காளிதாசனின் ரகுவம்சம் : 56-60
காளிதாசனின் ரகுவம்சம் : 56
ராமன் தொடர்கின்றான்.
“ஓ அச்சம் கொண்டவளான சீதையே, உன்னை அந்த அரக்கன் உன்னைத் தூக்கிச் சென்ற வழியினை இந்தச் செடி கொடிகளால் வாயால் சொல்லமுடியவில்லை. அதனால் அவன் ஒடித்துப்போட்ட கிளைகள் எனும் அதன் கைகளை தளிர்கள் எனும் அதன் விரல்களைத் தொங்கவிட்டபடி அவை எமக்கு நீ சென்ற வழியினைச் சொன்னது.
என் துயரைக் கண்ட இளம் மான்கள் அவை விரும்பும் இளம் புற்களைக் கூட உண்ணாமல் மேல் நோக்கிய (வானம் நோக்கிய) இமைகளின் வரிசையுடன் தெற்கு நோக்கி தலை தூக்கி நின்று நீ சென்ற வழியினையே பார்த்துக் கொண்டிருந்தன, நான் அறியாத அந்த வழியினை அவையே காட்டித் தந்தன.
இதோ இந்த மால்யவான் எனும் சிகரத்தில் அமர்ந்து உன்னைக் காணாமல் நான் கண்ணீர் விட்டேன். அப்போது மேகமும் எனக்குப் போட்டியாக புது நீரை மழை எனக் கொட்டிற்று, இருவர் கொட்டிய நீரும் ஒரே அளவில் இருந்தன.
காய்ந்த நிலத்தில் விழும் மழையினால் எழும் மணம், சிறிதே விரிந்த கதம்ப பூக்கள், மயிலின் அகவல்களெல்லாம் உன்னோடு இருக்கும் போது பெரும் மகிழ்ச்சித் தந்தன, ஆனால் உன்னைப் பிரிந்தபோது இவை எல்லாமே பெரிய வேதனையினைத் தந்து உன் பிரிவினைத் தாங்க முடியாதபடி செய்தது.
அதோ பார், நமது வனவாசத்தின் போது பெரும் இடி இடிக்கும் நேரம் அவை இந்த வனத்தின் குகைகளில் எதிரொலிக்கும், அப்போது நீ அஞ்சியபடி இறுகப் பற்றிக்கொள்வாய், நான் உன் நடுக்கத்தை நன்கு உணர்ந்துள்ளேன், நீ இல்லாத நேரம் அந்த மேகத்தின் சத்தம் குகைகளில் கேட்கும்போதெல்லாம் நீ என்னை தழுவியதே நினைவுக்கு வரும், அந்நினைவுகளை வலியுடன் பொறுத்தபடியே இடிச்சத்தத்தை கேட்டுச் சஹித்துக் கொண்டிருந்தேன்.
இங்குப் புதுமழை பெய்து மண்ணில் இருந்து ஆவி எழுந்து அழகிய ஈரமான செங்காந்தள் பூக்களைக் கடந்து செல்லும் காட்சியானது நமது திருமணத்தின் போது ஹோம புகை எழும்பி உன் கண்களைச் சிவக்க வைத்ததை நினைவுப்படுத்தி மனமெல்லாம் துன்பம் எழச் செய்யும், அதையும் தாங்கிக் கொண்டேன்.
வஞ்சிக் கொடிகளினால் மறைக்கப்பட்ட பம்பா நதியின் இடையே சில இடங்களில் அன்னை பறவைகள் ஜோடியாக நீந்தும், அவைகளைக் காணும்போது அந்த நதியினையே குடித்துவிடும்படி என் கண்கள் உன் நினைவால் நிலை கொண்டிருக்கும்.
இந்தப் பம்பாநதியின் மேல் பறக்கும் இணைபிரியாத சக்கரவாஹ பறவைகள் தாமரையின் மேல் கொஞ்சும் போதெல்லாம் நான் உன்னை நினைத்து ஏக்கத்துடன் தனிமையில் கலங்கிக் கொண்டிருப்பேன்.
அதோ அந்த அசோகக் கொடி பூங்கொத்துகளுடன் படர்ந்திருந்த காட்சி அழகான உன் இடையோடு கூடிய மார்பகங்கள் போல் இருந்ததால் உன்னைப் போலவே இருந்ததால் நான் மயங்கி அதைத் தழுவச்சென்றேன், லட்சுமணனே அது சீதையல்ல அசோகக் கொடி என எனக்கு நினைவுப்படுத்தினான், உன் நினைவு என்னை அப்படி மயங்க வைத்தது.
இதோ சாரச பறவைகள் இந்த விமானத்தின் மணியோசை கேட்டுத் தங்கள் இனத்தின் குரல் எனக் கருதி விமானம் நோக்கிக் கூட்டமாய் வருகின்றன, அது உன்னை எதிர்கொண்டு செய்யும் வரவேற்புபோல் இருக்கின்றதை பார்.
இதோ நாம் வசித்த பஞ்சவடி, மெலிந்த இடையினைக் கொண்ட நீ பெரிய பாரம் கொண்ட குடங்களின் நீரால் வளர்த்த மரங்களைப் பார், நீ வளர்த்த மான்கள் நம் விமானத்தின் ஓசை கேட்டுக் கழுத்தை மேல் நோக்கி பார்க்கும் அச்சமிகுந்த அழகை பார். மறுபடியும் பஞ்சவடிக்கு நீ வருவதால் என்னை விட மகிழ்பவர் யார்?
இந்தப் பஞ்சவடியில்தான் என் களைப்பு நீங்க கோதாவரிக் கரையில் உன் மடியில் தலைவைத்து படுத்திருப்பேன், கோதாவரி நதியின் குளிர்ந்த இனிமையான காற்று என்னைத் தூங்க வைக்க உன் மடியிலே தூங்கிவிடுவேன், அந்த இன்பமான நினைவுகள் மறுபடி எழுகின்றது, உன் ஸ்பரிசத்துக்கு இணையான மகிழ்ச்சி வேறு எது?
