நாச்சியார் திருமொழி 2.4
நாச்சியார் திருமொழி 2.4
ஆண்டாள் அன்றும் சிறுமிகள் அருகில் அமர்ந்திருக்கின்றாள், அவர்கள் வீடு (சிற்றில்) கட்டி விளையாடிகொண்டிருக்கின்றார்கள், பங்குனிமாத வெயில் உக்கிரமெடுக்கின்றது
வீசும் மெல்லிய காற்றிலும் வெம்மை கூடுகின்றது, ஆண்டாள் வானத்தை ஏறெடுத்து பார்க்கின்றாள், அந்நேரம் என்ன நாழிகை என காண சூரியனை பார்ப்பது அன்றைய வழக்கம்
அப்படி வானத்தை அவள் ஏறெடுத்து பார்க்கும்பொழுது ஒரு கறுத்த மேகம் நகர்வதை காண்கின்றாள், அந்த கார்மேகத்தை கண்டவுடன் கண்ணன் நினைவு அவளுக்குள் பெருகுகின்றது, ஊறும் அந்த ஆனந்த லஹரியில் ஆண்டாள் உந்தி பாடுகின்றாள்
“பெய்யும் மாமுகில் போல் வண்ணா உன்றன்
பேச்சும் செய்கையும் எங்களை
மையலேற்றி மயக்க உன்முகம்
மாய மந்திரம் தான் கொலோ
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு என்னை
நோவ நாங்கள் உரைக்கிலோம்
செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள்
சிற்றில் வந்து சிதையேலே”
உற்சாகமாக பாடிவிட்டு வானத்தை நோக்குகின்றாள், அந்த மேகம் கலைந்துவிட்டிருந்தது. மனம் வாடிய ஆண்டாள் மரத்தின் விழுதில் தனித்து சாய்ந்திருந்து கண்களை மூடிகொண்டாள் ஒரு மெல்லிய மயிலிறகு அவள் மேல் நீர் தெளித்து வருடியது
வந்தது கண்ணன் என உணர்ந்து கொண்ட ஆண்டாள், தன் அருகே கண்ணன் நெருங்கி அமர்வதை கண்களை மூடியபடியே உணர்ந்தவள் சட்டென அவன் தோளில் ஒட்டிகொண்டாள்
கண்ணன் கேட்டான் “ஆண்டாளே நான் கருப்பாக இருப்பதால்தானே கார்மேகத்தை கண்டதும் என்னை நினைத்தாய், என் நிறம் அப்படி” என குறைபட்டு கொண்டான்
அவன் முகத்தை தொட்டு திருப்பியபடி ஆண்டாள் சொன்னாள் “உன்னை கார்மேக கண்ணன் என்று மட்டுமா சொல்கின்றார்கள் , நீலவண்ண கண்ணன் என வானையும் கடலையும் காட்டியும் சொல்கின்றார்கள்
கண்ணா கடலும் வானமும் இல்லாவிட்டால் மேகம் ஏது? அந்த மேகம் இல்லாவிட்டால் உயிர்கள் வாழ வழி ஏது? இந்த பூமியின் இயக்கமே மழை அல்லவா? அதை கொடுக்கும் கார்மேகம் சாமான்யமா? அதனால்தான் உன்னை கார்மேக கண்ணன் என்பார்கள்
கண்ணா அந்த கடலும் நீ, வானமும் நீ , மேகமும் நீ, மழையும் நீ” என்றவள் அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள்
“இதற்குத்தான் அப்படி பாடல் தொடங்கினாயா?” என சொன்ன கண்ணனின் கண்கள் மகிழ்ச்சியால் விரிந்தன
அங்கு ஒரு அமைதி நிலவிற்று, தன் புல்லாங்குழலை இசைத்தபடி இனிய ராகம் எழுப்பிகொண்டிருந்தான் கண்ணன், அவன் தோள்களில் புதைந்தபடி நீரில் மூச்செடுக்கும் மீன்போல இசையில் மூழ்கி லயித்து கொண்டிருந்தாள் ஆண்டாள்
மின்னல் போல் சட்டென எழும்பியவள் சுதாரித்து தலைமுடியினை ஒழுங்குபடுத்தினாள், தன்னை அறியாமல் மனம் அவனிடம் கரைவதை உணர்ந்தவள் அவனையே பார்த்தாள்
கண்ணன் வழக்கமான புன்னகையினை வீசியபடி கேட்டான், ஆண்டாளே “உன்றன்
பேச்சும் செய்கையும் எங்களை மையலேற்றி மயக்க உன்முகம் மாய மந்திரம் தான் கொலோ” என்றாயே ஏன்?
