்கு நான் எங்கனம் அதை நிரூபிப்பேன்?, ஒரு அரசன் மக்கள் நம்பிக்கைக்கு ஏற்பத்தான் ஆட்சி செய்யவேண்டும், ஆனால் அவர்களோ விஷயம் அறியாமல் சந்தேகிப்பார்கள்.

நிலவில் களங்கம் என்பது ஒருகாலமுமில்லை. பூமியின் நிழலே சந்திரனில் கறுப்பு பிம்பமாய்த் தோன்றி விழும், இவர்களோ அதை அறியாமல் நிலவு களங்கமுள்ளது என்பார்கள். இப்படியான மக்களே சீதையினைக் களங்கமுள்ளவள் என்கின்றார்கள், இங்கு நான் வேறு என்ன செய்துதான் என்னை நிரூபிக்க முடியும்? அரசன் மக்களின் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவனாக இருக்க வேண்டும் என்பது அவனுக்கான பெரும் பாரங்களில் ஒன்றல்லவா?

என் சகோதரர்களே, அப்படியாயின் இவ்வளவு போராடி ராவணனை வதம் செய்தது வீணாகப்போயிற்றே எனக் கருதுகின்றீர்களோ? அது வீணானது அன்று, தன்னை மிதித்தவனை நாகம் வேகமாக கடிப்பது அவனின் ரத்தத்தை ருசிபார்க்க அன்று. மாறாக, தன்னை மிதித்த கோபத்திற்குப் பழி தீர்க்கவே, அப்படி நானும் ராவணனை பழிதீர்த்தேன், அது அவனுக்கான தண்டனை.

என் உயிரில் அவமானம் எனும் அம்பு தைத்திருக்கின்றது, அதை அகற்றாவிட்டால் இனி நான் வாழமாட்டேன், நான் இதிலிருந்து பிழைக்க வேண்டும், இன்னும் உயிர்வாழவேண்டும் என நீங்கள் நினைத்தால் சீதைமேல் கருணை கொண்டு நீங்கள் என் முடிவினைத் தடுக்கக் கூடாது.

ராமன் சீதையினைப் பற்றி இப்படி ஒரு முடிவெடுத்துவிட்டதை சொன்னதும் அவனின் தம்பியர் அதை மறுக்கவும் ஏற்கவும் துணியாமல் வாய்மூடி நின்றனர்.

சீதையினை ரகசியமாக விலக்கவேண்டி இருப்பதால் அதற்கான வழிமுறையினை ராமனே லட்சுமணனுக்குச் சொன்னான்.

“லட்சுமணா , கர்ப்பிணியான சீதை தபோவனம் செல்ல விரும்பினாள், இதையே நீ காரணமாகக் கொண்டு அவளை மிகப் பெரும் பரமஜீவகாருணியான வால்மீகி முனிவரின் வனத்தில் விட்டுவிடு”

தன் தகப்பனாகிய ஜமதக்னியின் உத்தரவினால் பெற்ற தாயினையும் பகைவனாகக் கருதி தலைவெட்டிய பரசுராமனைப் போல் தன் அண்ணனின் கட்டளைக்குப் பணிந்து அது எத்தகையது என்றாலும் நிறைவேற்ற தீர்மானித்தான்.

லட்சுமணன் நன்கு பழக்கமான குதிரைகளைக் கொண்ட தேரில் அசைவுகள் அதிமில்லாதபடியான பயணத்தில் மிகப் பாதுகாப்பாகச் சீதையினைக் கொண்டு சென்றான்.

சீதையோ கங்கை கரைக்குத் தன் விருப்பப்படி ராமன் தன்னை அனுப்பி வைப்பதாகவும், பின் அவன் தன்னோடு இணைந்து கொள்வான் என்றும் நம்பினாள். தன்மேல் ராமன் கொண்ட அன்பை எண்ணி மகிழ்ந்தாள். தான் கேட்டதை எல்லாம் செய்யும் ராமன் அவளுக்குக் கற்பக மரமாய்த் தெரிந்தான். ஆனால் அவனே இனி தன் இலையால் அருகிருப்போர் உடலை வெட்டிப் புண்படுத்தும் வாளிலை மரமாகிவிட்டான் என்பதை அவள் தெரிந்திருக்கவில்லை, வரப்போகும் ஆபத்தை அறியாமல் மகிழ்வுடன் சென்று கொண்டிருந்தாள்.

அந்நேரம் அவளின் வலதுகண் துடித்தது, அதனால் ஏதோ தீங்கான விஷயம் நடக்கப்போகின்றது என்பதை உணர்ந்து கலங்கிய சீதை, தன் தாமரை முகம் வாடியபடி என்ன நடந்தாலும் தனக்கு நடக்கட்டும் ராமனுக்கு ஏதும் நேர்ந்துவிடக் கூடாது, தன்னால் ஆவது ஒன்றுமில்லை ராமனோ அவன் தம்பியர்க்கும் தாய்க்கும் நாட்டுக்கும் முக்கியம் என நினைத்துக் கொண்டாள்.

அந்தத் துர்ச்சகுனத்தின் நிமித்தம் அவள் மனம் ஏதேதோ சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே அந்த ரதம் கங்கை கரையினை அடைந்தது. இனி மறுகரையில் இருக்கும் வனத்தில் சீதையினை நிரந்தரமாக விட்டுவிடும் முடிவில் லட்சுமணன் தேரில் இருந்து இறங்கியபோது கங்கை நதி ‘இக்கொடுஞ்செயலை செய்யாதே , கர்ப்பிணியினை இப்படி விடாதே” என மன்றாடுவது போல் தன் அலை அனும் கரங்களால் லட்சுமணனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தது.

(தொடரும்..)