அதோ அதுதான் தன் புருவ நெறிப்பாலே இந்திரப் பதவிக்கு ஆசைபட்ட நகுஷனைப் பம்பாக்கியவரும், கலங்கிய நீரைத் தெளியச் செய்தவருமான அகத்தியரின் ஆசிரமம், அதைப் பார்.
அவர் மூவகை அக்னியினை நெய் முதலியவற்றை இட்டு எழுப்புகின்றார், அவரின் இந்த யாகத்தின் அவிஸ் பாகம் மேல் எழுந்து என்னை எட்டும்போது ரஜோ குணத்தை நான் இழப்பதை உணர்கின்றேன்.
அதோ அதுதான் சாதகர்னி முனிவரின் தடாகம், அதன் நான்கு பக்கமும் வனம் இருப்பதால் அது மேகங்கள் நடுவில் இருக்கும் வெண்மையான சந்திரபிம்பம் போலவே இருக்கும்.
அந்த முனிவரைப் பற்றி உனக்குத் தெரியும் அல்லவா? இருந்தாலும் அவரின் சரிதம் சொல்கின்றேன்.
(தொடரும்..)
காளிதாசனின் ரகுவம்சம் : 57
சீதையே இந்தச் சதாகர்ணி முனிவர் இந்த வனத்திலே இளம்புல்லின் நுனியினை மட்டும் உண்டு மான்களோடு மானாக இருந்து பெரும் தவம் இயற்றினார், அவரின் தவத்தைக் கண்டு அச்சப்பட்ட இந்திரன் ஐந்து அப்சரஸ்களை அந்தத் தவத்தைக் கலைக்க அனுப்பி அவருக்குப் பொறி வைத்தான், அவர்களிடம் முனிவரும் சிக்கினார்.
ஐந்து அப்சரஸ்களையும் மணந்த முனிவர் தன் தவவலிமையால் இந்தத் தடாகத்தின் அடியில் அரண்மனை அமைத்து சகல வசதிகளுடன் வாழ்ந்து வருகின்றார். ஐம்புலன்களும் ஐந்து அப்ரசஸ்களிடம் சிக்கிய நிலையில் அவர் முழுக்க கொண்டாட்டத்தில் இறங்கிவிட்டார்.
நீரில் மறைந்திருந்தாலும் அந்த அரண்மனையில் எழும் சங்கீத ஒலியும், மிருதங்க ஒலியும் வானில் எழுந்து நம் விமானம் மேல் எதிரொலிப்பதைக் கேள்.
அதோ அங்கே சுதீஷ்ண முனிவர் அமர்ந்திருக்கின்றார், அவர் நாலாபுறமும் விறகினால் நெருப்பினை எரியச் செய்து நெற்றியில் சூரிய வெப்பத்தை தாங்கி பஞ்சாக்னி தவம் செய்தவர், மிகக் கடுமையான அந்தத் தவத்தைக் கலைக்க இந்திரன் தேவமங்கையரை அனுப்பினான், ஆனால் சதாகர்ணி முனிவரைப் போல் இவர் சிக்கவில்லை.
தேவமங்கையர் அவரைக் கவரும் பொருட்டு தங்கள் அழகான கூந்தலை வலையாக வீசியும், புன்சிரிப்பைக் காட்டியும், வேண்டுமென்றே இடையில் மேகலையினை நழுவவிட்டும் இன்னும் பல குறிப்புகளைக் காட்டியும் அவர்களால் முனிவரைக் கவரமுடியவில்லை.
அப்படியான முனிவர் ருத்திராட்ச மாலைகளை அணிந்ததும், மான்களை தடவிக் கொடுப்பதும் இன்னும் யாகத்துக்கான தர்ப்பைப் புற்களைப் பறிப்பதுமான தன் வலது கையினால் வானில் செல்லும் நம்மை உயர்த்தி ஆசீர்வதிப்பதைப் பார்.
அவர் மௌனவிரதத்தில் இருப்பதால் நம்மிடம் ஏதும் பேசவில்லை, ஆனால் தலையினை மெல்லத் திருப்பி நம் வணக்கத்தை ஏற்றுக்கொள்கின்றார், பின் விமானத்தால் முன்பு மறைக்கப்பட்ட சூரியனை நோக்கி தன் பார்வையினைத் திருப்பித் தவத்தைத் தொடர்கின்றார்.
அதோ அந்தத் தபோவனம் சரபங்கர் முனிவருடையது, இம்முனிவர் வெகுகாலம் அக்னியால் ஹோமங்களைச் செய்துவந்தார், அதனால் புனிதமான தன் உடலையே யாக நெருப்பில் இட்டு அதையே ஆகுதியாக்கி நற்கதி அடைந்தார், அவரின் தவவலிமை இன்னும் அந்த வனத்தை பரிசுத்தமாகவே வைத்திருக்கின்றது.
தன் ஆசிரமத்துக்கு வருபவர்களை எல்லாம் நன்கு உபசரித்த அந்த முனிவர் இப்போது இல்லை, ஆனால் தந்தை இல்லா நிலையில் அவரின் புத்திரர்கள் தந்தைவிட்டுச் சென்ற கடமையினைச் செய்தல் போல முனிவர் இல்லாவிட்டாலும் அவர் ஆசிரமத்தில் அவர் வளர்த்த மரங்கள் அங்கு வரும் விருந்தினர்க்குக் கனியும் நிழலும் தந்து நன்கு உபசரித்து அவர் செய்த அதிதி பூஜை எனும் விருதினருக்கான மரியதையினைத் தொடர்கின்றது.
அளவெடுத்து செய்தது போல் அழகான உருவுடைய என் சீதையே, அருவிகளின் ஓசை எப்போதும் எதிரொலிப்பதும் சிகரங்களின் மேல் மேகம் படர்ந்திருப்பதுமான இந்தக் சித்திரக் கூட மலையின் அழகைப் பார், கூர்மையான அதன் சிகரங்களில் ஒட்டிய மேகங்கள் மண்மேட்டை முட்டி மோதும் காளை போன்ற சாயலைத் தரும், அம்மலையின் அழகில் நான் வார்த்தையற்று போகின்றேன்.
