முருகப்பெருமான் ஆலயங்கள் : சொர்ணமலை முருகன் ஆலயம் கோவில்பட்டி.

முருகப்பெருமான் ஆலயங்கள் : சொர்ணமலை முருகன் ஆலயம் கோவில்பட்டி.

தென்முனையில் இருக்கும் முருகப்பெருமான் ஆலயங்களில் முக்கியமானது சொர்ணமலை அல்லது கதிரேசன் மலை எனும் முருகப்பெருமான் ஆலயம் இதன் வரலாறு சுவாரஸ்யமானது.

இந்த முருகப்பெருமானின் வரலாறு இலங்கை கதிர்காமம் ஆலயத்தில் இருந்து துவங்குகின்றது. பொதுவாக தென்முனை மக்களுக்கு அன்றைய பிரதான தொழில்களில் ஒன்று வணிகம் , அதிக மழைவளம் ஆறுவளம் இல்லா அப்பூமியில் நாயக்கர் காலத்தில் உருவான சாலை வசதிகளும் இதர வசதிகளும் வியாபாரத்தைப் பெருக்கின‌.

சாத்தூர், சிவகாசி போன்றவை தூத்துக்குடி, நாகர்கோவில் கோட்டார் போன்ற இடங்களுக்குக்கான வணிக சந்திப்புக்களாக மாறின, கோவில்பட்டியும் அந்த வரிசையில் வந்தது.

இங்குள்ள வணிகர்கள் தூத்துக்குடி வழியாக இலங்கைக்குச் சென்று அங்கு வணிகம் செய்வது வழமை, இலங்கையின் கொழும்பு அன்று மிகப்பெரிய துறைமுகம் என்பதால் கிழக்காசியாவுக்கு செல்லும் எல்லாக் கப்பலும் தரிக்குமிடம் என்பதால் இன்றைய சிங்கப்பூர் துறைமுகத்தின் இடத்தைப் பிடித்திருந்தது.

அப்படிச் சென்ற தென்னக வியாபாரிகளில் சுப்பிரமணிய செட்டியார் என்பவரும் ஒருவர்.
இவர் மிகசிறந்த முருகபக்தர், இவர் இலங்கை சென்றதும் செய்யும் முதல் காரியம் கதிர்காமம் சென்று முருகனை வழிபடுவது, அங்கிருக்கும் போதும் அவர் அதையே அடிக்கடி செய்வார், விடைபெறும் போதும் அந்த முருகனை வணங்கியே விடைபெறுவார்.

அவரின் வாழ்வில் கதிர்காமம் ஒரு அங்கமாயிற்று , கதிர்காம முருகனின் தீவிர பக்தனாக அவர் மாறிப்போனார், நெடுங்காலம் இலங்கையில் அவர் வியாபாரம் செய்ததால் அவருக்கும் கதிகாமத்துக்குமான பந்தம் பிரிக்க முடியாததாயிற்று.

காலங்கள் ஓடின. எல்லாவற்றுக்கும் ஒரு காலம் உண்டு, அது முடியவும் ஒரு காலம் உண்டு என்பதால் அவர் இலங்கையில் இருந்து சொந்த மண்ணுக்கு திரும்பும் காலமும் வந்தது, அவர் முருகப்பெருமானைக் கதிகாமத்தில் பிரியமுடியாமல் கலங்கிப்போனார், கதிர்காகமத்தை விட்டுச் செல்ல மனமில்லாமல் துடித்துப் போனார்.

ஆனால், அன்றைய கால கட்டங்கள் அவரின் தொழில் என எல்லாமே அவர் அங்குத் தங்கமுடியா அளவு இருந்தன, இதனால் நொந்துபோன மனதுடன் முருகனைப் பிரிந்து கப்பல் ஏறும் நாளை நெருங்கினார்.

நாள் நெருங்க நெருங்க அந்தக் கதிர்காமத்திலே தங்கிக் கொண்டார், சில நாட்களில் நிரந்தரமாக இலங்கையினை நீங்கும் நேரத்திலும் தன் ஆட்களிடம் எல்லாப் பணியும் ஒப்படைத்துவிட்டு கதிர்காம ஆலயத்தின் வாசலிலே கலங்கியபடி அமர்ந்திருந்தார்.

