முருகப்பெருமான் ஆலயங்கள் : குகை முருகன் கோவில் மற்றும் பூக்காரதெரு கோவில், தஞ்சாவூர்.
முருகப்பெருமான் ஆலயங்கள் : குகை முருகன் கோவில் மற்றும் பூக்காரதெரு கோவில், தஞ்சாவூர்.
தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் தச்சங்குறிச்சியில் அமைந்திருகின்றது இந்தக் குகை முருகன் ஆலயம், இது மலையில் இருக்கும் குகை அன்று. மாறாக, நிலத்தடியில் சுரங்கப்பாதையில் இருக்கும் குகை ஆலயம்.
இந்தச் சுரங்கம் முற்கால சோழர்கள் அன்று அமைத்த சுரங்கப்பாதையின் ஒர் இடம், அரச பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட இச்சுரங்கம் மிக நீண்டது என்றாலும் சோழர்களின் முக்கிய இடங்களை இணைப்பது என்றாலும் ஒரே ஒரு இடத்தில் மட்டும் அந்தச் சுரங்கத்தில் இந்த முருகன் ஆலயம் அமைந்துள்ளது.
தச்சங்குறிச்சியில் இந்தச் சுரங்கத்தின் வாசல் உண்டு, இது நான்கு சுரங்கங்கள் செல்லும் பாதையின் மையமாக அமைந்திருப்பதால் முக்கிய இடமாயிற்று. அங்கே முன்பு சித்தர்கள் அடியார்கள் தவம் செய்திருக்கின்றார்கள், எப்போதும் குகை போன்ற சுரங்க அமைப்புகள் தவம் செய்ய ஏற்றவை என்பதால் இங்கு முற்காலத்தில் பல சித்தர்கள் தவம் செய்து சித்தி அடைந்தார்கள்.
அந்த இடம் முருகப்பெருமான் அருள் வழங்கும் இடமாயிற்று. முருகப்பெருமானும் சிவலிங்கமும் இருந்த அந்தக் குகை மிகச் சிறியது என்பதால் முருகப்பெருமானை வெளியில் வைத்து வழிபட ஆரம்பித்தனர், குகைக்குள் சிவலிங்கம் எப்போதும் போல் உண்டு.
பாம்பாட்டி சித்தர் போன்ற பல சித்தர்கள் வழிபட்ட இடம் இது.
சித்தர்களும் யோகியர் பலரும் வந்த இடம் என்பதால் சூட்சும சக்தி அதிகம், பல உண்மைகளை மனதிற்குள் உணர்த்தும் இடம் இது, மிகத் தெய்வீகமான அனுபவத்தைத் தரும் இடம் இது.
கோவிலின் வாசலில் வேப்பமரத்தடியில் முத்துமாரியம்மன் அருள் பாலிக்கின்றாள், அடுத்து சிறிய ஆலயமாக ராஜதண்டாயுதபாணி என முருகப்பெருமான் அருள்பாலிகின்றார். முருகப்பெருமான் தண்டாயுதபாணியாக எப்போதும் ராஜ அலங்காரத்திலே இருக்கின்றார், கையில் இருக்கும் தண்டம் அவர் உடலோடு சேர்ந்தே இருக்கின்றது.
மேற்கு பார்த்து அமைந்திருக்கும் முக்கிய ஆலயம் இது.
சோழர்கள் குகையில் வைத்து வணங்கிய முருகன் என்பதால் அவர் ராஜ அம்சம் கொண்டவர், ராஜ அலங்காரத்திலே இருக்கவேண்டும் என்பது சோழர்கால முடிவு. அது இப்போதும் தொடர்கின்றது.
சோழர்களைப் போலவே இந்த முருகப்பெருமானும் மக்களுக்கு நல்லாட்சி தருகின்றார், எல்லாச் சிக்கலும் இங்குத் தீர்வதால், எல்லாருக்கும் நீதியும் நல் வரமும் கிடைப்பதால் கூட்டம் எப்போதும் அலைமோதுகின்றது.
