முருகப்பெருமான் ஆலயங்கள் : கண்ணனூர் பால சுப்பிரமணியர் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : கண்ணனூர் பால சுப்பிரமணியர் ஆலயம்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே அமைந்திருக்கின்றது இந்த ஆலயம், காலத்தால் மிக மூத்த இந்த ஆலயமானது புராணக் காலத்திலே உண்டு, ராஜயோகம் தரும் இந்த ஆலயம் முருகப்பெருமான் இந்திரனை வென்று அவனின் பிணிமுக யானையினை வாகனமாக கொண்ட கோலத்தைக் காட்டி முன்பே ராஜகுருக்களால் அமைக்கப்பட்டது, மிகத் தொன்மையானது.

முருகப்பெருமான் போர்க்கடவுள் அப்படியே தமிழ் கடவுள் என்பது வெறுமனே தமிழ் மொழிக்காக மட்டுமல்ல, முருகப்பெருமான் வழிபாடு லௌகீகமும் ஆன்மீகமும் ஒருசேர அமைந்த வழிபாடு, அவ்வகையில் முருகப்பெருமானின் ஆலய வழிபாடும் இன்னும் பலவும் போருக்கான தயாரிப்புகளைக் கொடுத்தன‌.

மலை உச்சியில் இருக்கும் ஆலயத்துக்கு மலையேறி செல்வது, காடுகளில் தாக்குப்பிடிப்பது, விரதம் எனப் பசியினைக் கட்டுப்படுத்துவது, காவடி எனப் பெரிய சுமைகளைச் சுமந்து செல்வது என எல்லாமே போருக்கான உடல் பயிற்சி.
அப்படியே அலகு குத்துதல் என்பது போரின் காயங்களைத் தாங்கும் வலிமையினையும் தரும் லௌகீக பயிற்சி.

இவ்வாறு லௌகீக வாழ்விலும் முருகப்பெருமான் வழிபாடு, வேல் ஏந்திய முருகப்பெருமானின் வழிபாடு பலமான சேனைகளை உருவாக்கும் நுட்பமாகவும் இருந்தது, சரியான வகையில் முருகப்ருமான் வழிபாட்டை செய்யும் போது அது உடலினை உறுதிபடுத்தும், மனதைரியம் தரும், எச்சூழலையும் தாங்கும் வலிமை தரும், முழு வீரனாக ஒருவனை மாற்றும்.

தமிழக அரசர்களிடம் ராஜகுரு என்றொருவர் இருப்பார், அவர் யோகம் தவம் அறிவு கல்வி போர்முறை என எல்லாம் அறிந்தவராக இருப்பார், அப்படியான ஞானியர் இதனை உன்னிப்பாக உணர்ந்தே முருகப்பெருமான் வழிபாட்டை ஊக்குவித்தார்கள்.

இப்படிப் பாண்டியருக்காக உருவான ஆலயம் கண்ணனூர் முருகப்பெருமான் ஆலயம், அரசர்கள் வழிபடும் இந்த ஆலயத்தில் முருகப்பெருமான் பிணிமுக யானையில் வரும் கோலத்தில் காட்சியளிப்பார், அதாவது அரசயோகம் பெரும் போர்வெற்றிகள் இதர வெற்றிகளைத் தரும் ஆலயம் இது, ரிஷிகள் அப்படித்தான் இந்த ஆலயத்தை அமைத்தார்கள்.

மகா தொன்மையான இந்த ஆலயத்தைப் பாண்டியர் சோழர் என எல்லோரும் கொண்டாடினார்கள் என்றாலும் பல்லவர்கள் அடக்கி வைத்த சோழ இனத்தை மீள மேல் எழுப்பிய விஜயாலய சோழன் காலத்தில் இது பெரும் இடம் பெற்றது.

பல்லவரை ஒடுக்குமுன் விஜயாலய சோழன் இந்த முருகப்பெருமானை வழிபட்டு போரைத் துவக்கினான், அதில் அவன் வென்று பலமான சோழ சாம்ராஜ்யத்துக்கு அடிகோலினான்.

அவன் மகன் ஆதித்த சோழன் இந்த ஆலயத்தை கற்களால் கட்டினான், சோழ நாட்டில் அன்று, தமிழகத்திலே முருகப்பெருமானுக்காக கல்லால் எழும்பிய முதல் ஆலயம் இதுதான் என்கின்றன வரலாறுகள், அதாவது கற்களால் முழு ஆலயம் சாத்தியமா எனச் சோதிக்கப்பட்ட ஆலயமும் இதுதான்.

அது மிகச் சரியாக அமைந்தது, இந்த ஆலயத்தில் இருந்துதான் கற்களைச் செதுக்கி கற்றளி அமைக்கும் முறை வந்தது, பல ஆலயங்கள் அதிசய கற்றளிகளாய் எழுந்தன‌.

உண்மையில் கற்களைச் செதுக்கும் நுட்பம் முன்பே இருந்தது, அதைக் கொண்டுதான் கல்லணையெல்லாம் எழுப்பினார்கள். அப்போதும் கற்களால் கோவில்கட்டும் கலை இருந்தது, ஆனால் சமண பௌத்த காலத்தில் இவை அழிந்துபோயின, அது மீள எழ பலகாலமாயிற்று.

