முருகப்பெருமான் ஆலயங்கள் : சேலம் கந்தாஷ்ரமம்.
முருகப்பெருமான் ஆலயங்கள் : சேலம் கந்தாஷ்ரமம்.
காலம்தோறும் தன் அடியார்கள் மூலம் தனக்கான ஆலயத்தை அமைத்து இந்த மக்களை தன்பால் ஈர்த்து நல்வரம் வழங்கி வருபவர் முருகப்பெருமான், தலைமுறை தலைமுறையாக இந்த அதிசயம் நடந்துகொண்டே இருக்கும், இந்தியா எனும் ஞானப்பூமியில் இந்த அதிசயம் எல்லாக் காலமும் உண்டு.
அப்படித் தன் அடியார் மூலம் முருகப்பெருமான் உருவாக்கிக் கொண்ட ஆலயமே சேலம் கந்தாஷ்ரமம், இதனை உருவாக்கியவர் சித்தரும் முருகப்பெருமான் அடியாருமான ஸ்ரீமத் சாந்தானந்த சரஸ்வதி எனும் அற்புதமான முனிவர்.
இவர் மதுரை அருகே ஒரு அந்தணக் குடும்பத்தில் 1921ல் தோன்றினார், இம்மகான் பிறப்பார் எனக் கட்டியம் கூறியவர் மதுரை சூட்டுக்கோல் சித்தர், அவர் அப்பக்கம் சென்றபோது திடீரென ஒரு வீட்டுக்குள் சென்று உணவு கேட்டார், அவர்களும் அவரை உபசரித்தனர், உணவருந்திய சுவாமி 9 குழந்தைகள் இருந்தாலும் பத்தாவது உங்களுக்கு முருகனே வந்து பிறப்பார் என அருள் வழங்கிச் சென்றார்.
மாயாண்டி சித்தரின் அருளால் பிறந்த அக்குழந்தைக்குச் சுப்பிரமணியம் எனச் சுவாமியே பெயரிட்டார், சுப்பிரமணியம் பிறந்து வளரும்போது சுவாமியின் அனுக்கிரகமும் கிடைத்தது, பள்ளிபடிப்பை பாதியில் விட்ட சுப்பிரமணியம் அன்றைய சுதந்திரப்போராட்டத்தில் தீவிரமாக கலந்து கொண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையே அவருக்குத் தவகூடமாயிற்று, சத்ரபதி சிவாஜியும் விவேகானந்தரும் அவருக்கு வழிகாட்டியானார்கள். சுதந்திரம் கிடைத்தபோது அந்நிய காங்கிரசின் சதி, பெருகியிருந்த கம்யூனிசம், பிரிவினைவாத நாத்திக திராவிடம் என எல்லாமே சலிப்பைக் கொடுத்தன, ஆன்மீக மாற்றமே இங்குத் தெளிவினைத் தரும் என நம்பியவர் ஞானம் தேடி அலைந்தார்.
புவனேஸ்வரியின் அடியாராக ஒவ்வொரு இடமாக ஞானம் தேடி அலைந்தார் சுப்பிரமணியம். நெல்லை, மதுரை, குற்றாலம். திருச்செந்தூர் என எங்கெங்கோ ஆண்டிப்பண்டாரமாக அவர் அலைந்து அலைந்து ஞானம் தேடினார்.
ஒருமுறை நெல்லையப்பர் ஆலயத்தின் ஆறுமுகச் சந்நிதியில் அவர் தூணில் முட்டி முட்டி தனக்கோர் வழிகாட்ட வேண்டியபோது “உன் குருவினைத் தேடிப் போ’ எனும் குரல் மட்டும் கேட்டது.
தன் குரு யார் என்பதை அறிய நாடெங்கும் சுற்றினார். காசி, நேபாளம், பத்ரிநாத், கேதர்நாத் எனச் சுற்றியவர் பின் ரிஷிகேசத்தில் உள்ள சிவானந்தரின் மடத்துக்கு வந்தார், நாளெல்லாம் தவம் தேடல் என்றிருந்தவர்க்கு குஜராத்தின் ஸ்ரீதாத்தாத்ரேயரின் ஸ்ரீதத்தபாதுகா பீடம் செல்லும்படி உத்தரவு வந்தது.
அந்த மலை மிக உயரமானது, அங்குக் கொஞ்ச தூரம் ஏறிவிட்டு பின் சிரமப்பட்டு அமர்ந்து முருகா எனக் கதறினார் சுப்பிரமண்யம். அதற்குமேல் அவரால் ஒரு அடி எடுத்து வைக்கமுடியவில்லை, அந்நேரம் அவர்முன் ஒரு சித்தர் தோன்றி “மதராஸியே, உன் குரு தத்தாத்ரேயர் உன்னுடன் இருக்கின்றார் ஆனாலும் அவரைத் தேடி அலைகின்றாய், வாயைத் திற” எனச் சொல்லி ஒரு சிறிய மூலிகை குளிகையினைத் திணித்துவிட்டு மறைந்தார்.
