நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
நிச்சயமாக அவர் ஒரு ஒப்பற்ற போராளி, காலத்தை மிக நுட்பமாக கணித்து விடுதலை போராட்டத்தை மாற்றியவர், அவரது திட்டம் மட்டும் வெற்றிபெற்றிருக்குமானால் இன்று இந்தியாவின் தலைவிதி மாறி இருக்கும்,
ஆனால் ஜப்பானின் அணுகுண்டு தாக்குதலும், ஹிட்லரை வீழ்த்திய ரஷ்ய செஞ்சேனையின் மாபெரும் வெற்றியும் அவரது தலைவிதியினை மாற்றிற்று
அந்தகாலத்திலே கலெக்டருக்கு படித்தவர், ஆனால் பட்டத்தினை தூக்கி எறிந்து விட்டு காங்கிரசில் புகுந்தார். வெள்ளையன் மனதினை மட்டும் அடி, அஹிம்சையால் ஆழ்மனதினை தொடலாம் எனும் காந்தீய இந்திய ஞான மரபெல்லாம் அவருக்கு ஒத்துவரவில்லை, காந்தி வேறுமாதிரியானர். அவர் போராட்ட வடிவம் வேறு.
வெள்ளையன் இப்படி சிந்தித்தான், “காந்தியால் நமக்கு பெரும் நெருக்கடி இல்லை, ஏதோ இவர் சொன்னால் மொத்த இந்திய மக்களும் கேட்கின்றார்கள், ஆனால் இவரை முடிந்தவரை சமாளித்துவிடலாம்,
ஆனால் போஸ் அப்படி அல்ல, துடிப்பானவர், விட்டால் சட்டை காலரை பிடித்து உலுக்குவார், ம்ம்ம் தூக்கிபோடு உள்ளே”.
எப்படியோ தப்பினார் போஸ், ஆனால் உடனே படை திரட்டி, சயனைடை கழுத்தில் கட்டி, பின் வந்தவன் எல்லோர் மேலும் தற்கொலை குண்டுகட்டி ஏவி விடவில்லை. காந்தி மேலும், நேரு மேலும் அப்படியே மவுண்பாட்டன் மேலும் மனித குண்டுகளை அவர் ஏவவில்லை, “இன துரோகி” என பாருக்கும் பட்டம் கொடுக்கவும் இல்லை
அப்படி செய்திருந்தால் இந்தியாவின் ஒவ்வொரு நகரமும் ஜாலியன் வாலாபாக் ஆகியிருக்கும்,
அது முட்டாள்களின் வேலை.
காந்தி ஒருபக்கம் போராடட்டும், நாம் ஒரு பக்கம் போராடுவோம் என்பதுதான் அவர் வழி.
பிரிட்டன் பெரும் ராணுவம், இன்னொரு எதிரியுடன் சேர்ந்துதான் அவர்களை விரட்டவேண்டும் எனும் திட்டத்தோடு களமிறங்கினார், ஹிட்லரிடம் உதவி கோரினார். ஹிட்லருக்கு இந்தியா மேல் பெரும் அபிமானமில்லை. இந்தியாவின் சென்பகராமனையே அவர் போட்டு தள்ளிய சர்ச்சை உண்டு,
ஹிட்லரை பொறுத்தவரை இந்தியர்கள் தலமைபதவிக்கு தகுதியற்றவர்கள். ஆரியர்கள் மட்டும் ஆள பிறந்தவர்கள்
லண்டனை பிடித்தால் இந்தியா எனக்கு, இவர் யார் இடையில் ஆள்வதற்கு என்று கூட ஹிட்லரின் ஆரிய மண்டையில் ஓடியிருக்கலாம், ஆனால் ஒரு கூட்டணிக்காக அவர் சுயநலத்தோடு போஸினை அரவணைத்திருக்கலாம் என்பார்கள், வாய்ப்பு உண்டு.
மகா மர்மம் நிறைந்தது வரலாறு.
ஆனாலும் ஹிட்லரின் கூட்டாளியான ஜப்பான் அவருக்கு ஆதரவளித்து, மலேய முற்றுகையின் போது, பயிற்சியும் அளித்து, கிட்டதட்ட வங்கத்தில் போஸ் படையோடு வந்துவிட்ட நிலையில்தான் அணுகுண்டு விழுந்து, ஜப்பான் ஓடிபோயிற்று, போஸும் ராணுவத்தை கலைத்தார், அதோடு இந்திய சுதந்திர நாளும் நெருங்கிற்று, போஸ் தலைமறைவாக இருந்தார்.
சுதந்திர இந்தியா தனக்கு அடைக்கலம் தரும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.