காளிதாசனின் ரகுவம்சம் : 62

கொடுத்த வாக்கை எப்பாடுபட்டேனும் காக்கும் லட்சுமணன், பெரும் துக்கம் மனதைத் தாக்கிய நிலையிலும் அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு குதிரைகளை இழுத்துத் தேரை நன்கு நிறுத்தியபின் சீதையினை மிகக் கவனமாக இறக்கிக் கங்கையின் மணற்பாங்கான கரைக்கு அழைத்துச் சென்று செம்படவர்கள் உதவியுடன் மிகச் சிறந்த வசதியான படகில் அவளோடு அக்கரையினை அடைந்தான்.

மறுகரையினை அடைந்த லட்சுமணன் பூரண சந்திரன் போன்ற பொலிவுடன் இருந்த சீதையிடம் அரசனின் ஆணையினைச் சொல்ல முயன்றாலும் அதைச் சொல்லமுடியாதபடி பெரும் துக்கம் அவன் தொண்டையினை அடைத்தது, ஆனாலும் தன் கடமையினை உணர்ந்த அவன், உலகுக்குத் தீங்கு விளைவிக்கும் மேகம் கல்மழை பொழிவதைப் போல ராமனின் உத்தரவினைச் சீதைக்கு மடமடவென மொழிந்தான்.

அந்த அவமானமான வார்த்தைகளைக் கேட்ட சீதை புயலில் சிக்கிய கொடி தன் பூக்கள் சிதற தரையில் வீழ்வது போல் தன் அணிகலன்கள் பூமியில் சிதறிவிழ தன் தாய்மடியான தரையில் வீழ்ந்து மூர்ச்சையானாள்.

பத்தினி பெண்கள் துயரடைந்தால் தாய்மடி தேடுவது போல் தன் தாயான பூமிமாதாவின் மடியில் விழுந்தாள் சீதை. ஆனால், பூமாதேவி அவளை ஏற்காமல் எழுப்பிவிட்டாள், இஷ்வாகு வம்சத்தில் பிறந்த உத்தமமான ராமன் உன்னைத் தியாகம் செய்தான் என்பது நம்பமுடியாதது என ராமனின் செயலை நம்பாதவளாய் அவள் சீதையினை ஏற்க மறுத்தது போல் மூர்ச்சையில் இருந்து எழுந்தாள் சீதை.

சீதைக்குக் குளிரிந்த நீர் முதலாய் உபசாரம் செய்தான் லட்சுமணன், ஆனால் நினைவற்ற நிலையில் கவலையற்று கிடந்த சீதை நினைவு திரும்பியதும் பெரும் மனவலியினைக் கொண்டாள், எல்லாத் திசைகளிலும் இனி தனக்கு எதுவுமில்லை என்பது போல் கலங்கிக் கிடந்தாள்.

அந்நிலையிலும் பரிசுத்தமான அவள் குற்றமற்ற தன்னைத் தள்ளிவைத்த ராமனைப் பற்றி ஒருவார்த்தை நிந்திக்கவில்லை. எல்லாம் தன் விதி என்றும், துன்பம் ஒன்றையே அனுபவிக்க பிறந்தவள், நிரந்தர கானக வாழ்வே தன் பிறப்பின் பலன் என்பதையும் சொல்லித் தனக்குத் தானே நொந்து கொண்டாள்.

ராமன் வனவாசம் செல்லும்போது தனியே செல்ல முயன்றான். ஆனால், சீதை அவனுடனே ஒட்டிக் கொண்டு துன்பத்தை பெற்றாள், ராமன் ராட்சர்களை வதம் செய்யும் போது அவளை விட்டு விலகியிருந்தான், அவளோ ராமனைத் தேடி யுத்த இடத்தின் எல்லைக்குச் சென்று காத்திருந்தாள், அப்படியான சீதை இம்முறை இப்படி ராமன் தன்னை நிரந்தரமாக பிரிகின்றானே எனக் கலங்கினாள், அவளின் பரிசுத்தமான கண்ணீரைக் கங்கைதாய் தன் குளிர்ந்த காற்றின் கரங்களால் துடைக்க முயன்றாள்.

லட்சுமணன் வால்மீகி ஆசிரமம் செல்லும் பாதையினைச் சீதைக்குக் காட்டி அவளிடம் சொன்னான் “தாயே, நான் என் அண்ணனின் சேவகன், அவன் இட்ட உத்தரவினை மட்டுமே என்னால் செய்யமுடியும், உங்களுக்குத் துக்கம் தரும் வார்த்தையினை நான் சொன்னது என் அண்ணன் ஆணையே அன்றி எனதுடையது அல்ல, எனினும் இந்த அடிமையின் கொடும் செயலை நீங்கள் மன்னிக்க. வேண்டும்” எனச் சொல்லி அவள் காலில் விழுந்து வணங்கினான்.

அவனை எழுந்திருக்க சொன்ன சீதை “லட்சுமணா, உன்மேல் எனக்கு எந்த வருத்தமுமில்லை. மாறாக, உன் அண்ணன் மேல் நீ கொண்டிருக்கும் அன்பையும் மரியாதையினையும் எண்ணி பெருமையடைகின்றேன், இப்படியான தம்பி அமைந்த உன் அண்ணன் பாக்கியவான், நீ நீடூழி வாழ்வாய், ஒரு குறையின்றி வாழ்வாய்.

அவ்வாறே என் மாமியார்கள் மூவரிடமும் என் வணக்கத்தைப் பணிவாய் தெரிவித்து என் வயிற்றில் வளரும் ராமனின் சந்ததியினை ஆசீர்வதிக்கும்படி என் சார்பாக விண்ணப்பம் செய்.

நான் பதிவிரதை என்பதை கண் எதிரே அக்னிபிரவேசத்தில் கண்டபின்பும் ஜனங்களின் அறியாமையான வார்த்தைக்கு அஞ்சி என்னை இப்படித் தள்ளிவைத்தது உமது குலத்துக்கும் அறிவுக்கும் பொருத்தமானதுதானா என நான் கேட்டதாக அரசனிடம் தெரிவித்துவிடு.

