முருகப்பெருமான் ஆலயங்கள் : பாளையஞ்சாலை சாலைகுமாரசாமி திருக்கோவில் : திருநெல்வேலி.
முருகப்பெருமான் ஆலயங்கள் : பாளையஞ்சாலை சாலைகுமாரசாமி திருக்கோவில் : திருநெல்வேலி.
இந்த ஆலயத்தின் வரலாறு திருச்செந்தூர் கோவிலை 16ஆம் நூற்றாண்டில் ஆக்கிரமித்துக் கொள்ளையிட்ட காலத்தில் இருந்து தொடங்குகின்றது. அப்போது இலங்கையிலும் இன்னும் வங்கம் பக்கத்திலும் கால் பதித்திருந்த டச்சுப்படைகள் ராமநாதபுரம் கடற்கடையும், சங்கு குளிக்கும் தொழிலையும் செய்தது, அதற்கான உரிமைகளைப் பெற்றிருந்தது.
அதே நேரம் போர்ச்சுகீசியர் போன்றோருடன் மோதலும் இருந்தது. நாயக்கர் மன்னர்கள் போர்ச்சுகீசியருடன் ஆயுத வியாபாரம் செய்தவகையில் டச்சுகாரரும் அதைச் செய்யமுயன்று சில குழப்பங்கள் உருவாகிக் கடலோரங்களைக் குறிவைக்க தொடங்கினர். காயல்பட்டணம் போன்ற இடங்களில் ஆதிக்கம் செலுத்தினர்.
இப்படியான காலத்தில் கிழக்குக் கடற்கரையோரம் பல ஆக்கிரமிப்புக்களைச் செய்திருந்தார்கள், அன்றைய நாயக்க மன்னருக்குக் கடற்படை பெரிதாக இல்லை என்பதால் இவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை, இவர்கள் ஒரு கட்டத்தில் திருச்செந்தூர் முருகப்பெருமான் ஆலயத்தைக் கைப்பற்றிக் கொண்டு ஆயுதகுடோன் போல் வைத்துக் கொண்டார்கள்.
அப்படியும் ஒரு காலம் இருந்தது, கொடும் காலமாய் இந்துக்களுக்கு இருந்தது.
சென்னை முதல் குளச்சல் வரையிலான பகுதிகளைக் குறிப்பாக கடலூர் தொடங்கி இலங்கைக்கும் இந்தியாவுக்குமான இந்தக் கடலோர பகுதிகளின் இரு கரைகளிலும் இந்த அட்டகாசம் இருந்தது. இதில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போட்டியும் இருந்தது. போர்ச்சுகீசியர், பிரிட்டிஷார், பிரான்ஸ், டச்சுக்கார எனப் பலர் அவர்களுக்குள் மோதி இங்கு ஆக்கிரமிப்பினைச் செய்தாலும் அவர்கள் ஒன்றாகச் செய்த விஷயம் மதமாற்றம்.
தேரிக்காடு பக்கம் இது அதிகம் நிகழ்ந்தது. மணப்பாடு போன்ற திருச்செந்தூரின் அண்மித்த பகுதிகள் முழுக் கிறிஸ்துவமயமாயின. இந்து அடையாளங்கள் அழித்து ஒழிக்கப்பட்டன, அதே போன்ற நோக்கில்தான் திருச்செந்தூர் ஆலயமும் இந்த டச்சுக்கார கும்பலிடம் சிக்கிற்று.
மதுரையினை அப்போது திருமலை நாயக்கர் ஆட்சி செய்தார், அவர் தன் தென் மண்டல திவான் வடமலையப்ப பிள்ளை தலைமையில் திருச்செந்தூர் ஆலயத்தை மீட்க படை அனுப்பினார், வடமலையப்ப பிள்ளைதான் விருதுநகர் முதல் ராதாபுரம் வரை வறண்ட இடங்களிலெல்லாம் கால்வாய்கள் அமைத்து குளம் அமைத்து, குடியிருப்புக்களைப் பெருக்கியவர், அவரின் பெயரில் வடமலையான் கால்வாய் இன்றும் மேற்குத் தொடர்ச்சி மலை முதல் கிழக்கு கடல் வரை உண்டு.