கன்று தாயினை விட்டுப் பிரிவதுபோல் அவரின் பெரும் கலக்கம் அவரில் இருந்தது, நெஞ்சத்தின் பெரும் துயரம் கண்களில் நீராய் வடிந்தது, கதிர்காமத்தில் முருகனை பிரிவதை எண்ணி கலங்கியே அழுது புலம்பிய அவரின் கனவில் வந்த முருகப்பெருமான்,”பக்தனே, நாம் எப்போதும் உன்னோடே இருந்து வருவேன், இந்தக் கதிர்காமத்தைப் பிரிவதால் கலங்காதே, இங்கிருந்து பிடிமண் எடுத்துச் சென்று உன் இடத்திலே எனக்கொரு கோவில் கட்டு, நாம் அங்கே குடியேறி அந்த வேலில் இருந்து அருள்பாலிப்போம்” எனத் திருவுளம் பற்றினார்.

மிகுந்த சந்தோஷத்துடனும் மகிச்சியுடனும் எழும்பிய சுப்பிரமணிய செட்டியார், மிகுந்த ஆச்சாரத்துடனும் பக்தியுடனும் சிலிர்ப்புடனும் பூஜைகள் பல செய்து கதிர்காம ஆலயத்தில் இருந்து ஆறுபிடி மண் அள்ளி தன் பையிலிட்டு அதைக் கதிர்காம முருகன் முன் வைத்து வணங்கி பூஜித்து தன்னோடு எடுத்து வந்தார்.

தான் பெற்ற செல்வங்களில் பெரும் செல்வமாக அதைக் கருதியவர் அந்த மண்ணை அடியில் இட்டு கோவில்பட்டி அருகே அத்தை கொண்டான் எனும் ஊரில் முருகப்பெருமானுக்கு ஆலயம் அமைக்க முடிவு செய்தார் சுப்பிரமணி செட்டியார். அந்நேரம் முருகபெருமான் அருளால் ஒரு சித்தர் அந்த இடத்துக்கு வந்தார்.

அவர் யார்? எங்கிருந்து வந்தார் எனத் தெரியாது. ஆனால், சரியான நேரத்தில் வந்த அவர்தான் ஆலயத்தை ஊரின் குபேரமூலையில் இருந்த சிறிய மலைமேல் கட்டச்சொல்லி இதுதான் முருகப்பெருமான் உத்தரவு எனசா சொல்ல்விட்டு தன் போக்கில் சென்றுவிட்டார்.

செட்டியாரும் சித்தரின் குரலே முருகனின் குரல் என உணர்ந்து அந்த குன்றின் மேல் ஆலயம் எழுப்பினார், அந்தக் கதிர்காமத்தில் இருந்து கொண்டுவந்த பிடிமண்ணை இட்டு கதிர்காமத்தில் இருப்பதைப் போலவே வேல் ஒன்றை அதுவும். வஜ்ரவடிவேல் ஒன்றைச் செம்பினால் செய்து ஐந்து அடி உயர அந்தவேலை நிறுத்திப் பூஜைகளைத் தொடங்கினார்.

அதுதான் இந்த ஆலயமாயிற்று. இன்றுவரை இங்கு கதிர்காமம் போல் வேல் வழிபாடுதான் உண்டு, இந்த வேல் வஜ்ரவேல் என்பதால் ஞானம் தரும், பகை அழிக்கும், இந்திரனைப்போல் வாழும் செல்வத்தையும் தரும்.

இந்த ஆலயம் 100 ஆண்டுக்கு முன் இப்படிச் செட்டியாரால் ஸ்தாபிக்கபட்டது எனினும் அதற்கு முன்பே அம்மலையிலும் தன் குகைகளிலும் சித்தர்கள் பலர் வாழ்ந்ததும் அங்கே முருகவழிபாடு இருந்ததும் வரலாறு, காலத்தால் மறைந்துபோன அவ்வழிபாட்டை முருகப்பெருமான் தன் பக்தன் மூலம் புதுபித்துக் கொண்டார். வேல் நட்டு ஆலயம் எழுப்பிக் கொண்டார்.

கோவில்பட்டி பக்கம் இந்த ஆலய புகழ் மெல்ல மெல்ல வளர்ந்தது, பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. முருகப்பெருமானின் அருள் மிகுந்து வழிகாட்டியதால் வழிபட்ட மக்கள் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வந்தது.

தன் வாழ்நாளில் பெரும் திருப்பணி செய்த செட்டியார் நிறைந்த மனதுடன் முருகனுடன் கரைந்துபோனார், அவருக்குப் பின் அமாவாசை சுவாமிகள் திருப்பணி செய்த இந்த ஆலயம் பின் தமிழக அரசின் வசம்சென்றது, இன்று பெரும் அருளுடனும் தனி அடையாளத்துடனும் கோவில்பட்டி பக்கம் முருகனுக்கான தனிப்பெரும் தலமாக நிற்கின்றது.