இந்திய சுதந்திர ஒப்பந்தபடி, போஸ் என்பவர் நாசிக்களோடு , ஜப்பானியரோடு சேர்ந்து பிரிட்டனை எதிர்த்த போர் குற்றவாளி, அவரை ஒப்படைக்கவேண்டியது இந்திய கடமை என்ற அறிக்கைகள் வந்த கொஞ்சநாளில் போஸ் தைவானில் விபத்தில் இறந்துவிட்டதாக செய்திகள் வந்ததன, அதிலிருந்து தொடங்கின குழப்பம்.
இனி வல்லரசுகள் தன்னை விடாது என்று அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூட செய்தி உண்டு, உறுதிபடுத்தபடவில்லை.
வங்கத்தை அடுத்து போஸுக்கு மகா ஆதரவு கொடுத்தது தமிழகம், பசும்பொன் திரு.முத்துராமலிங்கம் போன்றவர்கள் அவர் உயிருடன் இருப்பதாகவே மேடைகளில் முழங்கினார்கள். சர்ச்சை தீர்ந்தபாடில்லை.
ஆனால் பல ரகசியங்கள் காக்கபட்டன, அவை வெளியிடபட்டால் உள்நாட்டில் சிக்கல்கள் வருவதை கூட எப்படியாவது சமாளிகலாம், ஆனால் வெளிநாட்டு சிக்கல் வந்தால் எப்படி சமாளிப்பது? எனும் நோக்கில் பல விஷயங்கள் மவுனிக்கபட்டது.
இந்தியாவின் ஒப்பற்ற போராளிதான் மக்கள் தலைவர் நேதாஜி, ஆனால் சேர்ந்த இடம் சரி இல்லை.
ஹிட்லர், ஜப்பானிய கூட்டத்தில் அவர் இணைந்தது உலக கண்களை உறுத்தியது. ஹிட்லர் இறந்தாலும் அவர் உடல் சிக்கவே இல்லை. அவர் இருப்பதாகவும் நாசிக்கள் ஒன்று கூடுவதாகவும் அந்த ரகசிய வலைப்பின்னலில் நேதாஜி இருப்பதாகவும் சந்தேகிக்கபட்ட கதைகள் வந்தன.
மொத்தத்தில் அவர் விபத்தில் இறந்திருந்தால் இந்தியருக்கு இழப்பு ஆனால் வல்லரசுகளுக்கு கொண்டாட்டம். ஒருவேளை பிழைத்திருந்து இந்தியா வந்தால், மாபெரும் மக்கள் திரள் அவரை ஆட்சியில் அமைய வைக்கும் சாத்தியம் இருந்தது, அவரின் செல்வாக்கு அப்படியானது.
காரணம் அப்பொழுது நேதாஜியின் வயது வெறும் 48.
அப்படி அமரும் பட்சத்தில் அவர் என்ன செய்வார்? ஒரு காலத்தில் தனக்கு உதவிய ஜெர்மானியருக்கும், ஜப்பானியருக்கும் மறைமுகமாக உதவுவார், நிச்சயம் லண்டனை பழிவாங்குவார் என ஏகபட்ட சாத்தியங்களை அவர்களாகவே உருவாக்கினார்கள்.
ஆச்சரியமாக சோவியத் யூனியனும் அதில் சேர்ந்துகொண்டது, காரணம் ஹிட்லரால் அதிகம் பாதிக்கபட்டவர்கள் அவர்கள்தான். ஹிட்லரின் கூட்டாளிகளை தேடிகொண்டே இருந்தனர், சீனா ஜப்பானிடம் பட்ட அடி கொஞ்சமல்ல, அதற்கும் ஜப்பானிய கூட்டாளியான போஸ் எதிரியானார்.
ஆக பல நாடுகளின் எதிரி என அவர் விதி மாறிற்று.
உறுதிபடுத்தபடாத ஆனால் வலுவான ஆதாரம் கொண்ட செய்தி, சீன எல்லையில் சுற்றிய நேதாஜி, ரஷ்ய உளவுதுறை அந்நாளைய கேஜிபி மூலம் கிழக்கு ரஷ்யாவில் வீட்டுசிறையில் வைக்கபட்டார் என்பது.
இந்த செய்தி பல காலமாக தொடர்ந்து வந்தது, ஆனால் உளவுதுறைகள் அவர் இந்த குகை சாமியாராக இருக்கலாம், அதோ அந்த விவசாயி அவர்தான் என்றெல்லாம் கதைகள் கட்டி திசை திருப்பின.
நேதாஜியின் மனைவியும், மகளும் இந்த வாதங்களை ஆணித்தரமாக வைத்துபார்த்தனர், ஆனால் ஒரு முடிவும் கிடைக்கவில்லை.