அந்தக் குளிகை கொடுத்த பலத்தில் மின்னலென மேலேறி ஸ்ரீதாத்தாத்ரேயரின் ஸ்ரீதத்தபாதுகா பீடம் அடைந்தார். மலை உச்சியில் இருக்கும் அந்தத் தலத்தை அவர் அடைந்து தியானத்தில் இருந்தபோது “நாமக்கல் அருகே சேர்ந்தமங்கலத்தில் உன் குரு இருக்கின்றார், இப்பிறப்பில் அவரே உனக்கு வழிகாட்டுவார்” எனத் தத்தாத்ரேயர் அவருக்கு அசரீரியாய் மொழிந்தார்.
அந்தப் பதிலில் பெரும் நிம்மதி அடைந்தவர் அந்தப் பீடத்தை விழுந்து வணங்கிக் கொண்டு தாய்பசு நோக்கி ஓடும் கன்றாக சேலம் மாவட்டம் நாமக்கல் அருகே சன்னியாசிகாடு எனும் மலையில் இருந்த அந்த முனிவரை அடைந்தார்.
அவர் சுயம்பிரகாச சுவாமிகள், அவரைக் கண்டதும் நெல்லையிலும், ரிஷிகேஷ சிவானந்த ஆசிரமத்திலும், குஜராத்திலும் தனக்குச் சொல்லபட்ட குரு இவரே எனச் சொல்லிப் பணிந்தார்.
சுயம்பிரகாச சுவாமிகள் இயல்பாகச் சொன்னார் ” சுப்பிரமணியா, நீ வருவதை நாம் அறிவோம், சித்த பரமபரையில் நீ இணைக்கப்பட்டாய், அதனால் பல சித்தர்கள் வழியாய் எம்மை அடையவேண்டும் எனும் விதிப்படி பல இடம் சுற்றி எம்மை அடைந்தாய், இனி உனக்கான பணிகளைச் செய்வார், என் குருவும் உனக்குக் குருவே, அவர் புதுகோட்டை உத்தமர் எனும் மகான், அங்குச் சில திருப்பணிகளை முடித்துவிட்டு இங்கு வா” எனக் கட்டளையிட்டார்.
குரு இட்ட முதல்பணியினை ஏற்றுக்கொண்ட சுப்பிரமணியர் புதுக்கோட்டை சென்று உத்தமரின் சமாதியினை அடைந்தார், அது சமாதியும், ஓலை கொட்டகையும், ஒரு வேப்பமரமும் கொண்ட இடமாக இருந்தது.
சுவாமி அந்த வேப்பமரத்தின் அடியில் தங்கினார். வேப்பமர இலையே உணவுமாயிற்று. மழை வெயில் என எக்காலமும் மரத்தடியிலே கிடந்து மௌன விரதமும் மேற்கொண்டார், மெல்ல மெல்ல மக்கள் அவரிடம் வரத்துவங்கினர், அவரை வணங்கியவர்க்கு திருப்பங்களும் வந்தன.
சுவாமி ஒரு வார்த்தை பேசாமல் தன் வேண்டுதல் இந்தச் சமாதி கோவிலாவதே என எழுதிவைத்தார், அதன்பின் பக்தர்கள் திரண்டு அங்குக் கோவில் எழுப்பினார்கள். மிக அதிசயமாக கோவில் எழும்பியபோது அவரின் குரு சுயம்பிரகாச சுவாமிகளே வந்து கும்பாபிஷேகம் செய்வித்து அவருக்கு மிகுந்த ஆசிகளைச் செய்து அவருக்கு சத்தானந்த சரஸ்வதி எனும் பட்டத்தையும் வழங்கினார்.
சுயம்பிரகாச சுவாமிகள் இந்த நிம்மதியுடன் பிரபஞ்சத்தில் கரைந்துவிட நாமக்கல் சன்னியாசிகாட்டுக்கு வந்தார் சுவாமிகள், அப்போது ஒரு நாள் கனவில் வந்த முருகப்பெருமான் அருகிருக்கும் மலையில் ஓடை அருகே தான் குடிகொண்டிருக்கும் இடத்தைச் சொல்லித் தனக்கோர் ஆலயம் அமைக்கச் சொல்லிக் கேட்டார்.