ஆண்டாளிடம் வார்த்தை இல்லை, விலகி நின்று அவனையே பார்த்தாள், கண்ணன் புன்னகைத்தான்
அவனின் மோகனபுன்னகையின் மயக்கத்தை உணர்ந்தவள் முகம் திருப்பி கொண்டாள்
கண்ணன் அவளை நோக்கி அடியெடுத்து வைத்தான், ஆண்டாள் திரும்பியபடியே கைநீட்டி சொன்னாள் “அப்படியே நில் கண்ணா”
“சரி அமருகின்றேன், பாடலுக்கு அர்த்தம் கேட்டால் நில் என்கின்றாய்” என்றபடி அமர்ந்து கொண்டான்
ஆண்டாள் சொன்னாள் “நீ மாயன், நீ மந்திரக்காரன் எல்லாம் அறிந்தும் அறியாதவன் போல் ஆடும் வித்தைக்காரன், உன் பெயரை கேட்டாலே முகம் புன்னகைக்கின்றது, உன் நினைவு வந்தாலே மனம் பரவசமாகின்றது, உன் அருகாமை கிடைத்தாலே மதி மயங்குகின்றது” என நீட்டிய கையினை ஆட்டியபடியே சொன்னாள்
கண்ணன் அவள் கையின் வளையல்கள் அசைவதை ரசித்து கொண்டே கேட்டான் “அந்த வரிகளுக்கு பொருள் கேட்டால் ஏதேதோ சொல்கின்றாய்”
“அந்த வரிகளுக்கு அதுதான் பதில், நீ மாயன் பெரும் தந்திரமும் செய்பவன், உன்னை யாரால் கணிக்க முடியும், செயல் முடிந்தபின்புதான் உன் திட்டமே புரியும்” அதைத்தான் பாடினேன் என்றவள் முகம் திருப்பி ஒரு ஓர பார்வையினை வீசிவிட்டு சட்டென முகம் திருப்பி கொண்டாள்
அந்த ஒரு பார்வையில் ஓராயிரம் மின்னலின் பிரமிப்பினை கண்ணன் உணர்ந்தும் உணராதவன் போல் இருந்தான், பின் சொன்னான்
“எல்லோரும் இதையே சொல்லுங்கள், எப்படி செய்தால் என்ன? எல்லோருக்கும் நன்மைதானே செய்கின்றேன்” என்ற கண்ணன் அடுத்த வரியினை கேட்டான்
“நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு என்னை நோவ நாங்கள் உரைக்கிலோம்” என்றாயே ஏன்?
அதுவரை வெட்கமும் நாணமும் கண்ணன் மேல் பிரமிப்பும் கொண்ட ஆண்டாளின் முகம் வதங்கிய கொடி போல் மாறிற்று
ஒரு நிசபதம் அங்கு உருவானது, கனத்த மவுனம் நீடித்தது
“சொல் ஆண்டாளே” என்றான் கண்ணன், அந்த அமைதி இன்னும் நீடித்தது, அந்த அமைதியினை ஆண்டாளின் மெல்லிய விசும்பல் குலைத்தது
“என்னாயிற்று ஆண்டாளே” என அவள் அருகில் சென்றவன் நெஞ்சில் அப்படியே கட்டி அழ தொடங்கினாள் ஆண்டாள், அவளின் நீண்ட பெரும் மூச்சு தீருமட்டும் திரும்ப திரும்ப அழுதாள்
அவள் தலைமுடியினை கோதியபடி நின்றிருந்த கண்ணன், அவளின் அழுகை தேம்பலாக மாறியபின் முகம் தொட்டு தூக்கி கண்ணீரை துடைத்தபடி கேட்டான்
“கண்ணா நீ மழைமேகம் போன்றவன், உன்னால் எல்லா உயிரும் வாழும், ஆனால் அந்த உயிர்களால் உனக்கு ஆவதென்ன? மழை கல்லுக்கும் மண்ணுக்கும் பெய்யும் அந்த மழைக்கு மரகட்டையால் ஆவதென்ன?
கண்ணா நான் அற்பமானவள் அல்லவா? வெறும் மானுடச்சி அல்லவா? என் ஆயுளும் பார்வையும் உணரும் திறனும் குறுகியது அல்லவா?
