ஜுமான்ஜி : பட விமர்சனம்
பொதுவாக ஆங்கில படம் பார்ப்பதில்லை. அவர்கள் வாய்க்குள்ளே வைத்து விஜய் போல முணங்குவார்கள், ஒரு மண்ணும் புரியாது, விமர்சனம் எழுதினால் அவர்களுக்கும் புரியாது.
கல்லூரி காலத்தில் ஓடி ஓடி பார்த்ததெல்லாம் ஆங்கில அறிவு வளரும் என சொல்லி வேறு அறிவினை வளர்த்த விஷயம்.
இப்பொழுதெல்லாம் குறிப்பிட்ட படங்களை தவிர வேறு படங்களை பார்பதில்லை, ஆங்கிலமும் புரியாது. புரிந்தாலும் விஷயம் புரியாது
இப்படியான நிலையில் jumanji என்றொரு படம் வந்திருக்கின்றது , மகள் ஆசைபட்டாள் என சென்றாயிற்று, என்ன கதையோ கடைசி வரை புரியவே இல்லை. எல்லோரும் சிரிக்கும்பொழுது சிரித்தாயிற்று, எல்லோரும் கிளம்பும்பொழுது கிளம்பியாயிற்று
வீட்டுக்கு வந்து மெதுவாக மகளிடம் கேட்டேன் அது என்ன கதை? அவளுக்கு புரிந்த அளவில் சொன்னாள்
“அப்பா அது ஒரு கேம், விளையாட ஆசைபட்டு யாரும் நுழைந்தால் அவ்வளவுதான், வேறு உலகத்திற்கு அழைத்து சென்றுவிடும, அது பயங்கரமான காடு, அங்கே நிறைய மிருகம் எல்லாம் இருக்கும், நிறைய சேலஞ்சஸ். சிக்கிட்டா அவ்வளவுதான் காலம் வரைக்கும் அங்கேயே கிடந்து அழவேண்டியதுதான் இதாம்பா கதை,
நீங்க அந்த யல்லொ ஷால் தாத்தா ரைட்டிங்க்ஸ் படிச்சி படிச்சி உங்களுக்கு ஒண்ணும் புரியாமலே போய்ட்டுப்பா”
ஒகோ இதுதான் விளையாட்டா? நுழைந்தால் இன்னொரு உலகில் நுழைந்து படாத அடி எல்லாம் பட வேண்டுமா?
நம் வாழ்வே மாறி யாரும் இல்லா காட்டுக்கு சென்றுவிடுவோமா? யாருமே உதவ முடியாதா? வெளி வரவே முடியாதா?
இந்த கதைக்கு எப்படி Jumanji என பெயரிடலாம்????
இதற்கு “தாலி”, “கல்யாணம்”, “பொண்டாட்டி” என்றல்லவா பெயர் வைத்திருக்க வேண்டும்?
இந்த வெள்ளைக்கார பயலுகளுக்கு தாலி “அருமை” தெரியாது என்பது மிக சரியாக இருக்கின்றது