இன்னும் நான் சொல்வதை அவருக்குத தெரிவித்துவிடு. எப்போதும் சொந்தபுத்தி உள்ள நீர் இப்படி என்னை தள்ளிவைத்தது உமக்குக் குற்றமாகிவிடக் கூடாது இதெல்லாம் என் முற்பிறப்பில் செய்த தீமையின் பயனே, அதுதான் இடியோசை போல தோன்றி தாக்குகின்றது.

முன்பு ராஜலட்சுமி உம்மைத தேடிவந்தபோது அவளைத் தள்ளிவைத்துவிட்டு என்னோடு கானகம் புகுந்தீர், அவளை நீர் அடையாதற்கு நானே காரணம் என வன்மம் கொண்ட ராஜலட்சுமி இப்போது உம்மை அடைந்து என்னைத் தள்ளிவைத்து பழிவாங்குகின்றாள் என்பதை உணர்கின்றேன்.

நான் உம்மோடு கானகம் வந்தபோது ரிஷிபத்தினிகள் பலர் தங்கள் கணவர்களுக்கு ராட்சர்களிடமிருந்து காவல் பெற‌ என்னைச் சரணடைந்தனர், தவக்கோல வடிவில் இருந்த உம் அருளால் அவர்களைக் காத்தேன், ஆனால் இப்போது நீர் அரசராக இருக்கும் போது நான் என்னைக் காத்துக்கொள்ள இன்னொருவரிடம் எப்படிச் சரணடைவேன்?

எப்போது இந்தப் பிரிவு நிரந்தமானதோ அப்போதே அது பயனற்றுதுமானது, அந்த அற்ப‌ வாழ்வை முடிக்க இந்த வயிற்றிலுள்ள உமது வாரிசு தடையாக உள்ளது, அதைப் பாதுக்காக்க வேண்டிய அவசியம் மட்டும் இல்லையெனில் இன்னொருவரை அண்டி வாழவேண்டிய வாழ்வினை மொத்தமாக முடித்திருப்பேன், உமது சந்திக்காகவே உயிர் வாழ நினைக்கின்றேன்.

அடுத்த ஜென்மத்தில் உம்மையே கணவராக பெறும்படியும் ஆனால் இப்படிப் பிரிவு நேராதபடியும் இருக்க நான் பஞ்சாக்னி நடுவில் இருந்து தவம் செய்வேன்.

உங்கள் வம்சத்தின் மூலவரான மனு தன் ஸ்ம்ருதியில் ஷத்ரிய தர்மம் குடிகளைக் காப்பதே எனப் போதிக்கின்றார், அதனால் உங்கள் மனைவி என்ற ஸ்தானம் இல்லாவிட்டாலும் குடிகளில் ஒருத்தி எனும் வகையில் என்னைக் காக்க வேண்டியது உங்கள் பொறுப்பல்லவா?” என்றாள்.

அவள் சொன்னதை மிகக் கவனமாக கேட்ட லட்சுமணன் அதனை அண்ணனிடம் தெரிவிப்பதாக சொல்லிவிட்டு கனத்த இதயத்துடன் திரும்பிப் பாராமலே சென்றான், அவன் கண்பார்வையில் மறையுமட்டும் காத்திருந்த சீதை அவன் மறைந்தபின் தன் மனதுயரையெல்லாம் கொட்டி அன்றில் பறவை போல் அலறி அழுதாள்.

அவளின் சோகமான அழுகையினைக் கேட்டு மயில்கள் நடனத்தை நிறுத்தின; குயில்கள் பாடலை நிறுத்தின; மான்கள் கடித்த புல் வாயோரம் சரிய கலங்கி நின்றன; மரங்கள் தாங்கள் புஷ்பித்த பூக்களை எல்லாம் உதிர்த்து நின்றது. அந்த வனமே அவளுக்காய்க் கலங்கிற்று.

முன்பு ஆண் அன்றில் பறவை ஒன்றை வேடன் அடித்து வீழ்த்த பெண் அன்றில் அலறக் கேட்டு வந்த வால்மீகி முனிவர் இப்போதும் அதே போல் தவறு நிகழ்ந்துவிட்டதோ, பெண் அன்றில் தனிமையாய் அழுகின்றதோ எனக் கலங்கி தான் தேடவந்த சமித்துக்களையும் தர்ப்பையினையும் மறந்து அக்குரல் கேட்ட திசை நோக்கிச் சென்றார்.

(தொடரும்..)

காளிதாசனின் ரகுவம்சம் : 63

வால்மீகி முனிவரைக் கண்ட சீதை பார்வையினை மறைக்கும் கண்ணீரைத் துடைத்தாள். மரியாதைக்குரிய பெரியவர் முன் அழுவதும் புலம்புவதும் முறையற்றது என்பதால் சாஸ்திரம் அறிந்த சீதை தன் துயரத்தை மறைத்து முனிவரை வணங்கினாள். அவள் கர்ப்பவதியாய் இருப்பதைக் கண்ட முனிவர் நன்மக்களை பெறும் பொருட்டு அவளை ஆசீர்வதித்து பின் கண்களைச் சற்று நேரம் மூடி திறந்தவர் சொன்னார்.

“சீதையே, பொய்யான குற்றசாட்டுக்காக உலக மாந்தரின் தூற்றலுக்கு அஞ்சியே உன்னை ராமன் துறந்தான் என்பதை என் ஞானதிருஷ்டியினால் அறிந்து கொண்டேன், நான் உன்மேலான குற்றசாட்டை ஏற்றுச் சொல்கின்றேன் எனக் கருதாதே. மாறாக, நீ என் மகள் போன்றவள் அதனால் தந்தை வீட்டுக்கு வந்ததாகக் கருதி என் ஆசிரமம் வர உனக்கு முழு உரிமை உண்டு.