மிக முக்கிய அதிசயமாக இங்குச் சித்தர்கள் வாழ்ந்ததால் பல நோய்களுக்கு மருந்தும் காலம் காலமாக உண்டு, முக்கியமாகச் சர்க்கரை வியாதி தீர்க்கப்படும் மருந்து சித்தர்கள் வழியில் வழங்கப்படுகின்றது, இது முற்றிலும் சர்க்கரை நோயினை தீர்க்கின்றது. சாட்சிகள் ஆயிரமாயிரம்.
சர்க்கரை நோயினால் அவதிப்படும் மக்கள் இங்கு வந்தால் நிச்சயம் நோய் தீரும், அப்படியே குழந்தைவரம் இல்லாப் பெண்கள் இங்கு வழிபட்டால் 21 நாட்களில் குழந்தை பாக்கியம் உறுதி.
இன்னும் என்னவெல்லாம் வேண்டுவீர்களோ அதெல்லாம் கிடைப்பது உறுதி, அவ்வகையில் ஏகப்பட்ட பக்தர்களின் குறை தீர்வதால் அவர்களெல்லாம் கூடி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இங்குக் கொடுக்கும் அன்னதானமும் பெரும் வழிபாடும் மகா பிரசித்தி.
பழனிக்குச் செல்லமுடியா முருகப் பக்தர்கள் இந்த ஆலயத்தை பழனியாகவே நினைத்து வழிபடுகின்றார்கள், முருகப்பெருமானும் பழனியில் கொடுக்கும் எல்லா வரங்களையும் இங்கும் கொடுத்து அருள்பாலிக்கின்றார்.
தஞ்சாவூர் பக்கம் செல்லும் போது இந்தக் குகைகோவிலைக் காணத் தவறாதீர்கள். இந்த முருகப்பெருமான் எல்லாச சிக்கலையும் தீர்த்து வைப்பார், அப்படியே அந்தக் குகையில் அமர்ந்து சிறிது நேரம் குகையில் அமர்ந்து தியானம் செய்யுங்கள், எல்லா வரமும் அருளும் உங்களுக்குக் கிடைக்கும், சர்க்கரை நோய் உள்பட எல்லாமும் அங்குத் தீரும்.
இன்னொரு முக்கிய ஆலயம் தஞ்சாவூர் பூக்காரத் தெருவில் அமைந்திருக்கும் சுப்பிரமணியர் ஆலயம்.
இந்த ஆலயத்தின் வரலாறு தஞ்சாவூரில் அன்று மாறாக திருசசெந்தூரில் இருந்து தொடங்குகின்றது, திருச்செந்தூர் என்பது முருகப்பெருமானின் அடியாரான சித்தர்கள் காலங் காலமாக வாழும் பூமி, அந்தக் கோவிலைக் கட்டியதே சித்தர்கள்தான். அவ்வரிசையில் எப்போதும் லௌகீக கண்களால் அறியமுடியாத சித்தர்கள் அங்கு எக்காலமும் உண்டு.
18ஆம் நூற்றாண்டில் சித்தர் ஒருவர் முருகப்பெருமானின் சிலைஒன்றை வணங்கியபடி திருசசெந்தூரில் வாழ்ந்தார், அந்த ஐம்பொன்னால் ஆன முருகன் சிலைக்குக் காலையும் மாலையும் கடல் நீராலும் நாழிக்கிணறு நீராலும் அபிஷேகம் செய்து , பூக்களும் தூபமுமிட்டு வழிபட்டு வந்தார், அவர் தன் அந்திம காலம் வருவதை அறிந்து தனக்குப் பின் இந்தச் சிலையினை யாரிடம் ஒப்படைப்பது எனத் தெரியாமல் முருகனிடமே முறையிட்டு வந்தார்.
