காளிதாசனின் ரகுவம்சம் : 66-70
காளிதாசனின் ரகுவம்சம் : 66
ராமன் அஸ்வமேத யாகம் செய்ய ஆரம்பித்தபோது விபீஷ்ணன் சுக்ரீவன் உள்ளிட்ட எல்லா அரசர்களும் மேகம் பயிர்கள் மேல் மழை பொழிவது போல் ஏராளமான பொருட்களைக் காணிக்கையாய் ராமனுக்குக் கொட்டினார்கள்.
ராமனின் அழைப்பினை ஏற்று அந்த யாகத்துக்குப பூலோக முனிவர்களும் ரிஷிகளும் மட்டுமன்றி தேவலோக ரிஷியான மரீசி முதலான ரிஷிகளும் வந்திருந்தார்கள்.
முனிவர்களெல்லாம் அயோத்தி நகரின் வெளியே தங்கியிருந்தார்கள், அந்த அயோத்தி நகரின் நான்கு வாயில்களிலும் அப்படித் தேவலோக ரிஷிகள் குவிந்து கிடக்க அந்ந அயோத்தி படைப்பினைத் தொடங்கிய பிரம்மாவின் சரீரம் போலவே இருந்தது.
(பிரம்மன் உலகைப் படைக்கும் போது தனக்குத துணையாக மரீசி, அத்ரீ, அஙகிரஸ், புலஸ்த்யர், புலஹர், க்ரது, ப்ரசேதஸ், வஸிஷ்டர், ப்ருகு, நாரதர் இன்னும் பிரஜைகளின் தலைவர் என்றழைக்கப்படுகின்ற பதின்மரை படைத்துத் தன்னைச் சூழ வைத்திருந்தான், அப்படி அயோத்தியும் காட்சியளித்தது)
மனைவி அருகில் இல்லாதவன் யாகம் செய்யக்கூடாது என்பதால் ராமன் சீதையின் பொற்சிலையினைத் தன் அருகில் அமர்த்திக் கொண்டான், இது அவள்மேல் அவன் கொண்டிருந்த தீரா அன்பை காட்டிற்று, சீதையினை அவன் விரட்டியது தவறு எனச் சொன்னவர்கள் கூட அவன் அவள்மேல் கொண்டிருக்கும் அன்பை எண்ணி உருகினார்கள், சீதைமேல் தான் கொண்டிருக்கும் பேரன்பினை இப்படிக் காட்டிய ராமன் தான் அவளைச் சந்தேகிக்கவேயில்லை என்பதை மக்களுக்கு மௌனமாய்ச் சொன்னான்.
சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட பொருட்களை விட அதிக அளவு பொருட்கள் குவிந்த நிலையில் ராமன் யாகத்தைத் துவக்கினான், கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் அள்ளிச் செல்லும் ராட்சதர்கள் அங்கே பொருளைக் கொடுத்தனர், அப்படியே பொதுவாக யாகத்துக்குத் தடையாக இருக்கும் ராட்சதர்கள் இங்கே ராமனின் யாகத்துக்குக் காவல் இருக்கத் தொடங்கினார்கள்.
அந்நேரம் சீதை பெற்றெடுத்த ராமனின் புதல்வர்களான லவனும் குசனும் வால்மீகியினால் இயற்றப்பட்ட ராமனின் சரிதத்தை முனிவர் உத்தரவின்படியே அயோத்தி நகரில் பாடியபடியே வலம் வந்தார்கள்.
அந்த இருவரின் கிண்ணரர் போன்ற குரலும் அவர்கள் பாடிய அழகும் வால்மீகி இயற்றிய அழகான கவிதை சொற்களும் ராமனின் மிக உருக்கமான வரலாறும் கேட்போர் மனதை உருக்கிற்று, நல்ல சிற்பி ஒருவன் தரமான தங்கத்தில் செய்த சிலை ஒன்றைப் பூலோக மக்களுக்குக் காட்டுவது போல் அவர்கள் நகரைச் சுற்றி வலம் வந்தார்கள்.
முதல் ராமாயணம் இவ்வாறு அயோத்தியில் ராமனின் புதல்வர்களாலே பாடப்பெற்றபோது மக்களெல்லாம் பெரும் மகிழ்ச்சியும் உருக்கமும் கொண்டார்கள்.
அந்த இரு குழந்தைகளின் தெய்வீக அழகையும் அவர்கள் தங்கள் அரசனைப பற்றி பாடிய இனிமையான வகையினையும் ஆழ்ந்த சொற்களையும் கேட்ட மக்கள் அதனை நறுமண புகைபோல் பரப்பினர், அந்தச் செய்தி ராமனை எட்டியபோது அவன் தன் மாளிகையின் வாசலுக்குத் தம்பிகளோடு வந்து அக்குழந்தைகளைக் கண்டு பாடலைக் கேட்கத் தொடங்கினான், அவனோடு அவன் அவையும் வந்தது.