ராமன் உலகுக்கே ஆபத்தானவனான ராவணனைச் சம்ஹாரம் செய்தவன், உண்மையான சொல்லை கொண்டிருப்பது, தற்பெருமை பேசாதிருப்பது எனப் பல நற்குணங்களைக் கொண்டவன். இக்குணங்களெல்லாம் எல்லோரையும் போல நானும் அவனிடம் பெரும் மரியாதை கொள்ள காரணமாயிருந்தது. ஆனால், உன் விஷயத்தில் ராமன் செய்திருக்கும் கொடுமையினை நினைக்கும்போது அந்த நற்குணமெல்லாம் மறைந்து அவன்மேல் கோபமே மிஞ்சுகின்றது.

ஒரு அரசன் குற்றவாளியினைந் தண்டிக்காமல் விட்டால் கூட பெரும் பாதகமில்லை, ஆனால் ஒரு நிரபராதியினைத் தண்டித்தால் அது அரசனுக்கான தகுதியே அன்று, ராமன் தன் தகுதிக்குக் குறைவான காரியத்தைச் செய்துவிட்டான்.

சீதையே நீ எல்லா வகையிலும் என் கருணைக்கு உரியவள், உன் மாமனார் தசரதன் மூவுலகிலும் கீர்த்திப் பெற்றவன். உன் தந்தை ஜனகன் சாதுக்களின் சம்சார பந்தத்தையே நீக்கும் பிரம்மஞானி, நீயோ பதிவிரதையில் முதன்மையானவள், எல்லா வகையிலும் என் இரக்கத்துகுரியவள் நீ. உன்னிடம் நான் கடுமை காட்டும்படி சிறிய குற்றம் ஏதும் கூட உன்னிடம் இல்லை.

மஹரிஷிகள் கூடியிருக்கும் என் ஆசிரமத்தில் துஷ்ட மிருகங்கள் கூட அடங்கி கிடக்கும், அதனால் குறைகளும் அச்சமுமில்லா இந்த ஆசிரமத்தில் நீ வசிக்கலாம், கர்ப்பவதியான உன் பிரசவமும் இங்கு நல்லபடியாக நடக்கும். உன் குழந்தைகளுக்குச் செய்யவேண்டிய ஜாதககர்மா முதலியவனவும் இங்கு ஒன்று கூட குறைவில்லாமல் நடந்தேறும்.

இந்தத் தமஸா நதிக்கரை முழுக்க மஹரிஷிகளின் ஆசிரமமே அமைந்துள்ளது. அதனால் இது மிக்க அமைதியானது, மஹரிஷிகளின் ஸ்பரிசத்தால் இந்நதி எல்லாப் பாவங்களையும் துயரங்களையும் போக்கக் கூடியது, நீ இந்நதியில் நீராடி அதன் மணற்பாங்கான கரையில் உன் இஷ்ட தெய்வத்தை வேண்டி ஆராதித்து வரலாம். அது உன் மனதினைத் தெளிவடையச் செய்து அமைதியினை உண்டாக்கும்.

இந்த ஆசிரமத்தின் ரிஷிபெண்கள் அந்தந்த பருவத்தின் கனிகளை, புஷ்பங்களை, உணவு வகைகளை உனக்குத் தருவார்கள், அவர்களின் அழகு நிறைந்த இனிமையான சொற்களால் நீ துயரத்தைக் கடந்து வருவாய்.

என் மகளே, உன் சக்திக்கு உட்பட்டு இங்குள்ள இளம் மரகன்றுகளுக்கு நீர்விடுவாயாக. அதனை உனக்கான பணியாக நான் சொல்லவில்லை. மாறாக அவற்றுக்கு நீ நீருற்றி வளர்க்கும்போது உன்னில் தாயன்பு பெருகும். அதை நீ உணர்வாய், அது உன் குழந்தைகள் வரும்போது அவர்கள்மேல் இன்னும் இன்னும் பெருகும்” என்றார்.

வால்மீகி முனிவர் தான் செய்யும் உதவியினை ஏற்றுக்கொண்ட சீதையினை அழைத்துத் தன் ஆசிரமத்தில் நுழைந்தார், அது அந்திமாலை என்பதால் மான்கள்
யாகசாலை அருகே படுத்திருந்தன. எங்கும் அமைதி நிலவிற்று.

அவளோ துக்கத்தினால் நிரம்பியபடி ஆசிரமத்தினுள் செல்ல அங்கிருக்கும் பெண்களோ மிகுந்த மகிழ்ச்சியுடன் அவளை வரவேற்றனர், தேய்பிறையில் தன் 15 கலைகளும் கரைந்த சந்திரன் தான் இனி வளர அமாவாசைக்குள் சக்திபெற ஒடுங்குவது போல் அந்த ஆசிரமத்துக்குள் சென்றாள்.

அந்தத் தபோவன பெண்கள் அவளை அன்புடன் அழைத்துச் சென்று அவளுக்கான குடிலைக் காட்டினார்கள். அங்கு மான் தோல் பரப்பப்பட்ட படுக்கை இருந்தது. அது மாலையானதால் இக்குணம் எனும் மரத்தின் நறுமணமிக்க எண்ணெயின் தீபமும் இருந்தது.

சீதை அந்த ஆசிரமத்தில் தன் விதியினை ஏற்றுக்கொண்டு வாழத் துவங்கினாள், தமஸா நதியில் நீராடி மரவுரி தரித்துத் தவகோலத்தில் நின்ற அவள் கனிகள் முதலியவற்றை ஆகாரமாக்கித் தன் கணவனின் சந்ததியினைக் காப்பதற்காக உடலைக் காத்து வந்தாள்.

அயோத்தி திரும்பிய லட்சுமணன் ஒருவேளை ராமனுக்கு மனதில் இந்நேரம் இரக்கம் வந்திருக்குமோ? என நினைத்த லட்சுமணன், ராமனின் ஆணைக்கேற்ப தான் சீதையினைக் கொண்டு வனத்தில் விட்டதையும் அங்குச் சீதை புலம்பிச் சொன்ன வார்த்தைகளையும் ராமனிடம் சொல்லி அவனிடமிருந்து ஒரு நல்ல வார்த்தை வந்துவிடாதா என ஏங்கி நின்றான்.