அவர் திருச்செந்தூர் ஆலயத்தை மீட்டபோது டச்சுகாரர்கள் சண்முகநாத சிலை, நடராஜர் சிலை போன்றவற்றை தங்கம் எனக் கருதி எடுத்துக் கப்பலில் இட்டு தப்பி ஓடினார்கள், கடலுக்குள் சென்ற அவர்களைப் பின் தொடரமுடியாமல் இந்து படைகள் சோகமாய்த் திரும்பின.
சிறிது தூரம் அந்த டச்சுக் கப்பல் சென்றதும் பெரும் புயல்காற்று வீசிற்று. கப்பல் மூழ்கும் அச்சம் எழுந்தது, அஞ்சிய டச்சுக்காரர்கள் சிலையினைக் கடலினுள் இட்டனர். மறுநிமிடம் புயல் ஓய்ந்தது, மிகுந்த அச்சமுற்ற டச்சுக்காரர்கள் இனி இப்பக்கம் வரவே கூடாது எனத் தலைதெறிக்க ஓடினார்கள்.
இனி சண்முகர்க்கு கல்லில் சிலைவடித்து ஐம்பொன் கவசம் பூசலாம் என முடிவெடுத்தவர்கள் பூஜைகளைத் திருச்செந்தூரில் முறைப்படுத்தி நடக்க வைத்துவிட்டு சிலை வடிக்கக் கிளம்பினார்கள்.
அப்போது நெல்லை குறுக்குதுறை முருகன் ஆலயம் பக்கம் சிற்பத்துகுரிய பாறைகள் நிரம்ப இருந்தன, சிற்பக் கூடமாக அது விளங்கிற்று, அங்கிருந்து திருச்செந்தூர் ஆலயத்துக்குச் சண்முகர் சிலை வடிக்க வடமலையான் பிள்ளை உத்தரவிட்டார். சில மாதங்களில் சிலை தயாராயிற்று.
அதன்படி சிலைக்குரிய பூஜைகள் பல செய்து வண்டியில் கொண்டு வந்தார்கள். அந்தச் சாலை பாளையங்கோட்டைக்கு அதாவது பிரதான காவல் கோட்டை இருந்த, ஆற்றுக்கு அப்பக்கம் இருக்கும் கோட்டைக்குச் செல்லும் சாலையாய் இருந்தது, அந்தப் பாளையம் சாலை வழியாக வரும்போது ஒரு இடத்தில் வண்டி பதிந்து நின்று கொண்டது, காளைகளால் அதை இழுக்க முடியவில்லை, இனி யானைகளைக் கொண்டே இழுக்க வேண்டும் எனுமளவு வண்டி அசையவில்லை.
அது மாலை வேளையாதலால் பக்தர்கள் அங்கே தங்கிவிட்டார்கள், சிலை உடனே வந்து அதற்குரிய கண்திறப்பு உள்ளிட்ட சடங்குகளைச் செய்ய வேண்டிய சிற்பியும் அங்கே தங்கினான், அவன் மனம் குழம்பிக் கிடந்தது.
இப்படி ஒரு சோதனை அவன் சந்தித்ததில்லை.
அவன் கனவில் வந்த முருகப்பெருமான் “இங்கே தனக்கோர் ஆலயம் கட்டித் தன்னை இங்கே ஸ்தாபிக்குமாறும் திருச்செந்தூருக்குச் செல்ல அவசியமில்லை” எனச் சொல்லி மறைந்தார்.
இதுபற்றி சிற்பி சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே பாளை கோட்டை பக்கம் வசித்த வடமலையப்ப பிள்ளை கனவில் தோன்றிய முருகப்பெருமான் தன் சிலை கடலில் கிடக்குமிடத்தின் மேல் எலுமிச்சை பழம் மிதக்கும் கருடன் வட்டமிட்டுக் காட்டிக்கொடுக்கும் எனச் சொல்லி மறைந்தார், முருகனைக் கனவில் கண்ட இடத்தை வடமலையான் பிள்ளை முருகன் குறிச்சி என்றாக்கினார், இந்தப் பெயர் இன்றும் அப்பக்கம் உண்டு.