ஒரு மாட்டுக்கு இருக்கும் பலம் எனக்கு இல்லை, ஒரு வவ்வாலுக்கு இருக்கும் காது கூர்மை எனக்கு இல்லை, பறவையிடம் இருக்கும் பறக்கும் தன்மை கூட இல்லை, பூமியில் ஒரு வெற்றுபிறப்பு நான்
நீ இவ்வுலகை இயக்குபவன், அது இயங்கும் வகை எல்லாம் அறிபவன், எல்லா அசையும் அசையா பொருளில்லாம் இருப்பவன், உனக்கு தெரியாமல் எதுவும் இங்கு நடப்பதுமில்லை நடக்கபோவதுமில்லை எல்லாவற்றுக்கும் நீயே கர்த்தா
அப்படிபட்ட உன்னிடம் நான் என் ஆசையினை சொல்லலாமா? சொன்னால் அற்பமானவள் என நினைத்து ஒதுக்கமாட்டாயா?
குசேலனை ஒதுக்காத பெருந்தன்மையானவன் நீ ஆனால் அவன் உன் பால்ய நண்பன் எனக்கு அந்த அருகதை கூட இல்லையே கண்ணா, உனக்கும் எனக்கும் எப்படி பொருந்தும்?
என்னை அற்பானவள் என ஒதுக்கிவிட்டால் என் ஆசையினை தெரிந்து இது பேராசை உலகின் மிகபெரிய பேராசை என சொல்லி ஒதுக்கிவிட்டால் நான் என்ன செய்வது கண்ணா, பூமியில் மானிட இழிபிறப்பாக பிறந்த நான் உன்மேல் ஆசைபடலாமா?” என சொல்லி முகம் புதைத்தாள்
கண்ணன் அவள் கேசத்தை கோதியபடி சொன்னான், “இந்த உலகில் யார் என்னை அன்போடு நினைக்கின்றார்களோ, யார் உண்மையாக என்னை சரணடைவார்களோ அவர்கள் வேண்டியது எது என்றாலும் நான் கொடுப்பேன் என அறியாதவளா நீ?
இவ்வுலகில் அற்பம் என எதுவுமில்லை ஆண்டாளே, அற்பமான மயிலறகை சூடி அற்ப குழலை ஏந்திவருபவன் நான், எனக்கு தேவை எல்லாம் என்னை சரணடையும் அன்பு, அது உன்னிடம் இருக்கின்றது
உன் பிரமாண்டமான அன்பு முன் நான் தோற்றுவிட்டேன், நான் தோற்றுவிட்டேன் என்றால் இந்த மாபெரும் பிரபஞ்சமே உன்னிடம் தோற்றுவிட்டது, நீ அற்பமானவள் இல்லையம்மா அபூர்வமானவள், எக்காலமும் என் பெயர் நிற்கும்படி செய்துவிட்ட அபூர்வமானவள், என் பக்திக்கு அடையாளமிட்ட கண்மணி நீ” என்றான்
ஆண்டாளின் தேம்பல் மெல்ல மெல்ல மகிழ்ச்சி விசும்பலாக மாறியது, கண்களில் காதல் மின்ன உதடுகளில் மகிழ்ச்சி பொங்க அருகிருந்த கல்லில் அமர்ந்து கொண்டாள்
“செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே” என்றாயே ஏன்? அதையும் சொல்லிவிடு என்றான் கண்ணன்
“சிவந்த தாமரை போன்ற கண்களை உடையவனே வந்து எங்கள் மணல் வீட்டை இடிப்பாயே என அழைத்தோம்” என்றாள் ஆண்டாள்
“என் கண்களா சிவந்திருக்கின்றது? உன் கண்கள்தான் சிவந்திருக்கின்றது” என சிரித்தபடி சொன்னான் கண்ணன்
“அற்பமானவர்கள் என ஒதுக்கிவைக்கபட்ட வீட்டுக்கு யார் விரும்பி வருவார்கள், வலிய வலிய அழைத்தால் ஆத்திரத்தில் கண்கள் சிவக்கத்தான் வருவார்கள், அதனால்தான் அப்படி பாடினேன்” என்றாள் ஆண்டாள்
“இல்லையம்மா, எனக்கு அற்பமென்று யாரும் இல்லை, வாழ்வு நிரந்தரம் இதுதான் தன் உலகம் இறைவன் என்பவன் எனக்கு தேவையில்லை என அகங்காரம் கொண்டு திரியும் பதர்களே எனக்கு அற்பர்கள், அதர்மக்காரர்கள் அற்பர்கள், அகந்தையும் தற்பெருமையும் கொண்டவர்களெல்லாம் அற்பர்கள்
யார் தன்னை அறிந்து என்னை உணர்ந்து என்னிடம் அன்பால் சரணடைவார்களோ அவர்களெல்லாம் என் பொக்கிஷங்கள்” என்றான்
“கண்ணா அப்படியானால் நான் உனக்கு அற்பம் இல்லையா?