லட்சுமணன் இப்படிச் சொன்னதும் பனிக்காலத்தில் சந்திரன் நீர்த்துளிகளை பெருக்குவது போல ராமனின் கண்களில் நீர் பெருகிற்று. அவன் சொன்னான், “தம்பி, ஒரு அரசனாக பழிக்கு அஞ்சி அவளை அயோத்தியினை விட்டு அனுப்பினேனேயன்றி என் நெஞ்சத்தைவிட்டு அன்று, அங்கிருந்து அவளை யாரால் அகற்றமுடியும்?”

லட்சுமணனிடம் அதற்குப் பதில் இல்லை, அவன் துக்கத்தில் மகிழ்வும், மகிழ்வில் துக்கமும் கொண்ட நிலையிலிருந்தான்.

ராமன் நல்ல அறிவும் தெளிவும் கொண்டவன் என்பதால் நால்வகை மக்களையும் காத்து ராஜ்ஜிய பரிபாலனத்தை முறையே செய்தான், சங்கு பூச்சியானது தன் ஓட்டுக்குள் மறைவதை போல அவன் தன் சோகத்தையெல்லாம் தனக்குள்ளே வைத்துக் கொண்டான்.

பதிவிரதையும் தன் ஒரே மனைவியுமான சீதையினைப் பிரிந்த ராமனின் நெஞ்சில் மிக்க மகிழ்ச்சியுடன் ராஜலட்சுமி ஒருத்தியே சக்களத்தி சண்டையின்றி அவன் மனதில் இருந்து முழு அன்பை பெற்றுவந்தாள். அதாவது ராமன் ராஜ்ஜிய நினைவு ஒன்றிலே ஆட்சி செய்து வந்தான்.

ராமன் ஒரு அரசன் என்பதால் நாட்டு நலனுக்காக யாகம் செய்யவேண்டியது கட்டாயமானது, ஆனால் மனைவி இல்லாமல் யாகம் செய்யங் கூடாது என்பதற்காக சீதையின் உருவை தங்கச் சிலையாக செய்து தன் அருகே வைத்து அவன் யாகம் செய்தான்.

சீதைமேல் தன் அண்ணன் கொண்ட அன்பினை எண்ணி லட்சுமணன் அழுதான். கழுகு தன் இணையினைத் தொலைவில் இருந்தாலும் உணரும் என்பது போல் சீதை ராமனின் இந்தச் செயலை கேள்விப்பட்டு அவன் தன்மேல் கொண்டிருக்கும் அன்பை எண்ணி மனம் தேறினாலும் தன் நிலை இப்படி ஆகிவிட்டதைக் கண்டு மழைக்காலத்திலும் கோடையிலும் பலவாறு உருமாறும் கங்கை போல் காணப்பட்டாள்.

(தொடரும்..)

காளிதாசனின் ரகுவம்சம் : 64

சீதையின் பிரிவுக்குப் பின் சமுத்திரத்தை மேகலையாக அணிந்த பூமி ஒன்றையே தன் துணையாகக் கொண்டு ஆட்சிபுரிந்தான், வேறு விவாஹம் என்பது அவன் சிந்தையில் கூட இல்லை.

அந்நேரம் யமுனா நதிக்கரையோரம் தபோவனம் கொண்டிருப்போரும் லவணன் எனும் அசுரனால் பாதிக்கபட்டவர்களுமான ரிஷிகள் தங்கள் துன்பத்தை நீக்கிக் கொள்ள ராமனிடம் சரணடைய வந்தனர், அந்த லவணன் ராவணன் வம்சத்தவன் கடும் தவத்தால் சிவனிடமிருது பெற்ற சூலாயுதம் ஒன்றைக் கொண்டு எல்லோரையும் அச்சுறுத்தி மிரட்டிக் கொண்டிருந்தான்.

ராமன் தங்களுக்குக் காவலாக இருப்பதால் ரிஷிகள் தங்கள் ஆயுதமான சாபத்தை அங்குப் பிரயோகிக்கவில்லை, காரணம் ரிஷிகளின் சாபம் அவர்களின் தவவலிமையினைக் குறைக்கும், அதை நிரப்ப அவர்கள் மீண்டும் கடும் தவத்தில் இறங்கவேண்டும். யாருமே தங்களுக்கு இல்லாக் காலம் சாபத்தை கையில் எடுக்கும் முனிவர்கள் இப்போது ராமன் இருப்பதால் தாங்கள் லவணனை வீணாக‌ தண்டியாது அவனைப் பற்றி ராமனிடம் சொல்ல வந்தார்கள்.

தன் பிறப்பு தர்மத்தை நிலைநாட்ட என்பதால் ராமனும் அவர்கள் துன்பத்தைக் களைந்து தருவதாக வாக்குறுதி தந்தான், முனிவர்களோ அந்த லவணனைச் சூலத்துடன் இருக்கும்போது கொல்லமுடியாது என்பதைச் சொல்லி சூலமில்லா நேரம் அவனை வதைக்கும் வழிமுறைகளையும் சொன்னார்கள்.

ராமன் அவர்களுடன் செல்ல சத்ருக்கனைப் பணித்தான், அதுவரை எந்தச் சத்ருவினையும் கொல்லாத அவனுக்குச் சத்ருக்கன் எனும் பெயர் இனியாவது பொருந்தட்டும் என ராமன் முடிவு செய்திருந்தான் போலிருந்தது.

சத்ரு எனும் எதிரிகளை தவிக்க செய்பவர்கள் என்பது பொதுவிதி அந்த விதிக்கு விலக்கு பெறுவது போல் இருந்த சத்ருக்கனை இங்கே களமிறக்குவதன் மூலம் அவன் சத்ரிய பொதுவிதிக்கு கட்டுப்பட்டவனே என உலகிற்கு காட்ட ராமன் விரும்பினான்.