அவர் கனவில் வந்த முருகப்பெருமான் தஞ்சாவூரில் இருந்து வந்து தன்னை வணங்கும் பக்தன் ஒருவனிடம் ஒப்படைக்கச் சொல்லி மறைந்தார், அப்படியே அந்தப் பக்தரின் கனவிலும் சென்று தன் சிலையினைத் தஞ்சாவூர் பூக்காரத் தெருவில் ஸ்தாபனம் செய்யும்படிச் சொல்லி சிலை கிடைக்கும் வழியினை அதன் உருவினைச் சித்தரைக் காட்டி மறைந்தார்.
ஒரு சஷ்டி அன்று முருகப்பெருமான் உத்தரவின் பேரில் சித்தர் சுவாமி சிலையுடனும், பக்தரோ சிலை யார்மூலம் வரும் எனும் எதிர்பார்ப்புடனும் கோவில் முன் வந்தார்கள். கனவில் தான் கண்ட உருவம் இது என்பதை அறிந்த பக்தர் அவர் காலில் விழுந்து வணங்கினார், அவரிடம் சிலையினைக் கொடுத்து ஆசீர்வதித்த சித்தர் முருகப்பெருமான் கோவிலுக்குள் சென்று மறைந்தே போனார்.
சித்தர்கள் திருச்செந்தூர் ஆலயத்தில் இப்படி மறைவது வழமை என்றாலும் அந்தப் பக்தர்க்கு உளமெல்லாம் சிலிர்த்து போனது, வந்தது பெரும் அவதாரமா சித்தரா முருகப்பெருமானா எனத் திகைத்துபோன அவர் கோவில் வாசலில் வீழ்ந்து வணங்கிவிட்டு தஞ்சாவூர் வந்து அந்தப் பூக்காரத் தெருவில் இந்த முருகனை ஒரு குடிசையில் ஸ்தாபித்தார்.
மெல்ல மெல்ல கூட்டம் வந்தது, வந்த கூட்டம் பன்மடங்காய்ப் பெருகிக் கொண்டே சென்றது, அந்த இடமோ தனியார் இடம், சீனிவாச பிள்ளை என்பவர்க்கு சொந்தமானது.
நடக்கும் காட்சிகளைக் கண்ட அவர் எல்லாம் முருகனின் செயல் என அறிந்து தனது நிலத்தை கோவிலுக்கே கொடுத்துவிட்டார். அதிலிருந்து மெல்ல மெல்ல எழும்பிய ஆலயம் இன்று தஞ்சாவூரின் முக்கிய முருகப்பெருமான் ஆலயமாகத் திகழ்கின்றது.
தஞ்சாவூரிலும் அறுபடை வீடுகளின் அம்சத்தில் ஆறு முருகப்பெருமான் திருக்கோவில் உண்டு, அதில் இக்கோவில் திருச்செந்தூர் ஆலய அம்சமாக அருளுடன் நிற்கின்றது, தஞ்சாவூர் பக்கமிருந்து திருச்செந்தூர்க்கு வரமுடியாப் பக்தர்கள் இந்த ஆலயத்தைத்தான் திருச்செந்தூரான் சந்நிதியாக வணங்கி செந்தூருக்கு வந்த அருளைப் பெறுகின்றார்கள்.
வாசலில் முருகப்பெருமானும் விநாயகரும் அழைக்கும்படி இந்த ஆலயம் பக்தர்களை வரவேற்கின்றது, உள்ளே வள்ளி தெய்வானையுடன் திருச்செந்தூரில் நிற்கும் கோலத்துடன் அந்த ஐம்பொன் விக்ரஹத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கின்றார், கேட்ட வரம் அத்தனையும் திருச்செந்தூரில் கிடைப்பது போல் இங்கும் கிடைக்கும்.
தஞ்சாவூர் செல்லும் போது தச்சங்குறிச்சி குகை முருகன், நகரினுள் இருக்கும் பூக்காரத் தெரு சுப்பிரமணியர் ஆலயம் என இரண்டையும் தரிசித்து வழிபட மறவாதீர்கள், பழனிக்கும் திருசெந்தூர்க்கும் சென்ற பலன் அங்கே உண்டு, சென்று பாருங்கள் அந்த அருளை நீங்களே உணர்வீர்கள். இது சத்தியம்.