திருப்பரங்குன்றத்தில் மூலவரான முருகப்பெருமான் குடவரையில் இருப்பதால், அவருக்குரிய அபிஷேகங்கள் அனைத்தும் அங்கிருக்கும் வேலுக்கே நடைபெறுகின்றன. பழமுதிர்சோலையிலும் இது உண்டு, கன்னியாகுமரி முருகன் குன்றத்திலும் வேல் வழிபாடே பிரசித்தி.

இந்த ஆதி முருகப்பெருமான் வழிபாடு நடக்கும் சில ஆலயங்களில் இதுவும் ஒன்று.

இங்கு கருவறையில் மூலவராக முருகப்பெருமானின் கதிர்வேல் எனும் திருக்கைவேல் அதாவது வஜ்ரவேல் அமைந்துள்ளது. அப்படியே மாணிக்க விநாயகர், பழனி ஆண்டவர், பைரவர் சந்நிதிகளும் உள்ளன.

கந்தசஷ்டியில் இத்தலம் வந்து சத்ரு சம்கார வேல் பதிகம், வேல்மாறல் ஆறு முறை பாராயணம் செய்து மூலவர் கதிர்வேலை வழிபாடு செய்தால் எல்லாவித தொல்லையும் அகலும் என்பது பக்தர்களின் சாட்சி

கந்த சஷ்டி என்றல்ல எந்த சஷ்டி காலத்திலும் இங்கு வந்துவேலுக்குப் பூஜை செய்து அந்தப் பாடல்களைப் பாடினால் நிச்சயம் பலன் உண்டு.

இந்த ஆலயம் செய்வினை கோளாறுகள் பில்லி சூனிய கட்டுகளை அகற்றும், ஞானத்தை அறிவினைத் தரும், நல்ல ஆரோக்கியம் தரும்.

அப்படியே தொழில் முன்னேற்றமும் தனமும் நிம்மதியும் அள்ளித் தரும் ஆலயம் இது, இந்த ஆலயம் அமைந்தபின் அப்பக்கம் வியாபாரிகளும் வியாபாரங்களும் பெரிய அளவில் வளர்ந்தது உலகறிந்தது, இங்கு வந்து வேண்டிய எந்த வியாபாரியும் நஷ்டமடைந்ததில்லை என்பதே இங்குள்ள வேலவன் பெருமைக்குப் பெரிய சாட்சி.

இங்கு வழிபடுவது இலங்கை கதிர்காமம் முருகன் ஆலயத்தில் வழிபடுவதற்கு நிகரானது என்பதால் அங்குச் செல்லமுடியாப் பக்தர்கள் இங்கு வழிபட்டு வரம்பெறுவது வழமையான காரியம்.

கிருத்திகை நட்சத்திர நாளன்று இந்தக் கோவிலில் உள்ள வேலுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அன்னப் பிரசாதத்தை மகப்பேறுக்காக ஏங்கும் பெண்கள் உட்கொண்டு, குழந்தை வரம் பெறுகிறார்கள்.

இந்த மலையினைச் சுற்றி பௌர்ணமி அன்று கிரிவலமும் நடப்பதுண்டு, மலையின் அடிவாரத்தில் இருக்கும் ஒளிகுகையில் சித்தர்களின் நடமாட்டம் இப்போதும் உண்டு.

அருகிருக்கும் குரு மலையில் இருந்து மூலிகை காற்று வருவதால் இங்கு ஆரோக்கியம் மேம்படும், இங்குக் கார்த்திகை நட்சத்திர நாட்களில் வேல் வடிவமான மூலவருக்கு ராஜ அலங்காரம், அர்த்த நாரீஸ்வரர் அலங்காரம், சோட்டானிக்கரை பகவதி அம்மன் அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.

கோவில்பட்டி பக்கம் செல்லும்போது இந்தச் சொர்ணமலை முருகனைக் காண தவறாதீர்கள், அங்குச் சென்று நெய் தீபமிட்டு அந்த வேலுக்கு மாலை சாற்றி வழிபடுங்கள், கதிர்காமத்தில் அருளும் எல்லா அருளையும் முருகப்பெருமான் இங்கு அருள்வார். அந்நொடியில் உங்கள் வாழ்வு முழுக்க மாறும். இது சத்தியம்.