வங்கத்து மம்தா அரசு சில நேதாஜி ரகசியங்களை மத்திய அரசின் பிண்ணணியில் வெளியிட்டு, அந்த விபத்திற்கு பின்னும் நேதாஜி வாழ்ந்த ஆதாரம் உண்டு என முணுமுணுத்திருக்கின்றது,
மத்திய அரசு இதனை பெரும் செய்தியாக்கிவிட்டு அமைதியாக கண்காணிக்கின்றது, இவ்வளவு சொல்பவர்கள் அப்படியானால் அவர் எங்கு வாழ்ந்தார்? எப்படி இறந்தார் என்று சொல்லவேண்டும் அல்லவா? அது இவர்களால் முடியாது.
காரணம் அது நிச்சயம் சர்வதேச குழப்பங்களை ஏற்படுத்தும், அது எவ்வளவு தூரம் போகுமென்றால், கென்னடி கொலையில் ஆனானபட்ட அமெரிக்கா கையை பிசைந்த நிலை வரை செல்லும்.
அது இவர்களுக்கும் தெரியும், அப்படி உண்மை தெரியவேண்டுமென்றால் இவர்கள் குட்டிகரணம் அடிக்கவேண்டிய இடம் வேறுநாடுகள். உண்மையில் நேதாஜி மீது அக்கறை இருந்தால் அதனை செய்வார்கள், ஆனால் இவர்கள் நோக்கம் என்ன?
அரசியல் எல்லாம் அரசியல்
இவர்கள் சொல்ல வருவது எல்லாம் நேருதான் காரணம், நேரு என்றால் காங்கிரஸ்தான் காரணம், காங்கிரஸ் ஒழிக , இவ்வளவுதான் விஷயம்.
இதுதான் உண்மை, கேட்கவேண்டிய இடத்தில் கேட்கவே மாட்டார்கள்.
சுவிஸ் அரசை மிரட்டி ஆளுக்கு 15 லட்சம் தருவோம் என்றவர்கள், அதன்பின் சுவிஸ் சாக்லேட்டினை கூட இந்தியாவில் தடை செய்யவில்லை, இவர்கள் எப்படி பெரும் வல்லரசுகளை பகைத்து நேதாஜி மர்மத்தை உடைப்பார்கள்?
பின்னர் என்ன? அதே தான் காந்தி ஒழிக,நேரு ஒழிக ஆனால் மிக கவனமாக இந்த கூட்டணியில் ஒருவரான பட்டேல் மட்டும் வாழ்க, எப்படி இருக்கின்றது பார்த்தீர்களா? வரலாற்று திரிபு.
நிச்சயமாக நேதாஜி பெரும் தேச அடையாளம். நாட்டு விடுதலைக்காக சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்த வரலாறு அவருடையது.
காந்தி வழி வேறு, நேதாஜி வழி வேறு. இருவரும் தம் தம் வழியில் போராடினார்கள். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டிருந்தார்கள். நாம் தான் இருவரையும் புரிந்துகொள்ளாமல் விமர்சித்துகொண்டிருக்கின்றோம்.
ஆழ்ந்து நோக்கினால் இருவருக்கும் வேறு வழி தெரியவில்லை, காந்தி மக்களை திரட்டி காலத்திற்காக காத்திருந்தார். நேதாஜி சவாலான திட்டத்தில் உயிரை பணயம் வைத்து நாட்டிற்காய் போரடி அதற்காகவே இறந்தார்.
அவரையும் வைத்து அரசியல் செய்யும் இந்த நாட்டில் மீண்டும் அவர் வராமல் இருந்ததுதான் அவர் காத்துகொண்ட உச்சகட்ட மரியாதை.
மலேசியாவின் சில இடங்களில் அவர் பயிற்சிகொடுத்த இடங்கள் உண்டு, பார்த்திருக்கின்றேன், அன்று இளைஞர்களாக அவரோடு பழகிய இன்றைய முதியவர்கள் உண்டு அவர்களிடம் அவரை பற்றி கேட்டிருக்கின்றேன்.
அவர்களிடம் கதைகேட்டால் நேதாஜியின் நாட்டுபற்று அற்புதமாக விளங்கும், இப்படிபட்ட தேசஅபிமானியா நேதாஜி என மனம் உருகும், அப்படி அற்புதமான தகவல்கள் கொட்டும், ஹிட்லரின் படை மீதும் ஜப்பானிய ராணுவம் மீதும் பெரும் நம்பிக்கை வைத்திருந்தார், ஆனால் விதி மாறிற்று என்பார்கள்.