முருகப்பெருமானே தன்னிடம் தான் இருக்குமிடம் சொல்லிக் கோவில் கட்டச் சொன்னதால் மறுநாளே அந்த இடம் நோக்கி ஓடினார் சுவாமிகள், கனவில் கண்ட இடத்தை அடைந்து இங்கு எங்கு கோவில் கட்டுவது என அவர் சிந்தித்தபோது அங்கு ஒரு மயில் திடீரென வந்து ஆடிக்கொண்டிருந்தது.
அந்த மயிலை உற்றுப் பார்த்த சுவாமிகள் அதில் முருகப்பெருமான் இருப்பதைக் கண்டு “பழனியப்பா” எனச் சொல்லி விழுந்து வணங்கினார், பின் கோவில்கட்டும் பணி ஆரம்பமாயிற்று.
1967 முதல் 1968 க்குள் இந்த ஆலயம் வளர்ந்தது, முதலில் சாலை அமைந்தது, புதுக்கோட்டையில் “மாருதி கபே” என்ற சிற்றுண்டிக்கடை முதலாளி ஒரு பஞ்சலோகத்தினால் செய்யப்பட்ட முருகப்பெருமானைக் கொண்டு வந்து ஸ்வாமிகளிடம் கொடுத்தார். அன்று இரவே முருகன் அவரிடம் “கல்விக்கிரகம் செய்” என்றார்.
அப்படியே சுவாமிகள் கல் விக்கிரகம் செய்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டே இருந்தபோது அவருக்கோர் சந்தேகம் வந்தது, முருகன் சொன்னது கல் விக்ரகமா இல்லை கல்வி கிரகமா எனக் குழம்பினார், அந்தக் குழப்பமே வேதகல்வி வழங்கவேண்டும் எனும் முடிவுக்குச் சுவாமிகளை வரச்செய்தது.
அதன்படி 1969 முதல் வேத பாடசாலை ஒன்றைத் தொடங்கினார், 1970ல் கல் விக்ரகம் கோவிலுக்கு வந்தது.
1970 ல் ஸ்வாமிகளின் உத்தரவின்படி கல் விக்கிரகச் சிலை வடிக்கப்பட்ட ஸ்ரீ ஞான ஸ்கந்தகுருநாதன் சிலை இங்கு வந்து சேர்ந்தது..
முருகனுக்கு சக்தி வேல் கொடுத்த பராசக்தியான துர்கா பரமேஸ்வரியையும், ஐம்பொன் விக்கிரகமாய் வடித்துத் தாயும் சேயும் எதிரெதிரே அமைத்துப் ப்ரார்த்தனை மண்டபம் அமைத்து 1971ல் மிகச் சிறப்பாக அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 1968 முதல் 1986க்குள் 18 வருஷத்துக்குள் ஷண்மத ஸ்தாபனம் செய்தார் சுவாமிகள்.
18 என்பது இந்துக்களுக்கு ஒரு சரியான அளவு, புராணம் முதல் எல்லாமே 18, சாஸ்தாவுக்கு 18 படிகள் என்பதைக் கொண்டு, தன் 18 ஆண்டு கால திருப்பணியில் அன்னைக்கு 18 கரம், முருகனுக்கு 18 கரம் என எல்லாமே அந்தக் கணக்குப் படி அமைத்தார், இந்தக் கணக்கு துல்லியமாய் நீள அகல கணக்கிலும் வரும்.
பக்தர்கள் தங்களை ஆத்ம பரிசோதனை செய்ய பிரார்த்தனை மண்டபமும் கட்டி அந்த சோதனையினைச் செய்யும் பயிற்சியினையும் அவரே எழுதிவைத்தார்.
எங்கும் இல்லாதபடி நான்கு வேத மூர்த்திகளுக்கு நடுவே அம்பிகையான பரமேஸ்வரி என்று போற்றப்படும் ஸ்கந்தமாதாவையும், ப்ரதிஷ்டை செய்து நேர் எதிரில் பிள்ளையார் (வல்லப கணபதி), முருகன் (ஞான ஸ்கந்தகுருநாதர்), நடராஜர் சிவகாமியுடன் ஹரி ஹர புத்திரரான ஐயப்பனையும் ப்ரதிஷ்டை செய்து குருவும் தெய்வமும் ஒன்று குறிப்பால் உணர்த்தினார்.
அப்படியே தம் குரு சுயம்பிரகாச சுவாமிகள்,பரம குரு உத்தமர் ஆகியோரை அம்பாள் சந்நிதிக்கு அருகில் ப்ரதிஷ்டை செய்துள்ளார்.
சுவாமிக்கு ஆதி சங்கரர்மேல் அபார பற்று உண்டு, அதனால் அவர் சொன்ன ஆறு வகை வழிபாடு செய்ய வழி வகுத்துக் கொடுத்தார்.