ஒரு காலமும் இல்லை நீ எனக்கு அபூர்வம்
கண்ணா இந்த அற்ப மானுடச்சி அறிவும் தெளிவும் இல்லாத இழிபிறவி மானுடச்சி உனக்கு எப்படி அபூர்வம்? ஆனாலும் அப்படி இருந்துவிடதான் மனம் துடிக்கின்றது
ஆண்டாளே நான் ஆத்மாவினை நோக்குபவன், அந்த ஆத்மாவின் துடிப்பினை மட்டும் காண்பவன், அவ்வகையில் உன் அற்ப உடலில் அழியா ஜோதியில் அந்த ஆன்மா மின்னுகின்றது அது எனக்கு அபூர்வமே
கண்ணா இனியும் என்னால் தாங்கமுடியாது இந்த ஜோதியினை உன்னோடு சேர்த்துகொள், உன்னில் கலந்து கொள், என்னை உன்னோடு கலந்து உன்னில் வைத்துகொள்”
உணர்ச்சியான ஆண்டாளை உலுக்கி நிதானமாக்கினான் கண்ணன், நாணிய ஆண்டாள் தலைகுனிந்து நிலம் நோக்கி நின்றாள்
ஆண்டாளே மழையானாலும் மேகமானாலும் அது பொழிய ஒரு காலம் உண்டு, அக்காலம் வரும்வரை பொறுமை அவசியம், பொறு என்றான் கண்ணன்
மழைக்கு காக்கும் நிலம் போல காத்திருப்பேன் கண்ணா என்றாள் ஆண்டாள்
கண்ணன் மழைமேகமாக உருமாறி மேல் எழும்பினான், அதன் சில துளிகள் பட்டதில் சிலிர்த்து கொண்டாள் ஆண்டாள்
(மானிட வாழ்வு அற்பமானது அவர்கள் பூமியில் செய்யும் எல்லா காரியமும் சிறுமிகள் மணல் வீடு கட்டுவது போல அற்ப விளையாட்டானது , அந்த தெளிவற்ற மயக்கத்தை ஒழித்து அற்ப காரியங்களை ஒழித்து இறைவனை உணர கண்ணன் அருள் தேவை
மனமே அற்ப காரியங்களில் மனம் செலுத்தாமல் பகவானை நோக்கி மனம் செலுத்து, அவனே வந்து மாயை தீர்த்து தெளிவு தருவான்
அற்ப மானிடர்களின் குரல் என்றாலும் அந்த பரம்பொருள் ஓடிவருவான், மானிடர் எனும் அற்பர்களால் தனக்கு ஏதும் ஆகபோவது இல்லை என்றாலும் அவன் வந்து தன்னோடு சேர்த்து கொள்வான், அற்ப மானிடர் என பரம்பொருள் ஒரு காலமும் நம்மை விலக்குவதில்லை, மனமே அந்த மாயவனை அழைப்பாயாக, அவன் வந்து உன் அற்ப ஆசைகளை (மணல் வீட்டை) அழித்து முக்திமனம் தருவான் என்பது பாடலின் பொருள்)
அருமையான பக்தி காதல் காவியம். அது ஆண்டாள், கண்ணன் இடையே நடை பெரும் உரையாடல் காதலாகி கசிந்து…. என்ற மாணிக்கவாசக பெருமாள் வரிகள் நினைவு படுத்துகின்றது காதல்… பின் மையல்.. இந்த மாய கண்ணன் இன்னும் ஏன் தாமதம்… இதை தான் ஆண்டாள் பெய்யுமா முகில்..பெய்து விடுவோமோ என்ற நிலையில் இருக்கும் முகில் போன்ற கரு நிறத்தவனே ! இதையே திருப்பாவையில் ஆண்டாள் ஆழி(கடல்) மழைக் கண்ணா என்றிருப்பாள்.. மழை மேகம் எங்கிருந்து உருவாகிறது என்பதை அப்பொழுதே அறிந்தவள்..மழை மேகம் போல் மறைந்து விடுவாயோ அல்லது என் மணல் வீடு போல் கரைந்து விடுமோ என மையல் கொண்டு, பின் காதல்…. அற்புதமான விளக்கம்…. கண்ணன் ஆகவும், ஆண்டாள் ஆகவும் மாறாமல் இந்த விளக்கம உரை எழுத முடியாது.
சர்வம் கிருஷ்ணார்ப்பனம்..
🙏🙏🙏🙏