எப்படி ஆயினும் ஒருவேளை நேதாஜி இந்தியாவினை ஆளும் நிலை வந்திருந்தால் தேசபிரிவினை நடந்திருகாது, இந்த காஷ்மீர் போன்ற சர்ச்சைகள் வந்திருக்காது. ஒரே இந்தியாவினை தவிர ஏதும் விரும்பாத உன்னத தலைவன் அவர், வங்கம் இப்படி உடைய விட்டிருக்கமட்டார் என்பது மட்டும் உண்மை
இந்தியாவினை ஆளும் தகுதிபடைத்த நபர்களில் போஸ் மகா முக்கியமானவர், முதன்மையானவர் , பொதுவாக இந்தியாவிற்கு மட்டுமல்ல தெற்காசியாவிற்கே துணிகரமான தலமை கிடைத்துவிட கூடாது என்பதில் கவனமாக இருக்கும் வல்லரசுகளின் விளையாட்டில் நேதாஜி சிக்கினார் என்பதும் ஆய்வுக்குரியது
எனினும் ஜப்பான் உதவியோடு இந்தியா விடுதலை அடைந்தாலும், வெள்ளையனுக்கு பதில் ஜப்பானியர் தான் ஆண்டுகொண்டிருப்பர், சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேயா, தாய்லாந்து, பர்மா என பல நாடுகளை பிடித்து தன் சாம்ராஜ்யத்தை நிறுவதொடங்கிய ஜப்பான், இந்தியாவிற்கு விடுதலை கொடுத்து நேதாஜி கையில் கொடுக்கும் என எப்படி எதிர்பார்க்கமுடியும்?
அப்படி ஜப்பான் வென்றிருந்தால், கணத்தில் அடுத்த போராட்டத்தை ஜப்பானுக்கு எதிராக நேதாஜி தொடங்கி இருப்பார் அவருக்கு வேறு வழி இருந்திருக்காது என்பதும் ஒரு வகை யூகம்.
ஜப்பானியர் செய்திருக்கும் உலகப்போர் அழிச்சாட்டியம் கொஞ்சமல்ல, இந்தியா கிடைத்திருந்தால் தாஜ்மகால் முதல் தஞ்சாவூர் கோயில் வரை புரட்டிபோட்டிருப்பார்கள்.
வரலாற்று ஆசிரியர்கள் சொல்வது ஒன்றுதான். பிரிட்டன் ஜெர்மனி என கணிக்க தெரிந்த போஸ், அமெரிக்கா சோவியத் யூனியன் என வருங்கால வல்லரசுகளை கணிக்க தவறினார், அது அவர் தவறேன்றும் சொல்லிவிட முடியாது.
அப்படி ஒரு முகாமில் இருந்திருந்தால் பின்னாளில் லீ குவான் யூ போலவோ, மாவோ போலவோ, ஸ்டாலின் போலவோ பெரும் உலக அடையாளமாய் மாறி இருந்திருக்கலாம், ஆனால் காலம் கடந்துவிட்டது
அந்த நேதாஜியினையும் ஒரு காலத்திலும் மறக்க முடியாது, நேதாஜி சாகவில்லை பல மர்மம் உண்டு அவர் உயிரோடு இருக்கின்றார் என இறுதிவரை தைரியமாக முழங்கிய ஒரு தேசபக்தனாக திரு, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களும் இந்த விஷயத்தில் மறக்க கூடியவர் அல்ல
நேதாஜியின் டெல்லி சலோ எனும் ஸ்லோகமும், இந்த நாட்டின் மீது அவருக்கு இருந்த பெரும் தேசபற்றும் எந்நாளும் வணங்கதக்கவை
நேதாஜி இந்தியாவினை ஆள கூடாது என்பதில் வல்லரசுகள் கவனமாக இருந்தன
அதன் முதல் பலிதான் நேதாஜி, என தொடங்கி காந்தி, இந்திரா, ராஜிவ் காந்தி என வந்து நிற்கின்றது.
இந்தியாவிற்காய் உலகினை எதிர்த்து பெரும் சவாலில் இறங்கிய அந்த வீரமகனுக்கு வீரவணக்கம் செலுத்துவதில் இத்தேசம் பெருமை கொள்கின்றது
முதன் முதலாக இந்தியாவிற்கு பலமிக்க ராணுவம் வேண்டும் என சொல்லி அதனை அமைத்தும் காட்டிய முதல் தலைவன் எமது நேதாஜி
இன்றைய பலமிக்க இந்திய ராணுவத்திற்கு அவரே முன்னோடி, அவ்வகையில் இந்திய ராணுவத்தின் நன்றிக்குரியவர் நேதாஜி
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நமது தேசத்தின் பெரும் வீரமிக்க அடையாளம்
வந்தே மாதரம்..ஜெய் ஹிந்த்.