இதோ தெளிந்த நீருடன் ஓடும் மந்தாகினி நதியினைப் பார், தொலைவினால் உருவில் சுருங்கிய அந்நதி சூரிய ஒளியில் மின்னுவது இங்கிருந்து காணும் போது பூமிக்கான முத்துமாலை போலவே ஜொலிக்கும் அழகைப் பார்.
எந்தத் தமால மரத்தின் இளந்தளிரைப் பறித்து, தானிய முளை போன்ற நிறமுடைய வெளிறிய உன் கன்னத்தினை ஒட்டி காதோரம் ஆபரணமாக சூட்டி உன்னை அழகு செய்தேனோ, அந்த தமால மரங்கள் நிறைந்த வனத்தை, நாம் உலாவிய வனத்தினைப் பார்.
அதோ அது அதிரி மகரிஷியின் தபோவனம், அங்குத் தங்களைத் தண்டிப்பார் யாருமில்லை என்றாலும் விலங்குகள் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாமல் சுற்றிவரும், மரங்கள் பூக்காமலே கனிகளை வர்ஷிக்கும், அத்திரி முனிவரின் தவத்தால் வந்த பெருமை அது.
இங்குதான் அத்ரி மகரிஷியின் மனைவி அனுசூயை சப்த ரிஷிகள் கைகளுக்குப் பொற்றாமரைக் கொடுப்பதும், சிவன் தலைக்கு மாலை போல் உள்ளதுமான கங்கா நதியினை முனிவர்களின் ஸ்நானத்துக்காக பெருக்குவித்தாள்.
வீரசானத்தில் அமர்ந்து சலனற்று இருக்கும் முனிவர்களைப் போல இந்தத் தபோவனத்தின் மரங்களும் சலனமற்று அசைவற்று தியானம் செய்யும் கோலத்தில் நிற்பதைப் பார்.
எந்தச் சியாயம் எனும் ஆலமரத்திடம் என் வனவாசம் நல்லபடியாக முடிய நீ பிரார்த்தித்தாயோ அது இதுதான், இப்போது அது பச்சை இலைகள் மேல் சிகப்பு நிற கனிகளுடன் காட்சியளிப்பது பத்மராஹ கற்களுடன் கூடிய மரகத ரத்ன குவியல் போலுள்ளது.
களங்கமற்ற சீதையே, கங்கையின் அதிசயத்தைப் பார் , அது ஓரிடத்தில் நீலக்கற்களுடன் கலந்து செய்த வெண்முத்து மாலைபோல் மின்னுகின்றது, இன்னொரு இடத்தில் கருநெய்தல் மலர்களுடன் தொடுக்கப்பட்ட வெண் தாமரை மலர்கள் கொண்ட பூமாலையாய்த் தெரிகின்றது.
இன்னொரு இடத்தில் கருநிற அன்னப்பறவையோடு வெண்ணிற ராஜ அன்னங்கள் கலந்து கிடப்பது போலும், இன்னொரு இடத்தில் கருநிற மையினால் வரையப்பட்ட வரிகளுடன் கூடிய வெண்ணிற சந்தன அலங்கார கோடு போலவும் தோன்றும்.
இன்னொரு இடத்தில் மரங்களின் கருமை நிறத்தோடு கூடிய நிழலுடன் காணப்படும் நிலவு போல தோன்றும், இன்னொரு இடத்தில் கருத்த மேகங்களின் இடையில் காணப்படும் வெண்மேகத்தின் பகுதி போலவும் தோன்றும்.
இன்னொரு இடத்தில் கருநிற நாகங்களை அணிந்து வெண்ணிற நீறு பூசிய சிவனின் உடல் போலவும் தோன்றும்.
கங்கையும் யமுனையும் சேரும் இந்த இடம் புனிதமானது, அங்கு ஸ்நானம் செய்வோர்க்குத் தவமின்றி மெய்யுணர்வு இன்றியே மோட்சம் கிடைக்கும், அவர்களுக்கு மறுபிறப்பு ஒரு காலமுமில்லை.
இதோ இதுதான் வேடர்கள் தலைவனான குகனின் ஊரான சிருங்கிபேரபுரம், அங்குதான் நான் அரசனுக்குரிய சிரோரத்தின முடியினை எடுத்துவிட்டு தவசிகளுக்கான மரவுரியினை அணிந்து கொண்டேன், அப்போது மந்திரி சுமந்திரன் “கைகேயி, உனது எண்ணம் நிறைவேறிற்று” என உரக்கச் சொல்லி அழுதான்.
இதோ என் வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத சரயு நதி, அயோத்திக்கே தாயான அந்த நதி இனி என் பெயரினை எந்நாளும் சொல்லப்போகும் நதியுமாயிற்று.
(தொடரும்..)
காளிதாசனின் ரகுவம்சம் : 58
யட்சகுல பெண்கள் நீராடும் போது அவர்கள் மார்பில் படியும்படி பொற்றாமரைகள் எந்த பிரம்மசரஸ் எனும் மாசனரோவரில் நிறைந்திருக்கின்றதோ அங்கிருந்து இந்த சரயு நதி தோன்றுகின்றது.
அந்தச் சரயுநதி ஓரமெல்லாம் இஷ்வாகு மன்னர்கள் யாகம் செய்து கட்டிய யூபஸ்தம்பங்கள் காணப்படுவதைப் பார், அவர்கள் மாபெரும் யாகம் பல செய்தததாலும், யாகத்தின் புண்ணியமெல்லாம் பெற்றதாலும் இந்த நதி இன்னும் இன்னும் புண்ணியமாகின்றது, அந்தப் புண்ணிய நதி அயோத்தி பக்கமாய் ஓடுகின்றது.
இந்நதியின் மணலாகிய மடியில் புரண்டும் அதன் நீரை அருந்தியுமே உத்திரகோச மன்னர்களெல்லாம் வளர்ந்தார்கள். அவர்களுக்கெல்லாம் தாயாக இருந்த இந்நதியினை நானும் செவிலித்தாயாக கருதுகின்றேன்.
கணவனைப் பிரிந்த என் தாய் கோசலையினைப் போலவே தசரதனைப் பிரிந்ததால் அந்நதி மிகவும் சோகமுற்ற நதி தொலைவில் இருப்பினும் என்னை அதன் குளிந்த காற்று எனும் கையினால் அணைத்துக் கொள்கின்றது.