அக்குழந்தைகளைக் கண்டதும் இனம்புரியா உணர்வுக்குள் சிக்கிக் கொண்ட ராமன் அவர்கள் பாட பாட ஆனந்தமான மன எழுச்சிக்குச் சென்றான், அந்த ஆனந்தம் அவனுள் அடங்காமல் பெருகிற்று.
அவனது அவை அந்தப் பாலகர்களின் பாடலைக் கேட்டு, பனிக்கால அதிகாலையில் இலையில் இருந்து நீர் சொட்டும் மரங்கள் அசைவற்று நிற்பதைப் போல் நிசப்தமாய் அசையாமல் நின்றது.
அந்தப் பாலகர்களை உற்றுப்பார்த்த அவையினர் அவர்களுக்கும் ராமனுக்கும் வயதாலும் ஆடையாலும் மட்டுமே வித்தியாசம் கொண்டிருக்கின்றனர் மற்றபடி அந்தப் பாலகர்கள் ராமனின் வடிவிலே இருப்பதைக் கண்டு வியப்புற்று இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர், ஒரே சுரங்கத்தின் வைரங்கள் அளவில் சிறியன பெரியவனாக இருப்பது போல் அவர்களும் ராமனும் இருந்தார்கள்.
(ராமனுக்கு வயது அதிகம் அவன் அரச ஆடை கொண்டிருந்தான், பாலகர்களுக்கு வயது குறைவு அவர்கள் மரவுரி தரித்திருந்தார்கள், ஆனால் மூவரும் ஒரே வடிவம் கொண்டிருந்தார்கள். )
அவர்கள் வால்மீகி முனிவரின் ராமாயணத்தில் இருபது சர்க்கம் பாடியபோது ராமன் அவர்களுக்குப் பதினெட்டாயிரம் பொற்காசுகளைப் பரிசாக அளித்தான். ஆனால், அந்த பாலகர்கள் அதை ஏற்க மறுத்தார்கள், அதைக் கண்டவர்கள் அவர்களின் பாடும் திறனை விட இப்படி ராமன் கொடுத்த பரிசையே ஏற்க மறுத்த குணத்தைக் கண்டு இன்னும் அதிசயித்துப் போனார்கள்.
ராமன் இன்னும் அதிசயம் கொண்டவனாய் அவர்களிடம் வந்து குனிந்து தோள்களைத் தொட்டான், அவனுக்குள் அந்நேரம் ஏதோ ஒரு பரவசம் பாய்ந்தது. அதனை உணரமுடியாதவன் “பாலகர்களே உங்களின் உபாத்தியாயர் (ஆசிரியர்) யார்? இந்தக் க்ருதி(காவியம்) யாருடையது” என அன்போடு வினவினான், அவர்களோ மகாமுனி வால்மீகி தங்கள் ஆசிரியர் என்றும் அவரே தங்களுக்குக் கவியும் கற்றுத்தந்தார் என்றார்கள்.
ராமனுக்குள் பெரும் கடல் கொந்தளித்து சிந்தனைகள் தோணியாய்ச் சுழன்றன, இவர்கள் தன் மக்கள் என்பதை அறிந்தும் அவனால் அதைச் சொல்லமுடியவில்லை, அதனைச் சொன்னாலும் யார் நம்புவார்கள் என அஞ்சியவன் பொங்கிய பாசத்தைத் தனக்குள் அடக்கிக் கொண்டு, ஓங்கி எரியும் வனத்தின் வெப்பத்தினை வனதேவதை பொறுப்பது போல் தனக்குள் பொருத்திக் கொண்டான்.
இஷ்வாகு வம்சத்தின் வாரிசுகளைத் தசரதனின் பேரன்களைத் தன் அன்பு மகன்களைத் தன் முன் முதன் முதலாகக் கண்ட ராமன் தன் நிலையினை எண்ணி கலங்கிப்போனான், அந்தத் தேசத்தின் இளவரசர்களான தன் மகன்கள் காக்கை கூட்டில் குயில் வளர்ந்தது போல் வளர்ந்து இன்று அடையாளமற்ற பாடகர்களாகத் தன் முன்னே வந்து நிற்பதை கண்டு சொல்ல வார்த்தைகளற்று அழவும் சக்தியற்று மனதால் உடைந்து நின்றான்.
பலமான ராவணனும் இந்திரஜித்தனும் வீசிய அம்புகளும், கும்பகர்ணன் வீசிய மலைகளுமே உடைக்க முடியா ராமனை அந்தப் புத்திரர்களின் ஏக்கமான பார்வை உடைத்துப் போட்டது.
இது இவர்களுக்குரிய ராஜ்ஜியம் என்பதை உணர்ந்த ராமன் மனதால் ஒரு காரியம் செய்தான், அதன்படி தன் ராஜ்ஜியத்தை இவர்களை வளர்த்த வால்மீகிக்கே கொடுத்துவிடுவது என முடிவெடுத்தான், பற்றற்ற வால்மீகி அதனை இவர்களுக்கே கொடுத்துவிடுவார் என்பதை ஊகிப்பது சிரமம் அன்று.