சௌர மதத்துக்கு ஸ்ரீ சூரிய பகவான், சாக்த மதத்துக்கு ஸ்ரீ பராசக்தி, வைணவ மதத்துக்கு ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர்,
காணபத்ய மதத்துக்கு ஸ்ரீ பஞ்சமுக ஹேரம்ப மஹா கணபதி, சைவ மதத்துக்கு ஸ்ரீ தத்த பகவான் எனும் பாணலிங்கம் (இது நர்மதை நதியில் இருந்து வந்தது) கௌமார மதம்த்துக்கு முருகப்பெருமான்.
இப்படி ஷண் மதங்களையும் வழிபடச் செய்தவர், நோயற்ற வாழ்வுக்குத் தன்வந்திரியினையும் வளமான வாழ்வுக்கு ஆகர்ஷண பைரவரையும் அங்கு ஸ்தாபித்தார்.
அவர் அமைத்த நான்கு வேதங்களின் சாயல் அற்புதமானது , வேதங்களில் முதலாமவர் ரிக். இவர் கழுதை முகம் கொண்டவர். இரண்டாமவர் யஜுர். இவர் ஆட்டு முகத்தைக் கொண்டவர். மூன்றாமவர் ஸாமர். இவர் குதிரை முகத்தைக் கொண்டவர். நான்காமவர் அதர்வணர். இவர் குரங்கு முகம் கொண்டவர்.
வேறு எங்கும் காணமுடியதபடி வியாசர் சொன்ன அந்தத் தத்துவப்படி அருமையாய் இவற்றை அமைத்துக் கொடுத்தவர் சுவாமிகள்.
தன் ஞானகுருவான தத்தாத்ரேயருக்கு 16 அடி உயர சிலையினை அவர் அமைத்து அந்த குஜராத் தத்தாத்ரேய பீடத்தை, தனக்கு ஞானம் வழங்கிய இடத்தை மறவாமல் பதிந்து வைத்தார்.
1965 முதல் இங்குத் திருப்பணிகள் செய்த சுவாமி சென்னையிலும் கந்தராஷ்ரமம் ஒன்றை அமைத்து மக்களை வழிபடச் செய்தார், 2002 வரை உடையார்பட்டியில் வாழ்ந்து முருகப்பெருமான் பணி செய்த அந்த மகான் அங்கே சமாதியுமானார்.
சுவாமியின் மாபெரும் சாதனை புதுக்கோட்டை உத்தமர் சமாதியினைத் தன் குருவுக்காய் கோவிலாக்கியது, அப்படியே உடையார்பட்டியில் முருகனுக்காக கந்தராஷ்ரமம் உருவாக்கி அங்கே தானும் தங்கிச் சமாதியானது.
சுவாமி இந்த நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய மகான் வள்ளிமலை சுவாமிகள், பாம்பன் சுவாமிகள் போல மாபெரும் கர்ம யோகி, சூட்டுக்கோல் சித்தரால் முன்னறிவிக்கப்பட்டு பிறந்த அம்மகான் சுயம்பிரகாச சுவாமிகளால் பெரும் நிலையினை எட்டினார்.
அவரின் வாழ்வும் ஞானப்போராட்டமும் அதிசயமும் திருப்பங்களும் நிறைந்தது, ஆனால் எல்லா வகையிலும் முருகப்பெருமான் அவரோடு இருந்து அவரை நடத்தி தனக்கான ஆலயமும் அமைத்துக் கொண்டார்.
சேலம் பக்கம் செல்லும்போது இந்த உடையார்பட்டி கந்தராஷ்ரமத்தைக் காணத் தவறாதீர்கள், அங்கு வேதங்கள் உண்டு; ஈசன் உண்ட;, அன்னை உண்டு; சனாதனம் சொல்லும் ஆறுவகை மதங்களும் அங்கே உண்டு.
அவர்கள் நடுவில் கோபுர கலசமாக ஒளிவீசும் முருகப்பெருமானை வணங்கி நில்லுங்கள், நெய் தீபமேற்றி மாலையிட்டு வணங்குங்கள். எல்லா அற்புதமும் உங்களுக்கு நடக்கும், அப்படியே அந்தத் தத்தாத்ரேயரை வணங்குங்கள் பெரும் ஞானம் பிறக்கும்.
மறவாமல் சத்தானந்த சுவாமிகளின் சமாதிக்கும் சென்றுவாருங்கள், அன்னை புவனேஸ்வரியினை எண்ணி அவரை வணங்குங்கள். எல்லா நன்மையும் அருளும் உங்களைச் சூழும், மாபெரும் அற்புதங்கள் உங்கள் வாழ்வில் நடக்கும். இது சத்தியம்.