நாம் தரம் தாழ்ந்துவிட்டோமா?
ஒரு சில பதிவுகளை கடக்க முடிந்தது, அதில் நாம் லைக் என்பதற்காக எழுதுகின்றோம் என்றும் தரம் தாழ்ந்துவிட்டோம் என்றெல்லாம் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்
முகநூல் என்றால் என்னவென்றே அறியாத காலங்களை திரும்பி பார்க்கின்றேன், அன்று நான் மட்டும்தான் இருந்தேன்
இத்தனையாயிரம் பேர் வருவார்கள் என்றோ, இவ்வளவு நண்பர்கள் கிடைப்பார்கள் என்றோ எண்ணி கீபோர்டை தட்டவில்லை
எமக்கு எது நியாயமோ? எது மனதை பாதித்ததோ? எது நாட்டுக்கான விஷயமோ அதைத்தான் சொன்னோம், எம் போக்கில் எழுதி கொண்டே இருந்தோம்
திரும்பி பார்த்தால் பல்லாயிரம் பேர் இருந்தார்கள், நன்றி
அதற்காக அவர்கள் விரும்புவதை எழுத நான் எதற்கு? என் சுவரில் அவர்களே எழுதிவிட்டு போகலாமே?
மனதை எது தொடுமோ? அல்லது சுடுமோ? அதைத்தான் எழுத முடியும்.
இதில் லைக் வந்ததா? வரவில்லையா, யார் பிரிந்தார்கள் என்பது பற்றி எல்லாம் ஒரு நாளும் நோக்கியதுமில்லை அது தேவையுமில்லை.
இது கட்சி, சாதி,மதம் , இனம் என எந்த கட்டுபாடுமே இல்லா சுதந்திர பறவை. அதற்கு எந்த வானத்தில் பறக்க வேண்டும் என நினைக்குமோ அந்த வானத்தில் பறக்கும்,
அந்த நினைவுகளை எழுதும்
மற்றபடி லைக்கிற்காக மட்டும் தேர்ந்தெடுத்து எழுதினால் , கட்சி முகமூடி அல்லது அறிவாளி முகமூடி எல்லாம் போட்டு எழுதினால் பெரும் இடம் சென்றிருக்கலாம்
அது தேவையில்லை, மாபெரும் அறிவாளிகள் எல்லாம் கட்சிகளில் சேர்ந்து நாசமான வரலாறு கண்முன்னே கிடக்கின்றது
அயோக்கியர்களுக்கு அரசியல் புகலிடமே தவிர மனசாட்சி உள்ளோர்க்கு அல்ல
கையில் ஒரு விலங்கு, காலில் ஒரு விலங்கிட்டுகொண்டு, அறிவாளி முகமூடி போட்டு ஒரு மாதிரி திரிய எமக்கு விருப்பமுமில்லை, அது தேவையுமில்லை
இதுவே நிலைப்பாடு, இதை புரிந்தவர்கள் வரலாம், பிடிக்காதோர் விலகலாம்
இப்பறவை எல்லா வானத்திலும் பறந்துகொண்டே இருக்கும், சில மரத்து கிளைகளில் இளைப்பாறும்
அந்த நினைவுகளை சிந்தனைகளை ஆங்காங்கே இங்கு கிறுக்கி வைக்கும், அவ்வளவுதான்
அங்கு ஏன் பறக்கின்றாய், இங்கு ஏன் அமர்கின்றாய் என கேட்க யாருக்கும் உரிமையில்லை
பன்றிக்கு வானை பார்க்க தெரியாது அதன் கழுத்து நிமிராது என்பார்கள், அதற்காக அது பார்க்கும் மண் மட்டுமே மொத்த உலகம் ஆகுமா?
ஒரு விஷயத்தை எல்லா கோணத்திலும் பார்க்க வேண்டுமே தவிர, சேனம் கட்டிய குதிரையாக ஒரே பார்வை என்பது சரிவராது
எங்களோடு இரு என கிணற்று தவளைகள் ஒரு பறவையினை சொல்ல முடியாது, அப்படி சென்றுவிட்ட பறவையினை நோக்கி தவளைகள் கத்தினால் என்ன சொல்ல முடியும்?
அந்த தவளைகள் அந்த கிணறுக்குள்ளே கிடக்கட்டும், அவைகளின் உலகம் அதுவென்றால் யார் என்ன செய்ய முடியும்?