அதனை மறைவாக வைத்த ராமன் தன் தம்பியரிடம் தன் விருப்பத்தைச் சொன்னான். தன்னை இந்த அளவு புரிந்து பாடிய முனிவர்க்கு இந்த ராஜ்ஜியத்தைக் கொடுப்பதே சரி எனச் சொன்னான், ராமனின் பேச்சுக்கு மறுபேச்சில்லாத அவன் சகோதரர்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர், அந்நொடியே இந்த உடலை தவிர எல்லாம் கொண்ட இந்த ராஜ்ஜியத்தை வால்மீகி முனிவர்க்கு அர்ப்பணித்தான்.
பின் அந்தப் பாலகர்களிடம் வந்து “பாலகர்களே என் பொற்காசுகளைத்தான் நீங்கள் ஏற்கவில்லை, நான் உங்கள் குருவிற்காக இந்நாட்டையே கொடுத்துவிட்டேன், அதனை உங்கள் காணிக்கையாக சேர்த்துவிடுங்கள்” என்றான்.
அந்தப் பாலகர்கள் இருவரும் அதை மறுத்து மனதால் வால்மீகியினை நினைத்தபோது அவர் அங்கே தோன்றினார், அவரை ராமனும் அவர் சீடர்களும் வணங்க அவர் அவர்களுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு பேசினார்.
“ராமா, இவர்கள் உன்னுடைய மகன்கள் என்பதை அறிந்துமா பேச மறுக்கின்றாய், சீதை களங்கமற்றவள் என்பதை நான் சொல்லி நீ அறியவேண்டியதில்லை என்பதால் அவளை இனியாவது ஏற்றுக்கொள். எல்லாம் துறந்த எனக்கு இந்த ராஜ்ஜியம் எதற்கு? அது கிடைப்பதை விட சீதை உன்னுடன் வாழ்கின்றாள் என்பதே எனக்கு மகிழ்ச்சியானது”
ராமன் அவரிடம் பணிந்து சொன்னான் “தந்தையே, உங்கள் நாட்டுப்பெண்ணும் என் மனைவியும் இந்நாட்டின் அரசியுமான சீதை களங்கமற்றவள் என்பதை அவள் நெருப்பில் இறங்கி மீண்டபோதே நான் அறிந்து கொண்டேன், அவள் பரிசுத்தமானவள். ஆனால், இங்குள்ள ஜனங்கள் அவளை நம்பவில்லையே, ஒரு அரசனாக நான் செய்யமுடிவதென்ன ஒன்றுமில்லை.
அதனால் அவள் இந்த மக்களும் நம்பும்படி தன் பரிசுத்தகோலத்தை நிரூபித்தால் இந்தப் புத்திரர்களோடு அவளையும் மனமார ஏற்றுக்கொள்வேன், சீதையின் ராமனான எனக்கு வேறு என்ன வேண்டும்?”
அதைக் கேட்ட வால்மீகி தவத்தை கொண்டு முக்தி அடைவது போல் சீடர்களைக் கொண்டு சீதையினை அயோத்திக்கு அழைத்து வரச் சொன்னார்.
அவள் வந்துவிட்டாள் எனும் செய்தி அறிந்த ராமன் மறுநாள் நகர ஜனங்களைப் பொது இடத்தில் கூடும்படி அறிவிப்பினைச் செய்தான்.
ஸ்வரமும் இலக்கிய தூய்மையும் கொண்ட காயத்ரி மந்திரத்தினால் சூரியனைத் துதிப்பது போல லவ குசனுடனும் சீதையுடனும் வால்மீகி முனிவர் அந்த அரங்குக்கு வந்தார்.
காவி உடை அணிந்து உடல் முழுக்க மறைத்து தலைகுனிந்து கண்கள் கால் பார்க்க நின்ற சீதையின் தெய்வீக கோலத்தை கண்ட மக்கள் அவளைக் கண்ட மாத்திரத்திலே அவள் பரிசுத்தமானவள் என்பதை அறிந்து கொண்டார்கள்.
இப்படிப்பட்ட பெண்ணை தவறாகப் பேசிவிட்டோமே என வருந்திய ஜனங்கள் அவள் கண்களுக்கு நேர் பார்க்க சக்தியில்லாமல் தலையினைத் திருப்பிக் கொண்டனர், அவையோர்களோ அவளுக்குச் செய்த துரோகத்தால் தலைகுனிந்து முற்றிய நெற்பயிற் போல் நின்றனர்.
ஆசனத்தில் அமர்ந்திருந்த முனிவர் “மகளே, இந்த ஜனங்கள் நம்பும்படி உன்னை உன் கணவனுக்கு நிரூபித்துவிடு” எனச் சொன்னார்.