சீதையே அதோ பார், சிவந்த மாலை பொழுதின் நிறத்தில் எழும் செந்நிற புழுதியினைப் பார், நாம் வருவதை அனுமன் மூலம் தெரிந்து கொண்ட பரதன் தன் பரிவாரங்களுடன் நம்மை நோக்கி ஓடிவருவதை விட அப்புழுதி வேறு எதுவாக இருக்க முடியும்?
என் தம்பிமார்கள் எப்படிப்பட்டவர்கள்? சீதையே நான் கரண் எனும் அரக்கனை வதம் செய்யச் சென்றபோது உன்னை லட்சுமணனிடம் விட்டுச் சென்றேன். பின், லட்சுமணன் உனக்கு ஒரு ஊறும் நிகழாதபடி தாய்போல் காத்து என்னிடம் திருப்பித் தந்தான், அப்படியே இந்த ராஜ்ஜியத்தை பரதனிடம் விட்டுவிட்டு முன்னோர் வாக்குக்குக் கட்டுப்பட்டுச் சென்றேன், அதனை மிகுந்து காவல் செய்த அவன் இப்போது அதனைத் திருப்பித் தர ஓடோடி வருகின்றான், இதைவிட ஒரு அண்ணனுக்கு என்ன பேறு வேண்டும்?
அதோ மரவுரி தரித்த என் பரதன் தன் சேனைகளைப் பின்னால் நிறுத்திவிட்டு வசிஷ்டருடனும் பல மூத்தோருடனும் நடுவில் நின்று கையில் அர்க்கியம் எனும் நீரேந்தி என்னை எதிர்பார்த்து முன்னே நடக்கின்றான்.
என் தம்பி உன் பெருமையினை நான் எப்படிச் சொல்வேன், இந்த ராஜ்ஜியம் முறைப்படி தந்தையாலே உனக்குக் கொடுக்கபட்டது, அதை அனுபவிக்க எல்லா உரிமையும் உனக்கு உண்டு எனும்போதும் இப்படி விரதம் இருந்தாயே, அண்ணனுக்குரிய பாகத்தை தொடக்கூடாது என ஒரு இளைஞன் வாலிபபெண் அருகிருந்தும் அவளைத் தொடாமல் அபிசார விரதம் இருப்பது போல் கத்திமுனை விரதம் இருந்தாயே, உன் தியாகத்துக்கு ஈடேது?
பரதனைக் கண்ட ராமன் கண்கள் கசிய மனதால் விமானம் கீழே இறங்க வேண்டும் என நினைத்த உடன் விமானத்தை இயக்கும் அதிதேவதை அதை உணர்ந்து விமானத்துக்குக் கட்டளையிட விமானம் தானாகவே கீழிறங்கியது, பரதன் முதலானோர் அதை வியப்போடு பார்க்க வசிஷ்டர் மட்டும் புன்னகைத்துக் கொண்டார்.
விமானங்களில் மக்கள் கண்ணுக்குத் தெரியும் வடிவம் உண்டு, மானுடக் கண்களால் பார்க்கமுடியா விமானம் உண்டு, இது கண்களுக்குத் தெரியும் உருவமென்பதால் மக்கள் அதனை அதிசயமாய்க் கண்டனர்.
தரையிரங்கிய விமானத்தில் இருந்து ராமன் ஸ்படிக படிகட்டுகளில் இறங்கி வர முயன்றான், அவனுக்கு முன்பே கீழே பாய்ந்த சுக்ரீவன் ராமனுக்குக் கை கொடுத்து உதவினான் சுக்ரீவன், விமானத்தில் இருந்து செல்லும் பாதையினைச் சொன்னான் விபீஷ்ணன்.
மகா பரிசுத்தமான ராமன் தன் குலமுதியவரான வசிஷ்டர் காலில் விழுந்து வணங்கினான், அதன் பின் பரதன் நீரால் ராஜ்ஜியத்தை ராமனுக்கு தாரைவார்த்தான், அதைப் பெற்றுக்கொண்ட ராமன் “தம்பி..” என அழுதபடி அவனைக் கட்டியணைத்து ராஜ அபிஷேக நீர் படாத அவன் தலையினை உச்சிமோர்ந்து முத்தமிட்டான்.
தசரதனை நிரந்தரமாகவும் ராமனை தற்காலிகமாகவும் பிரிந்த அமைச்சர்களும் பெரியோரும் சவரம் செய்யா முகத்துடன் தாடியுடன் அங்கே நின்றிருந்தனர், விழுதுகளுடன் கூடிய ஆலமரம் போல் தொங்கும் தாடியுடன் நின்ற அந்தப் பெரியவர்களை நோக்கி தன் கண்களால் நலம் விசார்த்தான் ராமன்.
ராமன் தன் தம்பியிடமும் வசிஷ்டர் முதலான பெரியோரிடமும் சொன்னான் “இவன் ஆபத்து காலத்தில் எனக்கு உதவிய சுக்ரீவன், வானரங்களுக்கும் கரடிக்கும் தலைவன். இதோ இவன் புலஸ்திய வம்சத்தில் வந்தவனும் எந்த யுத்ததிலும் அஞ்சாது முன் நின்று சண்டையிடும் விபீஷ்ணன் என அறிமுகப்படுத்தினான், அவர்கள் தன் இடத்தில் இருந்து ராமனுக்கு செய்த உதவிகளை உணர்ந்த பரதன் அவர்களை வணங்கினான்.
இவர்கள் இருவரையும் வணங்கிய பரதன், பார்த்தவுடன் கலங்கும் விழிகளால் லட்சுமணனை நெருங்கினான். அதற்குமேலும் தாளாத லட்சுமணன் பரதனின் கால்களில் வீழ்ந்து அழுதான், அவனைத் தூக்கி நிறுத்திய பரதன் இந்திரஜித்தனின் அம்பினால் வடுக்கள் பெற்ற மார்போடு அவனைத் தழுவிக் கொண்டான்.
