முருகப்பெருமான் ஆலயங்கள் : குரோம்பேட்டை சுவாமிநாதசுவாமி திருக்கோவில்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : குரோம்பேட்டை சுவாமிநாதசுவாமி திருக்கோவில்.

சென்னை நகரில் குரோம்பேட்டையில் வடக்கு நோக்கி ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது இவ்வாலயம், மகா சக்தியான இவ்வாலயம் திரிசியோலம் மற்றும் திருநீர்மலை மலை கோயில்களுக்கு இடையில் அமைந்துள்ளது.

இக்கோவிலை உலகுக்கு அடையாளம் காட்டித் தந்தவர் காஞ்சி மகா பெரியவர், 1956 ஆம் ஆண்டு இப்பக்கம் நடந்து வந்து கொண்டிருந்தவர் திடீரென அம்மலையினைக் கண்டு அப்படியே நின்றார், ஏதோ ஒரு ஈர்ப்புக்குக் கட்டுப்பட்டவர் போல் அபப்டியே நின்றார்.

அம்மலை அப்போது செடிகொடிகளும் விஷ ஜந்துகளும் நிரம்பிய மலையாய் இருந்தது, அங்குச் செல்வாருமில்லை என்ன அங்கு உண்டு எனக் கண்டவருமில்லை, யாரும் செல்லாத இடமாய் இருந்தது.

கருணையே நிரம்பிய அந்தக் காமாட்சியின் திருமகன் மெல்லக் கேட்டார் “யாராவது இந்தக் குன்றின் மேல் சென்றிருக்கின்றீர்களா?”

கூட்டம் இல்லை எனத் தலையாட்டி அது மக்களே செல்லாத இடம் என்றார்கள்.

“அங்கே முருகனுக்கு ஒரு கோவில் கட்டுங்கள், அது சக்திவாய்ந்த தலமாகும், அங்கு முருகப்பெருமான் உண்டு” எனச் சொல்லி அம்மலையினை வணங்கிச் சென்றார் அந்த மகான்.

அவரின் உத்தரவை அடுத்து பக்தர்கள் கூடி அம்மலையின் உச்சிக்குச் சென்று கோவில்கட்ட முனைந்து செடி கொடிகளை அகற்றி பண்படுத்தியபோது ஒரு பழங்கால வேல் ஒன்றைக் கண்டார்கள்.

அப்படியே சிலிர்த்துப் போனவர்கள் காஞ்சி பெரியவரை மனமார வேண்டிக் கோவில் கட்டத் தொடங்கினார்கள், அவரின் ஆலோசனைப்படியே அவ்வாலயம் சுவாமிநாத முருகன் ஆலயமாக எழுந்தது.

தெற்கே தட்சண சுவாமிமலைக்கும் வடக்கே டெல்லியில் உத்தர சுவாமிமலைக்கும் இடையே அமைந்துள்ள இத்தலம் மத்திய சுவாமிமலை என்றாயிற்று.

முதலில் சித்தி விநாயகர் ஆலயம் எழுப்பப்பட்டு பின் முருகப்பெருமான் ஆலயம் கட்டப்பட்டது, 1979 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் பெரிதாக நடந்து அதிலிருந்து முருகப்பெருமான் அருள் பெருகி எல்லா மக்களுக்கும் பாய்கின்றது.

இந்த ஆலயம் காலத்தால் மிக மூத்தது, தொன்மையானது. குன்றிருக்கும் இடமெல்லாம் முருகப்பெருமான் இருப்பார் எனும்படி முன்பே இருந்த ஆலயம் அது, ஆனால் சமண பௌத்த காலம் இதர குழப்பமான அந்நிய ஆட்சிக் காலங்களில் அது அடையாளமற்று போனது.

அதனைக் காஞ்சி மகான் எனும் அவதாரம் மீட்டுக் கொடுத்தார், அதைத் தொடர்ந்து அது ஒளிவீசி எழுந்து ஜொலிக்கின்றது.

மலை உச்சிக்குச் செல்லும் வழியில் ஒரு சிவ-பார்வதி சரபேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கே, வடக்கு நோக்கிய கருவறையில் சுந்தரேஸ்வரர் அருள்பாலிக்கின்றார். லிங்கத்தில் சிவனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.