வால்மீகியின் சீடன் அவளுக்குத் தீர்த்தம் கொடுக்க அதை மும்முறை பெற்று பருகியவள் தலை நிமிராமல் பூமியினைப் பார்த்தபடியே சொன்னாள்.
“ஹே பூமிமாதா, நான் சொல்லாலும் செயலாலும் உடலாலும் பரிசுத்தமானவள், என் கணவனுக்குக் களங்கம் செய்யாதவள் என்பது உண்மையானால் எல்லாவற்றையும் தாங்கும் நீ என்னை உனக்குள் சேர்த்துக்கொள்”
பதிவிரதையான சீதை இப்படிச் சொன்னதும் பூமியில் பிளவு விழுந்து பிரகாசமான சுடர் ஒன்று மேலேழுந்து பிரகாசித்தது.
அந்தப் பிரகாசமான ஒளிகூட்டத்தின் மத்தியில் பெரிய நாகங்களால் தாங்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்திருந்தபடி பூமாதேவி தோன்றினாள், அவள் சீதையினை நோக்கி அழைக்க அவளிடம் சென்றாள் சீதை, ராமனும் மக்களும் முனிவர்களும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவளைத் தன் மடியில் அமரவைத்த பூமாதேவி புன்னகைத்தாள்.
அவளைக் கொண்டு செல்லாதே, அவள் எனக்கு வேண்டும், என் சீதை எனக்கு வேண்டும் என ராமன் கதறியபடியே எழுந்து ஓட பூமாதேவி சிரித்தபடி பூமிக்குள் சீதையோடு சென்றாள்.
தன் கண்முன்னே சீதை கொண்டு செல்லப்படுவதை அறிந்து கொதித்த ராமன் தன் வில்லை எடுத்துக் கொண்டு பூமாதேவியியுடன் சண்டையிட்டு அவளை மீட்க விரும்பினான், தான் அறியாதபோது சீதையினைக் கடத்திய ராவணனைத் தேடி அழித்த அவன் தன் கண்முன் சீதையினைக் கொண்டு சென்ற பூமாதேவி மேல் அதைவிடப் பெரும் ஆத்திரம் கொண்டான்.
ஆனால், எல்லாம் அறிந்த வசிஷ்டர் அவனைத் தடுத்தார், பூமாதேவியினைத் தாக்குதல் என்பது பூமியின் ஒவ்வொரு உயிரையும் பாதிக்கும் என்பதையும் சீதையின் துறவுவாழ்க்கைக்கே பூமாதேவி கட்டுப்பட்டாள், அவளை வதைப்பது தர்மம் அன்று என்பதைச் சொன்னார், வசிஷ்டரின் வார்த்தைகளை மீறமுடியா ராமன் அப்படியே வில்லை விட்டுவிட்டு யாகத்தில் அமர்ந்தான்.
மனமெல்லாம் சீதையினைக் கொண்டிருந்த ராமன் தன் கடமைபிரகாரம் யாகத்தை நல்லபடியாய் முடித்துவிட்டு எல்லா முனிவர்கள்ளையும் தத்தம் இடத்துக்கு அனுப்பிவிட்டு தன் மகன்களை நோக்கினான்.
அவன் சீதைமேல் வைத்த அதே பாசத்தை புத்திரர்கள்மேலும் கொண்டிருந்தான். இப்போது சீதை இல்லை என்பதால் அவள் மேலான அன்பையும் மகன்கள் மீதே வைத்தான், இதனால் அவர்கள் மேல் அவன் வைத்த அன்பு இருமடங்காயிற்று.
பரதனின் மாமனார் யுதாஜித்தன் சிந்து பிரதேசத்தில் சிலர் செய்யும் அட்டகாசத்தை ஒழிக்க ராமனிடம் செய்தி அனுப்பினார், ராமன் பரதனிடம் சிந்து பிரதேசத்தின் கொடியவர்களை ஒடுக்கி அதனை அவனே ஆளவேண்டும் என அவனைச் சிந்துநதி நாட்டுக்கு அனுப்பினார்.
சிந்துநாட்டினர் சங்கீதமும் இசையுமாக வாழ்பவர்கள், அவர்கள் நாட்டை கைபற்றி நல்லாட்சிக் கொடுத்த பரதன் அவர்கள் தங்கள் வழமைப்படி இசையுடன் கூடிய வாழ்வை வாழ வழிசெய்தான்.
மீண்டும் ராமனை அடைய விரும்பிய பரதன் தன் மகன் தட்சனையும், புஷ்கனையும் அங்கே அரசனாக அபிஷேகம் செயது வைத்தான், தட்சன் இருக்குமிட்ம தட்சசீலம் என்றும் , புஷ்கன் இருக்குமிடம் புஷ்கராவதி என்றுமாயிற்று.