ராமன் வானரங்களுக்கு மனித உருவெடுக்கும்படி கட்டளை இட நினைத்த உரு எடுக்கும் சக்தி கொண்ட வானரங்களும் மனித உருவெடுத்தன, அவர்களை மதநீர் பெருகும் யானைகள் மேல் கௌரவமாக ராமன் அமர்த்தியபோது அவை அருவிகள் கொட்டும் மலையில் இருக்கும் ஆனந்ததைப் பெற்றன.
ராமபிரான் கட்டளைப்படி ராட்சர்களான விபீஷ்ணனும் அவன் ஆட்களும் அவர்கள் தேரில் ஏறினார்கள், அவர்கள் மனம் விரும்பியபடி செல்லும் சக்தியினை அந்தத் தேர்கள் பெற்றிருந்தாலும் அவை அயோத்தியின் மானுடத் தேர்களைப் போல் சக்தி கொண்டிருக்கவில்லை.
புதனுக்கும் வியாழனுக்கும் இடையே சந்திரன் இரவில் மின்னல் உடைய மேகங்களுடன் தென்படுவது போல பரதனுக்கும் லட்சுமணனுக்கும் இடையே ராமபிரான் அமர்ந்திருக்க அந்தப் புஷ்பக விமானத்தில் அமர்ந்தார்.
பகவான் விஷ்ணு வராக வடிவெடுத்து பிரளயத்திலிருந்து பூமியினை மீட்டது போலவும், மேகத்திரையில் இருந்து வசந்த காலம் சந்திரனை மீட்டது போலவும் ராவணனிடம் இருந்து மீட்கபட்டவளும் மிகுந்த மனவுறுதி கொண்டவளுமான சீதையினைக் கண்ட பரதன் அவளை வணங்கினான்.
எந்தப் பாதங்களை ராவணன் பணிந்து வேண்டி மன்றாடினானோ அந்தச் சீதையின் பாதங்களை, ராவணனுக்கு இணங்காத அவளின் பாதங்களைத் தன் சடாமுடி பட வணங்கினான் பரதன், அந்த ஜடாமுடி அவள் பாதம் தொட்டதால் அவன் ஜடாமுடி புனிதமடைந்தது, அவள் பாதத்தின் பெருமை இன்னும் உயர்ந்தது.
ஜனங்கள் முன் செல்ல ராமர் தன் புஷ்பக விமானத்தில் தம்பிகளுடனும் சீதையுடனும் மெல்லப் பின் தொடர்ந்தான், அவர்கள் அயோத்தி நகரை நெருங்கும் போது உத்யான வனம் எனுமிடத்தில் சத்ருக்கன் கூடாரங்கள் அமைத்துக் கோசலையோடும் சுமித்ரையோடும் ராமனுக்காக காத்திருந்தான்.
தொலைவில் இருந்தே தன் தாய்மார்களைக் கண்ட ராமன் கைகேயி அங்கு இல்லாததை அறிந்து வருந்தினான், தாய்மார்களைக் கண்ட அவன் மகிழ்ச்சி கைகேயி இல்லாததால் சற்றுக் குறைந்துபோனது.
(தொடரும்..)
காளிதாசனின் ரகுவம்சம் : 59
சற்றுத் தொலைவிலே தங்கள் தாய்மார்களான கௌசல்யாவினையும் சுமித்ரையினையும் ராமனும் லட்சுமணனும் கண்டு கொண்டார்கள். உயர்ந்த மரம் வெட்டப்பட்டபின் கீழே கிடக்கும் இரு கொடிகள் போல தசரதனை இழந்த அவர்கள் உருமாறி நின்ற கோலத்தைக் கண்டு கலங்கினார்கள், அவர்கள் உடல் தாய்மார்களிடம் செல்லுமுன்னே மனம் சென்றுவிட்டதால் செயலற்ற கோலமாய் நிலை குத்திய விழிகளுடன் நடந்தார்கள்.
மிகப் பலமான எதிரிகளை அழித்துப்போட்ட பராக்கிரமர்களான ராமனும் பரதனும் முதலில் மூத்த தாயான கௌசல்யாவினையும் அடுத்தத் தாயான சுமித்ரையினையும் வணங்கினார்கள்.
கௌசல்யாவுக்கும் சுமித்ரைக்கும் ராம லட்சுமணனைப் பார்க்கமுடியவில்லை, காரணம் பாசத்தினால் பெருகிய கண்ணீர் துளிகள் அவர்கள் கண்களை மறைத்திருந்தன.
ஹிமாலயத்தின் பனிக்கட்டிகள் கோடையில் உருகிக் குளிர்ந்த அருவியாய் வீழ்ந்து கங்கையிலும் சரயுவிலும் கலந்து கோடையில் கொதிக்கும் அந்நதியினைக் குளிர்விகின்றன, அவ்வாறே ராம லட்சுமணனைப் பிரிந்த சோகத்தில் சூடான கண்ணீர் வடித்தக் கௌசல்யையும் சுமித்ரையும் இப்போது ஆனந்தத்தினால் வந்த குளிர்ந்த கண்ணீரை வடித்து முன்பு வடித்த உஷ்ணக் கண்ணீரின் வெம்மையினைப் போக்கினார்கள்.
தாய்மார் இருவரும் தங்கள் மகன்களின் உடலில் அசுரர்களால் வந்த காயங்களை உலராத காயங்களைக் கவனமாக தொடுவதுபோல் மெல்லத் தொட்டுப் பார்த்தனர். பொதுவாக சத்ரியக் குல பெண்கள் தாம் வீரர்களைப் பெற்ற ராஜமாதா என அழைக்கப்படுவதை பெரிதும் விரும்புவார்கள். ஆனால், இவர்கள் வாஞ்சையுடன் தடவியது தாம் வீரர்களின் தாய் எனும் சத்ரிய பெருமையால் அல்லாமல் உளமார்ந்த தாய்மையின் உருக்கமாய் இருந்தது.
பெரியோரை வணங்கும்போது தன் கோத்திரப் பெருமையினை, தன் பெருமையினைச் சொல்லி வணங்குதல் மரபு, அவ்வழியில் வந்த சீதையும் “என் கணவனின் மனதுக்கும் உடலுக்கும் பெரும் துன்பம் தந்தவள் நான், மஹாபாக்யம் பெறும் சுபலட்சணா எதுவுமில்லாதவள் நான்” எனத் தன்னைப்பற்றி சொல்லித் தன் மாமியார் இருவரின் கால்களிலும் விழுந்து வணங்கினாள் சீதை.