தமையன் சொல்லுக்கு மறுசொல் சொல்லாத சத்ருக்கன் ராமனிடம் ஆசீர்வாதம் பெற்றபின் ரதமேறி முனிவர்களின் தபோ வனத்துக்கு மலர்கள் நிறைந்த மணமிக்க சோலைகள் வழியாக அதன் அழகை கவனித்தபடியே சென்றான், ராமன் சத்ருக்கனுக்குத் துணையாக ஒரு சேனையினை அவன் பின்னால் அனுப்பியிருந்தாலும் அதன் உதவி சத்ருக்கனுக்கு அவசியமாக இல்லாதபடி அவன் தனித்து நின்றே வெல்லும் ஆற்றலைக் கொண்டிருந்தான்.

முனிவர்கள் சத்ருக்கனுக்கு வழிகாட்டியபடி முன் சென்றனர், பொலிவு மிக்க சத்ருக்கன் தேரில் அவர்கள் பின்னால் சென்றது வாலகில்யர்கள் எனும் ரிஷிகள் முன்செல்ல சூரியனின் தேர் நகரும் காட்சிபோலிருந்தது.

முனிவர்கள் தபோவனம் தொலைவில் இருந்ததால் வழியில் இருந்த வால்மீகி ஆசிரமத்தில் ஓர் இரவு தங்கிச் செல்ல விரும்பினான், அதனால் அவன் தேர் ஆசிரம வாசலை அடைந்தபோது அங்கிருக்கும் மான்கள் தலையினைத் தூக்கி அவனைக் கண்டன‌.

வால்மீகி முனிவர் தன் தவவலிமையினால் கிடைத்த சிறந்த பொருட்களைக் கொண்டு இளவரசனான சத்ருக்கனையும் அவனைச் சார்ந்தவர்களையும் உபசரித்தார், அதனால் மிக்க திருப்தி அடைந்த சத்ருக்கன் நல்ல ஓய்வினை அந்த இரவில் பெற்றான்.

அந்நேரமே பூமியானது செல்வத்தையும் சேனையினையும் அரசனுக்குக் கொடுப்பது போல இரு குழந்தைகளை ராமனுக்குப் பெற்றுக் கொடுத்தாள், சத்ருக்கன் தன் அண்ணனுக்கு இரு மகன்கள் பிறந்தார்கள் எனும் செய்திக் கேட்டு மகிழ்ந்தவனாய் வால்மீகியினைக் கையெடுத்து வணங்கி மகிழ்ந்து காலையில் விடைபெற்றான்.

சத்ருக்கன் அந்த லவணன் வாழும் மதுபக்னம் எனும் வனத்தின் பக்கம் சென்றான், அங்கே கும்பிஹி எனும் அரக்கியின் மகனான லவணன் கப்பம் பெற்றுவரும் அரசன் போல காட்டுக்குள் இருந்து விலங்குகளின் குவியலைச் சுமந்து வந்தான்.

பச்சை மாமிசத்தை தின்னும் பரிவாரங்களைக் கொண்ட‌ அவனின் புகைபோன்ற கருஞ்சிகப்பு நிறமும், உடலில் வந்த மாம்ச கொழுப்பின் துர்நாற்றமும், அக்னி ஜூவாலை போன்ற செம்பட்டை முடியும் கொண்ட கொடிய தோற்றமானது சுடுகாட்டில் பிணத்தோடு எரியும் சிதையில் எழும் நெருப்பின் அகோர தோற்றம் போலிருந்தது, அவ்வளவு அச்சமும் அருவருப்பும் கொண்டவனாக இருந்தான் லவணன்.

எதிரி பலமற்ற நிலையில் இருக்கும் போது தாக்கினால் வெற்றி என்பதை உணர்ந்திருந்த சத்ருக்கன் சூலாயுதமின்றி எதிர் நின்ற லவணனை உடனே எதிர்த்தான்.

ஆவேசமான லவணன் “இன்று எனக்குக் காட்டு உணவு போதாது என நாட்டு உணவான உன்னை பிரம்மன் அனுப்பியிருக்கின்றான்” எனச் சொன்னபடி அருகிருந்த பெரிய மரத்தை கோரைபுல்லை போல எளிதாக பிடுங்கி சத்ருகன் மேல் வீசினான்.

தன்மேல் வீசபட்ட அந்தப் பெரும் மரத்தை தனது அம்புகளால் வெட்டிப்போட்டான் சத்ருக்கன், அவனின் பாணங்களால் அம்மரத்தின் பூக்களும் துண்டிக்கப்பட்டதால் அவற்றின் மகரந்தபொடிகள் அவன் மேல் படர்ந்து ஒட்டிக்கொண்டன‌.

அம்மரம் சத்ருகனுக்குத் தீங்கிழைக்காததால் கோபமடைந்த லவணன் யமனின் தோள்கள் தனித்துக் கிடப்பது போலிருந்த பெரிய கரும்பாறையினை தூக்கி அவன் மேல் எறிந்தான்.

மலைகளின் சிறகுகளை வெட்டிய இந்திரனைத் தெய்வமாக கொண்ட அஸ்திரம் ஒன்றை அந்த பாறையினை நோக்கி சத்ருக்கன் ஏவிவிட அது பாறையினை மிக மிக மென்மையான மணல்பொடியாக்கி அப்படியே பனிபோல் விழவைத்தது.

அதைக் கண்ட அரக்கன் தன் வலது கையினை ஓங்கிக்கொண்டு சத்ருக்கனை நோக்கி ஓடிவந்தான். அது பெரிய மலையின் உச்சியில் தனித்த பனைமரம் காற்றில் அசைவது போலிருந்தது.

தன்னை நோக்கி ஆவேசமாய் வந்த லவணனை நோக்கி நாராயணனின் அம்சமான கனை ஒன்றை ஏவினான் சத்ருக்கன். அந்தக் கணையால் நெஞ்சம் பிளக்கப்பட்ட லவணன் பெரிய சத்தத்துடன் கீழே சாய்ந்தான், நடந்த மோதலை நடுங்கும் அச்சத்துடன் கண்டுகொண்டிருந்த ரிஷிகள் அப்போது அச்சம் நீங்கினார்கள்.