(இவை இன்றும் பாகிஸ்தானில் உண்டு, பெஷாவர் போன்றவை இதன் மூல சொற்களில் இருந்து வந்தது, புஷ்கர் எனும் இனம் இப்போதும் அங்கு உண்டு.)
லட்சுமணன் தன் அண்ணனின் விருப்பப்படி தன் மகன்களான அங்கதனுக்கும் சந்திரகேதுவுக்கும் காராபதம் எனும் நாட்டை கொடுத்தான், அங்கததீயா என அங்கதன் தலைநகரும் சந்திரகாந்தா எனச் சந்திரகேதுவின் தலைநகரும் விளங்கிற்று.
(இவை இன்றைய உத்திர பிரதேசத்தின் வாரணாசி பக்கமிருக்கும் பகுதிகள்.)
இவ்வாறு சகோதரர்கள் நால்வரும் தத்தம் மகன்களுக்கு பட்டாபிஷேகம் செய்துவைத்தபின் தங்கள் முன்னோர் வழக்கபடி துறவு வாழ்க்கைக்கு தயாரானார்கள், அதன்படி முதலில் தங்கள் தாய்மார்களுக்குத் தர்ப்பணம் முதலியவற்றைச் செய்தார்கள்.
அஸ்தமிக்கும் சூரியனுக்கு முன் நட்சத்திரங்கள் மங்கலாய்த் தெரிவதுபோல் அங்கே யமன் ராமனைத் தேடி முனிவர் வடிவில் வந்தான், தன்னை ராமனுக்கு மட்டும் அடையாளப்படுத்தியவன் அவனுடன் தனித்து பேசவந்திருப்பதாய்ச் சொன்னான், இருவரும் தனித்து உரையாடும்போது யாரேனும் இடையில் வந்தால் அவனை ராமன் கொன்றுவிடவேண்டும் எனும் உத்திரவாதமும் பெற்றுக்கொண்டான்.
இருவரும் தனி அறை புகுந்தார்கள், லட்சுமணன் எல்லாம் அறிந்தவனாய் வாயிலுக்கு வெளியே காவல் இருந்தான்.
யமன் ராமனிடம் தான் வந்த விஷயத்தைச் சொன்னான் “ராமா, பூமியில் பிறந்த எல்லோரும் ஒரு நாள் இங்கிருந்து செல்லவேண்டும் என்பது விதி, பூமியில் யாரும் மீறமுடியா விதி, பிரம்மன் எழுதிய கணக்கில் உனக்கான காலம் நெருங்குவதால் அதைச் சொல்லவே வந்தேன், மகா புனிதமான உன்னை என்னால் தொடமுடியாது எனினும் எத்தனையோ முனிவர்களை ரிஷிகளை நல்லோரைக் காத்துத் தந்த நீ, என் கடமையினை நான் செய்யும்பொருட்டும் என் மேல் பழிவராதபடியும் என்னையும் காத்தருள வேண்டும்” என்றான்.
அவன் சொன்னதன் பொருளை ராமன் உணர்ந்து சிந்திக்கும்போதே சோதனை துர்வாசர் வடிவில் வந்தது, மிகுந்த அவசரமாக ராமனை சந்திக்க வந்த துர்வாசரை லட்சுமணன் தடுத்தான், கோபம் கொண்ட முனிவர் தன்னைத் தடுத்தால் அல்லது காத்திருக்க வைத்தால் லட்சுமணன் வம்சத்தின் மீதே சாபமிடுவதாகக் கொதித்தார்.
தன் வம்சம் சாபம் பெற்று அழிவதைகாட்டிலும் தான் ஒருவன் அழிவதே நல்லது என முடிவெடுத்த லட்சுமணன் அறைக்குள் புகுந்து யமனுக்கும் ராமனுக்கும் இடையில் சென்றான்.
வாய்புக்காய்க் காத்திருந்த யமன் சத்தமிட்டான் “சொன்ன சொல் தவறாத ராமனே, நம் ஒப்பந்தம் மீறி உள்ளே புகுந்த இவனைக் கொல்வாயாக” என்றான்.
லட்சுமணனைக் கொல்வது என்னைக் கொல்வதற்குச் சமம் அவன் பொருட்டு நானே சாகின்றேன் என முன்வந்த ராமனை நோக்கிச் சொன்னான் யமன்.
“ராமா, எனக்கு உயிர்களை எடுத்து பழக்கமே தவிர பிச்சையிட்டு பழக்கமில்லை, எனக்கு நீ தந்த வாக்கினைக் காப்பாற்று, இப்போதே இவனைக் கொல்” என உறுமினான்.
அந்நேரம் லட்சுமணன் சொன்னான் “யமனே, என் அண்ணன் ஒருகாலமும் சொன்ன சொல் மாறாதவர், அவரால் என்னைக் கொல்லமுடியாவிட்டால் என்ன? அவருக்காக நான் என் உயிரைத் தருகின்றேன்” என்றவன் ராமனிடம் சொன்னான்.