விஜயாலய சோழனின் மகன் ஆதித்த சோழன் இந்த ஆலயத்தை கட்டி வழிபட்டான். அதிலிருந்து சோழ வம்சம் எழுந்தது, அவர்கள் எழ எழ கற்கோவில்களும் எழுந்தன, அந்த வம்சத்தின் எட்டாம் மன்னனான ராஜராஜசோழன் தஞ்சை பெரியகோவில் எனும் அற்புதமான முழுக் கற்கோவிலை கட்டிவைத்தான், அவன் மகன் கங்கை கொண்ட சோழபுரத்தில் அப்படி ஒன்றை அமைத்தான்.

இதற்கெல்லாம் முன்னோடி இந்தக் கண்ணனூர் முருகப்பெருமான் கற்கோவில் முழுக்கக் கல்லால் அமைந்த கோவில்.

சோழர்கள் காலத்துக்குப் பின் ஜடாவர்ம சுந்தரபாண்டியன் இந்த ஆலயத்தைக் கொண்டாடினான், பெரும் திருப்பணிகளைச் செய்தான், அவனுக்குப் பின் பிற்கால பாண்டியரும் நாயக்கர்களும் செய்தார்கள்.

இந்த ஆலயம் அரசபோகத்தை அரச செல்வாக்கை தரும், யார் தன்னலம் மறந்து தங்கள் மக்களுக்காக குடிகளுக்காக நாட்டுக்காக முருகப்பெருமானை வழிபடுவார்களோ அவர்களுக்குப் பெரும் பாக்கியம் தரும் ஆலயம் இது.

சிறிய ஆலயம் என்றாலும் முழுக்க கற்களால் அமைக்கப்பட்ட ஆலயம் இது ன, அக்கால கிரானைட் கற்களைக் கொண்டு உறுதியாய் அமைக்கப்பட்ட இவ்வாலயத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து முருகப்பெருமான் காட்சியளிக்கின்றார், கோவிலில் கருவறையுடன், அர்த்த மண்டபம் , அந்த்ராள மண்டபம், மகா மண்டபம் எனச் சில சிறிய மண்டபங்கள் உண்டு.

இங்கு முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நான்கு கரங்களுடன் நிற்கின்றார், வலது மேல் கையில் சூலம் கீழ் கையில் அபய முத்திரை, இடது மேல் கையில் ஆயுதம் கீழ் கையினை இடுப்பில் வைத்தபடி அருள்பாலிக்கின்றார்.

ஆம், இங்கு முருகனின் ஆயுதம் வேல் அல்ல மாறாக திரி சூலம், சிவனும் முருகனும் வேறல்ல என்பதைச் சொல்லும் தத்துவம் இது.

கால்களில் ருத்திராட்ச மாலையும் தண்டமும் அணிந்து, மோட்ச தத்துவமும் அதாவது கர்ம தத்துவமும் வீர வாழ்க்கை தத்துவமும் சொல்லும்படி முருகப்பெருமான் காட்சித் தருகின்றார்.

எல்லா வித கர்மத்தையும் போராடி வெற்றியாக்கும் முருகப்பெருமான் இவர், அரசனின் கர்மா போர்களைச் செய்து மக்களைக் காப்பது நாட்டைக் காப்பது, அந்தக் கர்மம் வெற்றிபெற அரசன் வீரசுவர்க்கம் பெற வழிகாட்டும் ஆலயம் இது என்பது இதன் தாத்பரியம்.

ஆலயத்தின் நான்கு முனைகளிலும் யானை சிலை உண்டு, தெற்கு பக்கம் தட்சணாமூர்த்தி அருள் பாலிக்கிறார், இங்கு வள்ளி தெய்வானை எல்லாம் இல்லை முழுக்கக் கர்மம் செய்ய வரமும் பலமும் போராட்ட வைராக்கியமும் தருபவராக முருகப்பெருமான் காட்சியளிக்கின்றார்.

ஆலய கற்சுவர்கள் முழுக்கச் சோழர்களும் பாண்டியர்களும் செய்த திருப்பணிகள் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளன, சுமார் ஆயிரம் வருட வரலாற்றை அவ்வாலயம் சுமந்து நிற்கின்றது.

இதனால் தொல்பொருள் இலாகாவிடம் இந்த ஆலயம் ஒப்படைக்கப்பட்டது, அத்துறை வசம் உள்ள பழங்கால முருகப்பெருமான் ஆலயங்களில் இது முக்கியமானது.

திருமயம் பக்கம் செல்லும்போது இந்த ஆலயத்தை தவறவிடாதீர்கள், இது மன்னர்களை உருவாக்கும் ஆலயம் மட்டுமல்ல யாரெல்லாம் தன் குலம், தன் குடும்பம் , தன்னை நம்பிய மக்கள் எனக் காக்க போராடுவார்களோ , யார் தன்னை மறந்து தன்னை நம்பியவர்களுக்காக போராடுவார்களோ அவர்களுக்கு ராஜயோகமும் முழு வெற்றியும் தந்து உயர்த்தும் ஆலயம்.

திருமயம் கோட்டையின் காவல் தெய்வமாக இம்முருகப்பெருமான் ஆலயம் அமைந்ததிருந்த காலமும் உண்டு.

ஒருமுறை நீங்களும் சென்று வழிபட்டு பாருங்கள், விஜயாலய சோழன் முதல் ராஜராஜ சோழன் என எல்லாச் சோழ மன்னர்களுக்கும், ஜடாவர்ம சுந்தரபாண்டியன் முதல் குலசேகர பாண்டியன் வரை எத்தனையோ மன்னர்களுக்கு அருள் செய்த இந்த முருகப்பெருமான் உங்களுக்கும் இந்திர சம்பத்தைத் தருவார். இது சத்தியம்.