சரோஜினி நாயுடு

இந்திய மகளிர் தினம்

அன்று இந்திய சமூகத்தில் பெண்கள் நிலை அடக்கித்தான் வைக்கபட்டிருந்தது, மிக சில பெண்களே அந்த காலகட்டத்திலும் தங்கள் எதிர்காலம் , சமூகம் போன்ற கட்டுபாடுகளை தகர்த்து பிரகாசித்தனர், அவர்களில் ஒருவர் சரோஜினி நாயுடு

அவர் வங்க‌ பிராமண குடும்பத்து பெண், ஆனால் ஆந்திராவில் பிறந்தவர் அதன் பின் அன்றே கலப்பு திருமணமாக நாயுடு ஒருவரை திருமணம் செய்து சரோஜினி நாயுடு என மாறினார்

அவர் திருமணம் சென்னையில்தான் நடந்தது.

மிக சிறந்த படிப்பாளி , அதுவும் உதவி தொகையிலே கேம்பிரிட்ஜ் வரை சென்று படித்தவர். அன்றே அவருக்கு 10 மொழிகளில் புலமை இருந்தது

இதனால் பன்மொழி கவிதைகளை வாசிக்க முடிந்தது, பல அற்புதமான கவிதைகளை, எழுத்துக்களை அவரால் கொடுக்க முடிந்தது. இந்தியா அவர் கவிகுயில் என ஏற்றும் கொண்டது

கவிஞர், எழுத்தாளர் என்பதை தாண்டி சுதந்திர போராட்ட தியாகி, அரசியல்வாதி என பெரும் வடிவம் கொண்டவர், வங்க பிரிவினையினை தொடர்ந்து அரசியலுக்கு வந்தவர்.

அந்நாளைய சுதந்திர போராட்ட வீரர்களுடன் அவருக்கு நல்ல மரியாதை இருந்தது. அன்னிபெசன்டின் ஹோம் ரூல் இயக்கத்திலும் இருந்திருக்கின்றார்

காந்தியுடன் போராட்டம் நடத்தியது, சிறை சென்றது எல்லாம் அவரின் இன்னொரு பக்கம்

இந்திய போராட்டத்தில் அவரின் பங்களிப்பினை குறைத்து சொல்லிவிட முடியாது, இம்மாதிரி பிரிட்டிஷாரால் மதிக்கபட்டவர்கள் போராட வந்ததால்தான் அரசால் முற்றிலும் போராட்டத்தை ஒடுக்க முடியவில்லை

1925ல் காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கபட்டார், அப்பதவியினை வகித்த முதல்பெண் அவர்தான்.

சுதந்திர இந்தியா அவருக்கு பல பதவிகளை கொடுத்தது, உபி மாநில கவர்ணராக அமர்த்தபட்டார், இந்தியாவின் முதல் பெண் கவர்னர் அவர்தான்

அவரின் அற்புதமான கவிதைகள் “தி கோல்டன் த்ரெஷோல்டு” என்னும் பெயரில் வெளீயிடப்பட்டது. மற்றும் இரண்டு தொகுப்புக்கள் “தெ பேர்ட் ஆஃப் டைம்” , “தி புரோக்கன் விங்” என வெளியிடப்பட்டன.

அவரின் பிரமாதமான கவிதைகள் அவர் இறந்தபின்பு “தி ஃபெதர் ஆஃப் டான்” எனும் பெயரில் வந்தது, உலகம் அவர் கவிகுயில் என்ற பட்டத்திற்கு பொருத்தமானவர் என உலகம் ஒப்புகொண்டது

இன்றும் அவரின் ஆங்கிலம் அவ்வளவு அழகானது என பிரிட்டிசாரே ஒப்புகொள்கின்றனர்

உலக நாடெல்லாம் இந்திய பெண்களின் முகமாக அறியபட்ட அவரின் பிறந்த நாள் இன்று, அது இந்திய மகளிர் தினமாகவும் அனுசரிக்கபடுகின்றது

இந்திய மகளிர் எல்லா திறமையும் உடையவர்கள், அரசியலில் ஈடுபட்டு மிக திறமையாக அவர்களால் பணிசெய்ய முடியும் என நவீன இந்தியாவில் முதலில் நிரூபித்தவர் சரோஜினி நாயுடு

நிச்சயம் இந்திய பெண்களுக்கெல்லாம் அவர் மாபெரும் வழிகாட்டி, நம்பிக்கை கொடுத்த விடிவெள்ளி

அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள், இந்திய அரசு அறிவித்தபடி இன்றுதான் “இந்திய மகளிர் தினம்”.

அவ்வகையில் இத்தேசத்து மகளிருக்கெல்லாம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்