கனவில் முருகன் சொன்னபடி செய்ய அவர் தயாராகும் போது திருசெந்தூர்க்கு வந்த இந்த சண்முகர் சிலையின் வண்டி நகராமல் இருக்கும் செய்தி வந்தது. அதை அப்படியே இருக்கச் சொல்லிவிட்டு திருச்செந்தூர் சென்ற பிள்ளை முருகப்பெருமான் கனவில் சொன்னபடியே கடலில் அடையாளம் கண்டு முத்துகுளிக்கும் ஆட்களை இறக்கி சிலையினை மீட்டெடுத்தார்.
இப்போது திருச்செந்தூரில் சண்முகர் மீண்டு வந்துவிட்டதால் இந்தப் புதிய சிலையினை முருகனே கேட்டுக்கொண்டபடி சாலையோரம் ஒரு இடத்தில் ஸ்தாபனம் செய்தார்கள், அவர் பாளையஞ்சாலை குமாரசாமி என்றானார்.
இதிலிருந்து இந்த ஆலய வரலாறு தொடங்குகின்றது. திருச்செந்தூர்க்குச் சென்ற முருகன் இங்கே விரும்பி நிலை கொண்டதால் திருச்செந்தூரில் கிடைக்கும் அத்தனை பலமும் இங்குக் கிடைக்கும், இது குருவுக்கான தலமாகவும் போற்றப்படும்.
குரு ஒருவர் ஜாதகத்தில் மிக முக்கியம், குருவருள் இன்றி எந்த அருளும் நிலைப்பதில்லை, இந்த ஆலயம் குருவருளைப் பெற்றுத் தரும், அதில் உள்ள தடைகளை எல்லாம் நீக்கித் தரும்.
முருகப்பெருமானே அதி அற்புதமாய்க் குடிகொண்ட இது இன்னொரு செந்தூர் ஆலயமாகும், கேட்ட வரம் அத்தனையும் இங்குக் கிடைக்கும், குறிப்பாக திருமண வரம், குழந்தை வரம், கல்வி வரம், முக்கியமாக தொழில்வளம் தரும் ஆலயம் இது.
அன்று சாலையோரத்தில் இருந்த ஆலயம் இன்று நெல்லை ஜங்க்ஷன் அருகே திருவள்ளுவர் இரட்டை மேம்பாலம் அருகே அமைந்துள்ளது. திருச்செந்தூர் ஆலயத்தின் சிறிய வடிவமாக அதே மாதிரியில் அமைக்கபட்டுள்ள ஆலயம் இது, கோபுரம் பிரகாரம் வடிவமெல்லாம் அப்படியே திருச்செந்தூரைச் சார்ந்திருக்கும்.
கோவிலுக்குள் நுழைந்ததும் முன் மண்படம் உள்ளது. இந்த மண்டபத்திற்குள் நுழைந்ததும் முதலில் இடது பக்கம் சித்தி விநாயகர், கிழக்கு நோக்கியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்து வரவேற்கின்றார், இந்த விநாயகரை வணங்கி உள்ளே செல்லவேண்டும்.
அடுத்து சண்முகர், வள்ளி, தெய்வானை ஆகிய சந்நிதிகள் அமைந்து உள்ளது.
அடுத்து உள்ள மணி மண்டபத்தில் இருந்துதான் பக்தர்கள் முருகப்பெருமானை வணங்க முடியும். மண்டபத்தின் தொடக்கத்தில் இடது பக்கம் விநாயகர், வலது பக்கம் கல்லிலான சிவலிங்கம் ஒன்று சுவற்றிலேயே பதிக்கப்பட்டு உள்ளது. திருச்செந்தூரில் மூலஸ்தானத்தின் பின்புறம் வலது பக்கம் பஞ்சலிங்கம் இருப்பது போல் இங்கும் அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்து வாசலில் இருபக்கமும் காவலர்கள் வீரபாகு மற்றும் வீரமார்த்தாண்டேஸ்வரர் சிலைகள் உள்ளன.