பதிலுக்கு அவர்கள் “குழ்ந்தையே எழுந்திரு, உன் பரிசுத்தமான நடத்தை ஒன்றினால் அன்றோ ராமன் தன் தம்பியோடு பெரும் கஷ்டங்களைத் தாண்டி மீண்டு வந்திருக்கின்றான்” எனப் பிரியமானதும் உண்மையானதுமான வார்த்தைகளைச் சொல்லி அவளை ஆசீர்வாதம் செய்தார்கள்.
ராமன் தன் தாய்மார்களின் காலில் விழுந்தபோதே அவர்களின் கண்ணீர் ராமனின் சிரசில் பட்டு அவனின் பட்டாபிஷேகத்துக்கு முன்னோட்டமாக அமைந்தது, அதைத் தொடர்ந்து அவனின் பட்டாபிஷேகத்துக்கு மந்திரிமார்கள் தயாரானார்கள். பல புண்ணிய தீர்த்தங்களில் இருந்து பொற்குடங்களில் எடுத்து வந்த நீரை அவன் மேல் ஊற்றினர்.
அவ்வாறே ராட்சதர்களும் வானரங்களும் நதியிலும் சமுத்திரத்திலும் இருந்து கொண்டுவந்த புனித நீரை மழைமேகம் விந்தியமலை சிகரங்களில் மழையாக கொட்டுவது போல் அவன் மேல் ஊற்றி அபிஷேகித்தனர்.
ராமன் எப்போதும் அழகானவன் அவன் மரவுரி தரித்து அலங்காரமற்றபோதும் அழகானவனாக இருந்தான், மணிமுடி சூட்டி அரசக்கோலத்தில் இருந்தபோதும் அதே அழகில் இருந்தான். அங்கே மாற்றமேதும் அவன் அழகில் வந்துவிடவில்லை. கடும் கோடையிலும் பெரும் மழையிலும் மலைச்சிகரத்தில் என்ன மாறுதலைக் கண்டுவிட முடியும்?
(ராமன் எப்போதும் ஒரேமனமும் ஒரே குணமும் உடையவன் என்பதைச் சொல்கின்றார் காளிதாசன்.)
பட்டாபிஷேகம் முடிந்தபின் வாத்தியங்கள் எழ, தன் பரிவாரங்கள் சூழ, தன் குடும்பத்துடனும், பெரிய சேனையுடனும், வானர ராட்சச நண்பர்களுடனும் தன் முன்னோர்களின் ராஜபரிபாலமான அயோத்திக்குள் ஜனங்கள் பெரிதும் மகிழும்படி சென்றான் ராமன்.
ராமனுக்கு சத்ருகனும் லட்சுமணனும் சாமரம் வீசினார்கள், பரதன் ராமனின் வெண்கொற்ற குடையினைத் தாங்கி நின்றான், சகோதர் மூவரின் நடுவில் இருந்த ராமர் சாம, பேத, தான, தண்டம் எனும் நால்வகை உபாயங்களின் தொகுப்பாய் நிற்பது போல் காணப்பட்டான்.
ராமனின் வருகையால் மகிழ்ந்த ஜனங்கள் வீடுகளில் அகில் கட்டையினைப் புகைத்து நறுமணம் பரப்பினர், அது பெரிய புகையாய்க் காற்றில் எழுந்து பலவகையாக பிரிக்கப்பட்டது.
அப்படி அந்த கரும்புகை பலவாறு பிரிந்து விரிந்து நின்ற காட்சி எப்படி இருந்ததெனில் தன் தலைவனைப் பிரிந்த தலைவி கூந்தலை அணி செய்யாமல் ஒற்றைக் கொண்டையில் முடிந்திருப்பாள். தலைவன் வரும் செய்திக் கேட்டே கூந்தலை விரித்துப்போட்டு நறுமணம் பல இட்டு அலங்கரிப்பாள், அப்படி ராமனுக்காக அயோத்தி எனும் பெண் தன் கூந்தலை பிரியவிட்டு பரந்து அலங்கரிப்பது போல் அக்காட்சி இருந்தது.
மாமியார்கள் இருவரும் சீதையினை நன்கு அலங்கரித்து பல்லக்கில் வரச் செய்தனர், அவள் அப்படிப் பல்லக்கில் வரும்போது ஜன்னலோரம் இருந்து அயோத்தி பெண்கள் அவளை வணங்கினார்கள், சீதையும் பல்லக்கில் இருந்தபடி அம்மக்களை பெரும் மகிழ்வும் புன்னகையும் கொண்டு கண்டபடி வந்து கொண்டிருந்தாள்.
சீதை தன் வனவாசத்தின் போது அதிரி முனிவரின் மனைவி அனுசூயை தந்த தெய்வீக சந்தனத்தை பூசியிருந்ததால் மிகுந்த ஒளியுடையவளும் நறுமணம் கமழும் சூழலிலும் இருந்தாள். மிகுந்த ஒளிநடுவில் அவளைக் காணும்போது நெருப்பில் நிற்பவள் போல் பிரகாசமாய் இருந்தாள். அது அவள் நெருப்பில் இறங்கித் தன் பரிசுத்தத்தை நிரூபிக்கும் காட்சிபோலவே இருந்தது.
நட்பின் நிதி போன்ற ராமன் தன் நண்பர்களான வானரங்களுக்கும், ராட்சதர்களுக்கும் ஓய்வெடுக்கும் மாளிகைகளை எல்லா வசதிகளுடன் தயார் செய்து அவர்களை அங்கே அனுப்பினான். பின், ஓவியத்தில் மட்டுமே காணும் நிலையினை அடைந்த தசரதன் முன் அமர்ந்து பெரும் கண்ணீரோடு வீழ்ந்தான். எத்தனையோ பெரும் அரக்கர்களை ராட்சதர்களை வென்று தன் ராஜ்ஜியத்தையும், குருக்களையும், நண்பர்களையும், மனைவியினையும் காத்த தன்னால் எமனிடம் போராடித் தந்தையினைக் காக்கமுடியவில்லையே, பின் என்ன வீரம் இது, நான் என்ன ஜெயசீலன் என நொந்து கொண்டவன் பெருகும் நீருடனும் அதில் தோன்றும் நினைவலைகளுடனும் அசைவற்றுக் கிடந்தான்.