அப்போது சத்ருக்கன் மேல் தேவர்கள் பூமாரி பொழிய லவணன் உடல் மேல் பறவைகள் வந்து விழுந்து கொத்தத் துவங்கின‌.

லவணனைக் கொன்றதால் இந்திரஜித்தனை வென்ற லட்சுமணனுக்குத் தான் சமமான சகோதரன் எனக் கருதி கொண்டான் சத்ருக்கன், மகரிஷிகள் அவனின் பராக்கிரமத்தை புகழ்ந்தபோது வீரத்தால் தலைநிமிர வேண்டியவன் ராமனின் கீர்த்தி முன் இது சாதாரணம் என்பதுபோல் தலைகுனிந்து கொண்டான், அந்தப் பணிவு அவனுக்கு மிகவும் அழகைக் கொடுத்தது.

ஆண்மையினையே தன் அணிகலானக கொண்ட சத்ருக்கன் உலக வஸ்துகள் மேல் பெரிய பற்றுக் கொண்டிருக்கவில்லை, அவன் தனக்காக அல்லாமல் உலக நலனுக்காக அந்த‌ யமுனா நதிகரையில் மதுரா நகரத்தை நிர்மாணம் செய்தான்.

அந்த மதுரா நகரம் சிறந்த மன்னனால் ஆளப்படுகின்றது என்பதை அதன் செல்வம் காட்டிற்று, தேவலோகத்தவர் வந்து குடியேறி வாழ்வது போல் அது சொர்க்கம் போல் மின்னிற்று.

சத்ருக்கன் அந்நகரை அழகுற ஆட்சி செய்து வந்தான், தன் மாளிகையின் மாடத்தில் இருந்து கரிய யமுனைமேல் பறக்கும் பொன்னிறமான சக்கரவாக பறவைகளைக் கண்டு மகிழ்ந்தான், பூமிபெண்ணுக்கு அழகிய கருங்கூந்தல் போல் யமுனாநதி விளங்க அதன்மேல் பொன் அணிகலன் போல சக்கரவாக பறவைகள் மினுமினுத்துக் கொண்டிருந்தன‌.

அதே நேரம் அங்கே தன் ஆசிரமத்தில் பிறந்தவுடன் தர்ப்த்தினால் துடைக்கப்பட்ட குழந்தைக்கு குசன் என்றும், பசுவின் வால்மயிரினால் துடைக்கப்பட்ட குழந்தைக்கு லவன் என்றும் அவர் பெயரிட்டார்.

தசரதனுக்கும் ஜனகனுக்கும் நெருக்கமானவரும் சாஸ்திர வேத மந்திரங்கள் அறிந்தவருமான வால்மீகி அவர்கள் இருவர்மேல் கொண்ட அன்பினால் சீதையின் இரு மைந்தர்களுக்கும் சாஸ்திரப்படி ஒரு குறையின்றி ஜாதககர்மாவினைச் செய்துவைத்தார்.

குழந்தைகளின் அங்கம் வேதங்களுடன் வளரும்படி அவர்களுக்கு வேதமும் சாஸ்திரமும் போதித்தார் முனிவர், அப்படியே அவர்களுக்குத் தான் இயற்றிய ராமகாதையினைப் பாடும்படி செய்தார், குழந்தைகள் பாலபருவத்தை அடைந்தபோது ராமகாதையினை இனிதே பாடினார்கள், இதனால் ராமனின் பிரிவால் பெரும் துயர் கொண்டிருந்த சீதையின் துன்பம் குறைந்தது.

அதே நேரம் ராமனின் சகோதரர்கள் மூவருக்கும் முறையே இரட்டை குழந்தைகள் பிறந்திருந்தன, அங்கும் சகோதரர்களுக்கு இடையேயான ஒற்றுமை நீடித்தது.

(தொடரும்..)

காளிதாசனின் ரகுவம்சம் : 65

மூன்று புண்ணிய அக்னிகளைப் போன்ற ராமனின் மூன்று சகோதர்களும் ராமனைப் போலவே இரட்டை குழந்தைகளைப் பெற்று வளர்த்தார்கள். பரதன் மனைவி மாண்டவி தஷ்கன், புஷ்கலன் எனும் இரு மகன்களைப் பெற்றாள். லட்சுமணன் மனைவி ஊர்மிளை அங்கதன் சந்திரகேது எனும் இரு மகன்களைப் பெற்றாள். சத்ருகன் மனைவி ஸ்ருதகீர்த்தி சத்ருகாதி சுபாஹூ எனும் இரு மகன்களைப் பெற்றார். குழந்தைகள் இனிதே வளர்ந்தார்கள்.

தன் பிரியத்துகுரிய அண்ணனான ராமனை இனியும் பிரிந்திருக்க முடியாது என ஏங்கிய சத்ருகன் தான் உருவாக்கிய மதுரா, விதிசை எனும் இரு நகரங்களையும் தன் மகன்களிடமே ஒப்படைத்துவிட்டு நல்ல ஆலோசகர்களை நியமித்துவிட்டு ராமன் இருக்கும் அயோத்திக்குத் திரும்பினான்.

அவன் செல்லும் வழியில் வால்மீகியின் ஆசிரமம் இருந்தாலும் தன்னை உபசரிப்பதற்காக முனிவர் தன் தவ வலிமையினை வீணாக்குவர் எனச் சிந்தித்தவன் அந்த ஆசிரமம் பக்கம் செல்லாமல் அயோத்திக்கு வந்து சேர்ந்தான்.

லவன் எனும் அசுரனை அழித்தவனும் நீண்டகாலம் அயோத்தியினைப் பிரிந்தவனுமான அந்தச் சத்ருகன் திரும்பி நகருக்குள் வரும்போது மக்கள் அவனைப் பெருமையுடன் பார்த்து உற்சாகமாக வரவேற்றனர், அயோத்தி அவனுக்காய்ப் புது அலங்காரம் பெற்றிருந்தது.