மூலஸ்தானத்தில் உள்ள முருகப்பெருமான் சிலை, ஒரே கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது. 4’/2 அடி உயரம் இருக்கும் ஆறுமுகப் பெருமான், பன்னிரு கைகளுடன் மயில் மீது அமர்ந்த கோலத்துடன் அற்புதமாக காட்சி அளிக்கிறார். பொதுவாக எல்லாக் கோவிலிலும் முருகன் அமர்ந்து இருக்கும் மயிலின் தலை வலது பக்கம் நோக்கி இருக்கும். ஆனால் இக்கோவிலில் இடதுபக்கம் தலை இருக்கிறது. மேலும் முருகப்பெருமான் அருகே வள்ளி-தெய்வானை கிழக்கு நோக்கி இல்லாமல் தெய்வானை தெற்கு நோக்கியும், வள்ளி வடக்கு நோக்கியும் உள்ளனர். மூலவரான முருகப்பெருமான் கிழக்கு நோக்கி இருந்தாலும் வள்ளி, தெய்வானை எதிர், எதிரே பார்ப்பது போல் உள்ளது.
கோவில் வாசலில் இருந்து நேர் எதிரில் மணிமண்டபத்தில் சண்முகர் சந்நிதி உள்ளது. சண்முகர் மற்றும் வள்ளி தெய்வானை தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்கள். மணிமண்டப வாசலில் இருந்து ஒரே நேரத்தில் மூலவரையும், சண்முகர் சந்நிதியையும் தரிசிக்கலாம்.
இங்கு மூலவர்க்கு நடக்கும் பூஜை எல்லாம் சண்முகருக்கும் நடைபெறும். முன் மண்டபத்தில் தனியாக உற்சவர் இருப்பதால் இந்தச் சண்முகர் மூலவராகவே கருதப்படுகிறார். திருச்செந்தூரில் உள்ளது போலவே இங்கும் கோவில் வாசலில் இருந்து நேராக பார்த்தால் ஸ்ரீ சண்முகர் சந்நிதியைக் காணலாம்.
மணி மண்டபத்தை அடுத்து மகா மண்படம் அமைந்து உள்ளது. இங்கு உள்ள சுவற்றில் அறுபடை வீடுகளின் படங்கள் அழகாக வரையப்பட்டு உள்ளன. சஷ்டி கவசம் பாடல் ஒரு பலகையில் எழுதப்பட்டுள்ளது. விசேஷ காலங்களில் யாகம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் இந்த மண்டபத்தில்தான் நடைபெறுகிறது.
தைப்பூசம், வைகாசி விசாகம், சஷ்டி விரதம், சூரசம்ஹாரம் என எல்லாமும் இங்கு விசேஷமாக நடைபெறும், செவ்வாய் மற்றும் வெள்ளியில் விஷேஷ பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்யப்படும்.
நெல்லையில் மிக முக்கிய கோவில்களில் நெல்லையப்பர் கோவில் போல இதற்கும் இடம் உண்டு, நெல்லை பக்கம் செல்லும் போது சிவபெருமான் குடிகொண்ட நெல்லையப்பர் கோவில், குறுக்குதுறையில் ஆற்றில் அமைந்திருக்கும் முருகன் கோவில், உச்சிஷ்ட கணபதி கோவில் வரிசையில் இந்த ஆலயம் முக்கியமானது.
பெரும் திருவிளையாடலை நடத்தி முருகப்பெருமானே குடிவந்த இந்த ஆலயம் திருச்செந்தூர் ஆலயத்துக்குச் சென்ற புண்ணியத்தைத் தரும், வேண்டும் அத்தனையும் தரும், அங்குச் செல்லும்போது செவ்வரளி பூக்களிட்டு, நெய்தீபமேற்றி வணங்குங்கள். நிச்சயம் நீங்கள் கேட்ட வரம் அத்தனையும் கிடைக்கும். பகை நீங்கி, தடை நீங்கி எல்லா வரமும்பெற்று நீடு வாழ்வீர்கள். இது சத்தியம்.