மீனாட்சிக்குத் தனிச் சந்நதி, நடராஜர் சந்நிதியும். இங்கு உண்டு, இங்கு நடராஜர் தான் பாதம் தூக்கும் நடராஜர் என்று அழைக்கப்படுகிறார்.

மலையின் அடிவாரத்தில் சித்தி விநாயகர், இடும்பன் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. இங்குக் காளிக்கு ஒரு சந்நதி உண்டு, அவர் ஜெயமங்கலதன்ம காளி என்று அழைக்கப்படுகிறார். நல்ல அமைதியும் பெரும் வெற்றியும் தரும் அவனுக்குப் பௌர்ணமி பூஜை மிகப் பிரசித்தி, அந்நாளில் அவள் எல்லா வரமும் தருவாள்.

உச்சியில் முருகப்பெருமான் கோவிலின் நுழைவாயிலுக்கு எதிரே ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் மற்றும் அம்மன் அலர்மேல் மங்கை தாயார் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறிய வைணவ கோயில் உள்ளது. மூலவரின் இடதுபுறத்தில் ஸ்ரீ யோக நரசிம்ம சுவாமி அமர்ந்திருக்கிறார். பிரசன்ன யோக ஆஞ்சநேயர் மற்றும் ராமானுஜருக்கு தனித்தனி சந்நதிகள் கட்டப்பட்டுள்ளன.

சுவாமிமலை கோவிலின் பிரதிபோல் கட்டப்பட்ட இவ்வாலயத்தில் முருகப்பெருமான் நின்றபடி அருள்பாலிக்கின்றார். குழந்தை வடிவில் காட்சியளிக்கும் முருகனின் கருவறைக்கு எதிரே யானை வாகனம் உள்ளது.

சந்நிதிக்கு அடியில் ஒரு தியான மண்டபம் உள்ளது. பிரகார சுவர்களில் முருகன் பாடல்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மலையின் உச்சியில், குமார தீர்த்தம் என்று அழைக்கப்படும் புனித நீர் பாயும் ஒரு வற்றாத நீரூற்று உண்டு.

இங்குப் பௌர்ணமி தோறும் கிரிவலம் உள்ளிட்ட கொண்டாட்ட வழிபாடு உண்டு. அப்படியே தைபூசம், வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை என எல்லா விசேஷங்களும் சரியாக கொண்டாடப்படும், கந்த சஷ்டி காலங்களில் திருச்செந்தூரில் நடப்பது போலவே சூரசம்ஹாரமும் நடைபெறும்.

இந்தக் கோவில் காஞ்சி மகானால் அடையாளம் காட்டப்பட்ட அற்புதத் தலம், அங்கு எந்நாளும் முருகப்பெருமான் உண்டு, அங்கு அவரை நம்பி கேட்ட காரியம் எதுவும் கிடைக்காமல் போனதே இல்லை.

திருமணம், குழந்தை தொழில்வாய்ப்பு, நோய்தீர்ப்பு என ஒரு மனிதனுக்கு வேண்டிய எல்லா வரங்களையும் தரும் அற்புதமான தலம் இது, ஒன்பது செவ்வாய்கிழமை தொடர்ந்து இம்முருகனை வழிபட்டால் எல்லாச் சிக்கலும் தீர்ந்து வாழ்வு புதிதாகும்.

சென்னையில் இருப்போரும் சென்னை செல்வோரும் வழிபட வேண்டிய முக்கியமான முருகன்கோவில் இது, அங்குச் சென்று மலர்களிட்டு நெய்விளக்கேற்றி முருகப்பெருமானை மனமுவந்துவழிபடும் போது மறக்காமல் காஞ்சி மகா பெரியவரையும் நினைத்து கொண்டால் கூடுதல் பலன் உண்டு.

எல்லா முருகன் கோவிலிலும் குறைந்தது ஒரு சித்தர் இருப்பார், இந்தக் கோவிலுக்குக் காஞ்சி மகானே அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் என்பதால் அவரோடு இந்த முருகனை வணங்கிப்பாருங்கள், நிச்சயம் பெரும் பெரும் திருப்பம் நல்லபடியாக வாழ்வில் அரங்கேறும். இது சத்தியம்.