மந்திரிகளுடன் அவையில் இருந்த ராமன் தன் தம்பியினைக் கண்டதும் காலநேமி எனும் அரக்கனை அழித்ததால் புகழடைந்த‌ விஷ்ணுவின் அவதாரமும் தன் தம்பியுமான உபேந்திரனை இந்திரன் கொண்டாடியது போல் சத்ருகனைக் கொண்டாடினான்.

ராமனிடம் சத்ருகன் நடந்த எல்லாவற்றையும் சொன்னான். ஆனால்! வால்மீகி முனிவர் இட்ட கட்டளைக்காக சீதை பற்றியும் அவளுக்கு இரு மகன்கள் பிறந்தது பற்றியும் அவன் சொல்லவில்லை.

சில நாட்கள் கழித்து அரண்மனை வாசலில் ஒரு அந்தணன் இறந்துவிட்ட தன் பாலகனைத் தோளில் போட்டு வந்து அரண்மனை படியில் கிடத்திப் புலம்பினான்.

“ஓ பூமியே தசரதனை நீ இழந்தது ராமனின் ஆட்சியில் சிக்கிவிட்டாயே, உன் நிலையினை நினைந்து நான் கலங்குகின்றேன்” என்றான்.

குடிகளுக்க்கு வரும் துன்பம் அரசனின் தவறால் வருவதே என்பதை அறிந்த ராமன் நடந்த துயரைக் கேட்டு வெட்கமுற்றான், அவன் அந்த அந்தணரைச் சற்றுப் பொறுக்கச் சொல்லிவிட்டு யமனிடம் இருந்து அந்தப் பாலகனின் உயிரை மீட்கும் பொருட்டு அவனிடம் செல்லத் தன் புஷ்பக விமானத்தை வரவழைக்க மனதால் நினைத்தான்.

அந்த விமானம் வந்ததும் தன் வில்லோடு அவர் அதில் ஏறி அமர்ந்து புறப்பட்டபோது உருவமில்லா குரலான அசரீரீ ஒன்று ஒலித்தது.

“அரசே, உமது குடிமக்களுக்குள் ஒரு அதர்மம் நடந்து வருகின்றது, அதை முதலில் தேடி அடக்கினால் உமது எண்ணம் ஈடேறும் உமது புகழும் நிலைக்கும்” என்றது.

அந்தக் குரலை நம்பிய ராமன் அது என்ன அதர்மம் என்பதை அறிய தன் விமானத்தை எல்லாப் பக்கமும் செலுத்தித் தேடினான், அவன் விமானம் வேகமாய் சென்றதால் அந்த விமானத்தின் கொடி அசைவற்று அப்படியே நிற்பது போலிருந்தது.

அப்படிச் செல்லும் ராமன் ஒரு விசித்திர காட்சியினைக் கண்டான், கீழிருந்து எழும் புகையால் சிவந்த கண்களைக் கொண்ட ‌ ஒருவன் மரத்தில் கால்களை பற்றியபடி தலைகீழாக தொங்கி யாகம் செய்துகொண்டிருந்தான்.

அரசனாகிய ராமன் அவனிடம் விசாரிக்கும் போது அவன் தான் நான்காம் வர்ணத்தனாகிய சம்புகன் எனவும், தான் பெரும் சக்தி பெறவும் அதனால் பெருவாழ்வு வாழவும் இந்த யாகத்தை செய்வதாக சொன்னான்.

பொதுநலம் ஏதுமின்றி தனக்காக அவன் செய்யும் தவம் பின்னாளில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதாலும். பொறுப்பும் நற்குணமும் இல்லாத அவனுக்குப் பெரும் சக்தி கிடைத்தால் குடிகளுக்கு ஆபத்து என்பதாலும் ராமன் அவனைக் கொல்ல முடிவு செய்து அம்பைத் தொடுத்தான்.

யாக நெருப்பால் கருகியிருந்த தாடியுடைய அவன் முகம் பனியினால் சுருங்கிய தாமரை மடல்கள் போல் இருந்தது. அதனைத் தன் அம்பினால் வெட்டித் தள்ளினான் ராமன், நீண்ட காலமாக கடுந்தவம் செய்த அந்தச் சம்புகன் ராமனின் கரத்தால் கொல்லப்பட்டதால் நல்லோர் வசிக்கும் சொர்க்கத்தை அடைந்தான்.

மேற்கொண்டு பயணித்த ராமன் வசந்த காலம் முழு நிலவினை அடைவதை போல எதிரே வந்த அகஸ்திய முனிவரை அடைந்தான்.

அகஸ்திய முனி ராமனைக் கண்டு மகிழ்ந்து அவனுக்கு அழகியதோர் ஆபரணத்தை அருளினார், அது முன்பு சமுத்திர ராஜன் தன்னைக் காத்த அகத்தியருக்கு கொடுத்தப் பொருள் போலிருந்தது.

அந்த ஆபரணத்தை சீதையினைத் தழுவாத தன் கரங்களில் அழகுக்காக அல்லாமல் முனிவரின் சொல்லுக்காக அணிந்து அகத்தியரின் ஆசிபெற்ற ராமன் தன் அரண்மனை திரும்பினான், சம்புகனை அவன் வதைத்த காரணத்தால் அவனின் குடிசெயல் வகை சரியானது, இதனால் யமன் அந்த அந்தணனின் மகன் உயிரை விடுவிக்க அவனும் உயிர்ப்பெற்று எழுந்தான்.

புத்திரனை உயிரோடு கண்ட அந்தணன் மனம் மகிழ்ந்து முன்பு வசைபாடிய வாயினால் இப்போது ராமனைப் புகழ்ந்து தொழுது நன்றி சொல்லி மகனோடு நடந்து சென்றான்.

ராமன் தன் முன்னோர்கள் வழமைப்படி அஸ்வமேத யாகம் செய்யத் தயாரானான். அது அவன் கடமையில் ஒன்றாய் இருந்தது.

(தொடரும்..)