“அண்ணா, எல்லாவற்றுக்கும் இந்த உலகில் முடிவு உண்டு என்பதை அறிந்த தர்மவான் நீ, யாராக இருந்தாலும் இங்குப் பூமியின் விதிக்கு கட்டுப்பட்டவர்களே, உன்னால் என்னைக் கொல்லமுடியாது என்பதை அறிவேன், உன் கண்முன் நான் இறந்தால் மறுநொடி நீர் வாழமாட்டீர் என்பதையும் அறிவேன்.
அதனால் என்னை நாட்டைவிட்டு விரட்டுங்கள், அது ஒருவனைக் கொன்றதற்குச் சமம், சொந்த நாட்டை விட்டு விரட்டப்படும் ஒருவன் உயிரற்றவனுக்குச் சமம் என்பது சாஸ்திரம், அப்படி என்னை அனுப்புங்கள், பின் எமன் செய்ய வேண்டியதை செய்யட்டும்”
ராமன் பதிலேதும் கூறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான், அண்ணனுக்காக சாவது பெருமை அது எனக்கு வாய்த்தது பற்றி மகிழ்கின்றேன் எனச் சொன்ன லட்சுமணன் எல்லாம் துறந்து சரயு நதிக்கரை சென்று தவத்தில் அமர்ந்து யோக முறைப்படி உயிர்நீத்தான்.
லட்சுமணன் தன்னை விட்டு நீங்கியபின் ராமன் பலம் குறைந்தவன் போலானான், தன் தெய்வாம்சத்தில் நான்கில் ஒரு பங்கு குறைந்தது போலானான்.
(தபஸ், தூய்மை, தயை, சத்யம் எனும் நான்கும் கொண்டவர் விஷ்ணு பகவான், இந்நான்குமே ராம சகோதரர்களாக பிறந்திருந்தன, லட்சுமணனின் பிரிவால் ராமனுக்கு இதில் ஒன்று குறைந்துபோனது என்பது தெய்வ தாத்பரியம்)
யமனின் செய்தியும் லட்சுமணனின் முடிவினையும் உணர்ந்த ராமன் இனி தானும் பூமிவிட்டு நீங்க வேண்டும் எனும் முடிவுடன் தன் மகன்களுக்கு பட்டாபிஷேகம் செய்தான், லவனுக்கு சராவதி எனும் நகரை நிர்மாணித்தும், குசனுக்கு குசாவதி எனும் நகரை நிர்மாணித்தும் ராஜ்ஜியங்களைப் பிரித்துக் கொடுத்து அரசாள வைத்து தன் கடமையினைச் செய்தான் ராமன்.
(லவனின் சராவதி லாகூர் எனப் பாகிஸ்தானில் உண்டு, குசனின் குசாவதி தெற்கே கன்னட மாகாணத்தில் உண்டு, இந்த குசனின் வழி வந்தவர்களே பண்டைய மன்னர்கள், சோழ மன்னர்கள் தாங்கள் ராமனின் வம்சாவழி எனச் சொன்னதெல்லாம் இதன் தொடர்ச்சியே.)
தன் கடமைகளெல்லாம் நிறைவுற்று தன் அவதார நோக்கமும் நிறைவுற்றபின் இனி செய்ய ஒன்றுமில்லை எனும் நிலையில் நெருப்பு சுமந்து கொண்டு சகோதரர்களுடன் வடக்கு நோக்கி நடந்தான் ராமன், அவனோடு அயோத்தி நகர மக்களும் நடந்தார்கள்.
உயிரற்ற வீடு, தளவாட பொருட்கள் தவிர எல்லா உயிர்களும் ராமனோடு சென்றன, மரம் செடி கொடிகள் போன்றவை அவனோடு செல்லமுடியாமல் தங்கள் கைகளால் தங்களை அறைந்து கொண்டு அழுதன.
ராமனுடன் அவன் மனமறிந்த வானரங்களும் அரக்க கூட்டங்களும் சென்றன, பெரிய கடம்ப மலர்போன்ற கண்களில் நீர்வழிய சென்ற மக்களோடு அவர்களும் சென்றார்கள்.
ராமன் தன் மக்களோடு சரயு நதியில் இறங்கினான், ஒரு நல்ல அரசனின் உச்சக்கட்ட கடமை எல்லா மக்களையும் நற்கதி அடைய வைப்பதே எனும் கடமையினையும் செய்துவிடும் பொருட்டு அவர்களை நதியில் மூழ்க செய்து தானும் மூழ்கி திவ்யதேகம் பெற்றான், மக்களும் அவ்வாறே பெற்றார்கள்.
அந்த ராமன் தான் நினைத்தபடி செல்லும் விமானத்தை அழைக்க அது வந்து மக்களை ஏற்றிக்கொண்டு “சனாந்திகம்” எனும் சொர்க்கத்தை அடைந்தது.