கர்மத்தைத் தர்மமாய்க் கொண்ட ராமன் பின் மெல்லத் தெளிந்து தன் இன்னொரு தாயான கைகேயி எங்கே என வினவினான், அவள் குற்ற உணர்வில் யாரையும் காணவிரும்பாமல் தன்னைத் தானே அடைத்துக் கொண்டிருக்கின்றாள் எனும் செய்தி மட்டும் அவனிடம் சொல்லப்பட்டது.
தாயின் குற்றங்களை ஒரு காலமும் மகன் பொருட்படுத்தக் கூடாது, அதைக் காரணமாக கொண்டு அவளைக் காயப்படுத்தவும் கூடாது எனும் அறத்தைக் கொண்ட அந்தக் குணசீலன் அவளை நோக்கிச் சென்றான்.
(தொடரும்..)
காளிதாசனின் ரகுவம்சம் : 60
குற்ற உணர்ச்சியினால் முடங்கிக் கிடந்த கைகேயினைக் கண்ட ராமன் கைகூப்பித் தொழுது சொன்னான் “தாயே, ஒரு மனிதன் அடையவேண்டிய இடம் சொர்க்கம், அது உண்மையினால் மட்டுமே கிடைக்கும். கொடுத்த வாக்கை தவறுபவனுக்குச் சொர்க்கமில்லை என்பதால் அந்த நிலைக்கு என் தந்தையினைத் தள்ளாமல் அவர் சொர்க்கம் அடைய உதவியர் நீர், இதனால் நீர் குற்றமேதும் செய்யவில்லை அவருக்கு நன்மையே செய்தீர் தாயே”
கொஞ்சமேனும் சலனமும் வருத்தமுன்றி தன் பெரும் துயருக்குத் தானே காரணம் எனத் தெரிந்தும் அதை மறந்து மகனாய் வந்து நின்ற ராமனை, இவன் சாதாரணமல்ல உத்தமசீலன் உயர்ந்த குணத்தவன் எனக் கண்ணீரோடு தழுவி அழுதாள் கைகேயி, தான் நதியில் தள்ளிவிட்ட மான்குட்டி தத்தளித்துக் கரையேறுதல் போல திரும்பி வந்த ராமனை மீள மீள அவள் ஆசீர்வதித்தாள்.
ராட்சனான விபீஷ்ணனும், தெய்வாம்சமுள்ள சுக்ரீவனும் தாங்கள் நினைத்ததை நினைத்தவுடன் பெறும் சக்தி படைத்தவர்கள். என்ன வேண்டினாலும் அது நொடியில் அவர்கள் கையில் இருக்கும். எந்த பெரிய முயற்சியும் அவர்கள் செய்யவேண்டியதில்லை. அப்படிபட்டவர்களுக்கு வருந்தி முயன்று கிடைத்த பொருட்களைக் கொண்டு ராமன் உபச்சாரம் செய்தபோது மிகுந்த ஆச்சரியம் அடைந்தார்கள், காரணம் அவர்கள் நினைத்துப் பார்க்கமுடியாதபடி அவை சிறப்பானதாக இருந்தன.
ராமனை கௌரவிக்க அகத்தியர் போன்ற பெரும் ரிஷிகளும் முனிவர்களும் வந்தார்கள். அவர்கள் ராவணன் சாமானியன் அன்று என்பதால் அவனின் வரலாற்றை முழுக்கச் சொன்னார்கள், எப்போதும் பணிவை மட்டும் விரும்பும் ராமன் அந்த முனிவர்கள் சொன்ன ராவணனின் பராக்கிரமம் முழுக்கக் கேட்டு தன்பலம் பற்றி நிறைவுக் கொண்டார், ராவணனின் வரலாறு ராமனின் பராக்கிரமத்துக்குக் கௌரவம் சேர்ப்பதாக இருந்தது.
ராமனின் பட்டாபிஷேகம் இப்படி மிக நிறைவாக முடிந்ததும் முனிவர்கள் முதலில் திரும்பினார்கள். விபீஷ்ணன் போன்றோர்க்குப் பெரிய அன்பளிப்புகளைச் சீதையின் கையினாலே ராமன் வழங்கி அவர்கள் தம் இடங்களுக்குச் செல்ல அனுமதி கொடுத்தான். விபீஷணன் அயோத்தியில் பதினைந்து நாட்களும் சுக்ரீவன் இருமாத அளவு தங்கியிருந்தனர். மகிழ்வான பொழுதுகள் மின்னலென மறைவதால் ஆனந்தத்தின் மிகுதியில் நாட்கள் செல்வதை அவர்கள் உணரவில்லை.
சுக்ரீவனுக்கு அவன் ராஜ்ஜியத்தையும், விபீஷ்ணனுக்கு இலங்கை ராஜ்ஜியத்தையும் ஒப்படைத்த ராமன், அவரவர் பொருளை அவரவரிடம் சரியாக ஒப்படைத்த ராமன், மனம் சொல்லும்படி இயங்கும் அந்தப் புஷ்பக விமானத்தை எந்தக் குபேரனிடம் இருந்து ராவணன் பறித்தானோ அவனிடமே திரும்பக் கொடுத்தார்.
தந்தையின் வாக்குப்படி வனவாசம் சென்றுவிட்டு திரும்பிய ராமன் தன் தம்பியரான மூன்று சகோதர்கள் மேலும் எப்படிப் பாரபட்சமற்ற அன்பைக் கொண்டிருந்தானோ அப்படியே தன்மார்க்கமான அறம், பொருள், இன்பம் எனும் மூன்று விஷயங்களையும் அவன் சமநோக்குடன் கையாண்டான்.