ஏணியானது உயர ஏற உதவுவது போல அவர்கள் சொர்க்கம் ஏற சரயு நதி ஏணியாக நின்றது.
பசுக்கள் நதியில் நெருக்கமாக நீந்துதல் போல மக்கள் கூட்டமாக இடித்துக் கொண்டு நின்று சொர்க்கம்பெற்ற அந்த இடம் “கோப்ரதரம்” என்றாயிற்று.
சுக்ரீவன் முதலானோர் தங்கள் தேவவடிவம் பெற்று பூமியில் இருந்து நீங்கினர், பூமிக்கு அவர்கள் வந்த காரியம் முடிந்ததால் இனி அவர்கள் பூமியில் நொடி பொழுது நீடிக்கவும் வழி இல்லாதிருந்தது.
ராவண வதம் எனும் தேவகாரியத்துக்காய் ராமனாய் வந்த விஷ்ணு இப்போது தன் தேவவடிவம் அடைந்திருந்தார், ராவணனைக் கொன்ற வெற்றியின் அடையாளாக அவர் அனுமனையும் விபீஷ்ணனையும் வெற்றித் தூண்களாக நிறுத்திய பகவான் வைகுண்டம் ஏகினார்.
ராமனுக்குக் கொடுத்த அதே மரியாதையினைத் தசரதனின் வம்சம் அப்போது மூத்தவனான குசனுக்குக் கொடுத்தது, குசன் ராமன் வழியிலே தர்மவானாக அரசாளத் தொடங்கினான், ராமனும் அவன் சகோதரர்களும் நான்கு பேராக சென்று இப்போது எட்டுப்பேராக வந்திருப்பதாக மக்களும் மகிழ்ந்திருந்தார்கள்.
(தொடரும்..)
காளிதாசனின் ரகுவம்சம் : 67
ராமனின் புதல்வர்கள் அவன் சகோதரர்களின் புதல்வர்களோடு சேர்ந்து ராஜரீகம் செய்தார்கள், அவர்களில் எல்லோருக்கும் மூத்தவனான குசனிடம் மற்ற எல்லோரும் பணிந்து நின்றார்கள். எல்லாவற்றிலும் சிறந்த இடத்தையும் சிறந்த பொருளையும் அவனுக்கே கொடுத்து ரகுகுலத்தில் எக்காலமும் சகோதரர்கள் அன்புடன் ஒன்றாய் இருப்பார்கள் எனும் பண்பினைக் காத்து நின்றார்கள்.
குசன் தலைமையில் அந்தச் சகோதரர்கள் நாட்டில் நீர்வளம் பெருக்கினர், இதனால் உழவுதொழில்வ் வளர்ந்தது. காட்டின் யானைகளைப் பிடித்து வந்து பழக்கிப் பெரிய சேனைகளை அமைத்துப் பலமாகினர். செல்வமும் நிதியும் சேனையும் மிகப் பெரிதாகக் கொண்டிருந்தாலும் அவர்கள் பெரிய ஆரவாரமுடைய கடல் எல்லை மீறி வராததுபோல் தங்கள் எல்லைக்குள் கட்டுப்பட்டு நின்றார்கள்.
விஷ்ணுவின் அம்சமாக வந்த ராம சகோதரர்களின் எட்டு வாரிசுகளும் பூமியின் எட்டு திக்கும் உள்ள அஷ்டதிக் கஜங்கள் எனும் எட்டு யானைகளைப் போல மிகுந்த வல்லமையும் பலமும் கொண்டவர்களாக விளங்கினார்கள்.
ஒருநாள் குசன் தன் சயன அறையில் நடு நசியில் கண்விழித்தபோது முன்பின் அறிந்திராத ஒரு பெண் நிற்பதைக் கண்டான், அவள் கணவனை இழந்தவளைப் போல் உடை அணிந்தவளாய் நின்றாள், கதவுகள் மூடப்பட்ட அந்த அறையில் காற்று இல்லாததால் தீபங்கள் அசைவற்று நின்றன, அப்படி அந்தப் பெண்ணும் நின்று கொண்டிருந்தாள். வெளியே சேவகர்களெல்லாம் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள்.
தன் முன்னோர் வழிவந்த பெரிய ராஜ்ஜியத்தை உடையவனும் இந்திரன் போல் ஒளிபொருந்தியவனும் பகைவர்களை வென்றவனும் சிறந்த உறவினர்களை உடையவனுமான அந்தக் குசனுக்கு எதிரில் நின்ற பெண் “ஜய” என வாழ்த்தி கைகூப்பி நின்றாள்.
தாழிடப்பட்ட அறையிலே கண்ணாடியில் நிழல் விழுவது போல் புகுந்து நின்ற அப்பெண்ணை நோக்கி ஆச்சரியமடைந்த ராமனின் மகனான குசன், படுக்கையில் இருந்து கையூன்றியபடி பாதி எழுந்து அவளை நோக்கிக் கேட்டான்.