தேவசேனையின் தலைவரான சுப்பிரமணிய சுவாமியினை ஆறு பெண்கள் வளர்த்தார்கள், அவர் அந்த ஆறுபேரையும் ஒருசேர தாயாகக் கருதினாரோ அப்படித் தசரதனின் மூன்று மனைவியர்களையும் தன் தாய் என்றே கருதினான் அன்புமிக்க ராமன், பெற்ற தாய் பெற்றேடுக்காத தாய் எனும் பாரபட்சம் அவனிடம் இல்லை.
ராமன் பெரிய ஆசை இல்லாதவன் அதனால் வரிகளை அளவோடு வசூலித்தான். இதனால் மக்களிடம் பெரும் பொருள் மிஞ்சியது அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். யாகங்களுக்கு வரும் இடைஞ்சலை அவன் அழித்ததால் யாகங்கள் தடையின்றி நடந்தன அதனால் அவன் காவலனுமானான், கல்வி அளித்து மக்களின் நல்ல அறிவைப் பெருக்குவதால் அவன் தந்தையுமானான், துன்படுவோர்க்கும் உதவி தேவைபடுவோர்க்கும் உடனே உதவி சகோதரனும் நல்ல மகனுமாய் இருந்தான்.
நல்ல அரசனாய், காவலனாய், தந்தையாய், சகோதரனாய், மகனாய் நின்று மக்களைக் காத்துவந்தான் ராமன்.
ராஜ்ஜியத்தை நடத்தி வந்தாலும் சீதையுடன் உலக இன்பங்கள் அனைத்தும் அனுபவித்தான் ராமன், விஷ்ணு ராமனாய் அவதரித்திருப்பதால் மஹாலட்சுமியே சீதை எனும் உருவில் வந்திருக்கின்றாள் எனும்படி மிக்க அழகாக விளங்கினாள் சீதை.
தங்கள் வனவாசத்தின் எல்லா காட்சிகளையும் சித்திரமாக கொண்ட மாளிகையில் அவர்கள் தங்கியிருந்து மகிழ்வான வாழ்வை அனுபவித்தார்கள், அந்த வனவாச சித்திரங்கள் அவர்களுக்கு வனவாச கால பிரிவின் நினைவுகளைக் கொடுத்தாலும் இப்போது அது வலியாக இல்லை.
இன்பமாக வாழும்போது துன்பகால வாழ்வின் நினைவு துயரம் தருவதில்லை. ஆனால், துயரமான காலத்தில் இன்பமாக வாழ்ந்த காலங்களின் நினைவு பெரும் துயர் கொடுக்கும். அவ்வாறு வனவாசத்தின்போதே இன்பகாலங்களை எண்ணி துயருற்று கடந்த ராமனும் சீதையும் இப்போது துன்பகாலத்தை எண்ணினாலும் மகிழ்வாக இருந்தார்கள், அவர்கள் அன்பு இன்னும் இன்னும் அந்தச் சித்திரங்களால் வலுப்பெற்றது.
கடல் தன்மேல் விழும் நீரைத் தன்மயமாக்குதல் போல தற்கால இன்பதுன்பங்களும் உணர்ச்சியுடன் கலந்துவிடும், அந்த இன்ப உணர்ச்சியால் அவர்கள் மிக மகிழ்ந்திருந்தார்கள்.
காலம் சீதை கருவுற்றிருப்பதை அவள் பளபளப்பான கண்களும், நாணல் தண்டுபோல் வெளுத்த நிறமுடைய அவளின் முகம் ராமனுக்குச் சொன்னது, அதை உணர்ந்த ராமன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான்.
கர்ப்பவதிகளுக்குரிய உடல் மெலிவினைச் சீதை அடைந்தபோது அவளை அன்பால் அணைத்த ராமன் அவளுக்கு எது விருப்பம் எனக் கேட்டார், கர்ப்பவதிகள் ஏதேனும் ஒரு பொருளில் ஆசை கொள்வது இயல்பான ஒன்று என்பதை அவன் அறிந்திருந்தான்.
அவள் எங்கு ரிஷிகள் தரும் புண்ணியதானியங்களை உண்டு அழகுபெற்ற அன்னங்கள் உண்டோ? எங்கே தன்னை நட்பாக நடத்தும் அன்பான பெண்கள் உண்டோ, எங்கே அழகான தர்ப்பங்கள் உண்டோ அந்த ரிஷிகள் வாழும் கங்கைக் கரை தபோவனத்துக்குச் செல்ல விரும்பினாள்.
அதை விரைவில் செய்வதாக வாக்குறுதி தந்த ராமன், அங்கு அவளோடு செல்லத் தயாரானான். ஆனால், அதற்கு முன் தான் செய்யவேண்டிய ராஜபரிபாலன ஏற்பாடுகளைச் செய்யும் பொருட்டு தன் அன்பிற்குரிய அயோத்தி மக்கள் மகிழ்வாய் வாழ்தலை காணும் பொருட்டு சில பணியாட்களுடன் மாளிகையின் மேல் தளத்துக்கு வந்தான்.
அங்கிருந்து பொருள் நிறைந்த கடைகளைக் கொண்ட வீதிகளையும், படகுகள் அழகாய் செல்லும் சரயு நதியினையும், வாலிபரும் இளம் பெண்களும் மகிழ்ந்து சிரிக்கும் பூங்காக்களையும் கண்டு, மக்கள் சுகமே தன் சுகம் எனக் கருதுபவனான அந்த ராமன் பெரும் மகிழ்ச்சி அடைந்தான்.
தூய நடத்தை உடையவனும் , சிறந்த சொற்களை உடையவனும், பரிசுத்தமான நடத்தையும் கொண்டவனும், ஆதிசேஷன் போல பெரும் புஜங்களைக் கொண்டவனும், பெரிய சத்ருக்களை ஜெயித்தவனுமான அந்த ராமன் தன்னையும் தன் ஆட்சியினையும் குறித்து மக்கள் என்ன பேசிகொள்கின்றார்கள் என்பதைத் தன் உளவுகாரனான பத்ரன் என்பவனிடம் கேட்டான்.
ராமனின் கேள்விக்குப் பதில் சொல்லும் நிர்பந்தத்தில் இருந்த பத்ரன் சொன்ன வார்த்தயில்தான் மீண்டும் ராமனிடம் விளையாட வந்த விதியின் வடிவமாய் இருந்தது.
(தொடரும்..)