“பெண்ணே, தாழிடப்பட்ட அறையினுள் நீ புகுந்துள்ளாய் இது யோகியருக்கே சாத்தியம், ஆனால் உன்னைப் பார்த்தால் யோகி போல் தெரியவில்லை, துக்கமான தோற்றம் கொண்டவளே நீ யார்? தேவலோகப் பெண்ணா? யார் மனைவி, இங்கு நீ வந்த நோக்கம் எனக்குப் புரியவில்லை. ஆனால், ரகுவம்சத்தவர்கள் பிற ஸ்தீரிகளை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள் என்பதை அறிந்துகொண்டு நீ வந்த காரணத்தைச் சொல்” என்றான்.
அவள் சொன்னாள் “அரசே, உம் தந்தை ராமர் தன் இடமான பரமபதம் செல்லும்போது அயோத்தி மக்கள் அனைவரையும் தம்மோடு அழைத்துச் சென்றார். குற்றமற்ற அந்த நகரின் அதிதேவதை நான் இப்போது ரட்சகரின்றி அனாதையாய் நிற்கின்றேன்.
அயோத்தியினை நல்ல அரசர் ஆண்டுவந்தபோது நாட்டில் செல்வம் நிரம்ப இருந்தது, அதனால் எப்போதும் விழாவும் கொண்டாட்டமுமாக மக்கள் எப்போதும் மகிழ்வுடன் இருந்தார்கள், அதனால் நான் பொருள் நிறைந்த குபேரனின் அளகாபுரியினைவிட மேம்பட்ட நிலையில் இருந்தேன். ஆனால், ராமனுக்குப் பின் நீர் அயோத்தியினைத் தலைநகராய்க் கொள்ளாமல்விட்டதால் அந்நகரம் பாழடைய நான் துக்கரமாக இந்நிலை அடைந்துள்ளேன்.
காக்கவேண்டிய நீ இல்லாததால் அயோத்தி நகரம் பாழானது, நகரின் மாளிகைளின் மேல்தளமெல்லாம் இடிந்து மதில் சுவரெல்லாம் சிதறி, கலை இழந்து கிடக்கின்றது, சந்தியா காலத்தில் சூரியன் மறைந்தபின் ஒளியின்றிக் கிடக்கும் வானில் சிதறிக் கிடக்கும் மேகம் போல் அயோத்தி அலங்கோலமாய் இருளடைந்துவிட்டது.
எந்த அயோத்தியில் முன்பு ராஜவீதியில் அழகு பெண்கள் தம் பாதத்தில் சிலம்பு ஒலிக்க காதலரின் இடம் நோக்கி நடந்தார்களோ அந்த அயோத்தியின் வீதிகளில் நரிகள் ஊளையிட்டுத் தங்கள் வாயில் இருந்து வரும் அக்னி ஜூவாலைகளின் ஒளியில் மாமிசம் தேடி அலைகின்றன.
அந்த அயோத்தியின் படித்துறைகளில் முன்பு பெண்கள் நீராடும்போது தங்கள் கைகளால் நீரை அடித்து மகிழ்ந்து எழுப்பும் ஒலி மிருதங்க சத்தம் போல் இனிமையாக கேட்கும், இப்போது அங்குக் காட்டெருமைகள் விழுந்து அமிழ்ந்து தங்கள் கொம்புகளால் எழுப்பும் ஒலி கர்ண கொடூரமாகக் கேட்கின்றது.
முன்பு விடுகளில் வளர்க்கப்பட்ட மயில்கள் அந்த வீடுகளின் கழிகள் முறிந்து போனதால் மரங்களில் அடைக்கலமாயின, மிருதங்க சத்தம் கேட்கவில்லை என்பதால் அவை ஆடுவதுமில்லை, காட்டு நெருப்பில் அவைகளின் தோகைகள் பொசுங்கிய கோலத்தில் இருக்கின்றன.
முன்பு அயோத்தி நகர தெருக்களிலும், படித்துறைகளிலும் பெண்கள் காலில் பூசிய செம்பஞ்சு ரசத்தினால் வந்த பாத தடம் பதிந்திருக்கும், ஆனால் இப்போதோ அந்த இடங்களில் மானினை வேட்டையாடிய புலிகளின் ரத்தம் தோய்ந்த பாதங்களே படிந்திருக்கின்றன.
அந்த அயோத்தி மாளிகையில் முன்பு யானைகள் தாமரையினைப் பறித்து பெண் யானைக்கு தருவது போல் படங்கள் அழகுற வரையபட்டு சுவரினை அழகுபடுத்தின, ஆனால் இப்போது அங்கு யாருமில்லாததால் அப்பக்கம் வந்த சிங்கள் அவைகள் உண்மையான யானைகள் எனக் கருதி அவற்றின் கூரிய நகங்களால் அதனைத் தாக்கியபோது அதன் மந்தகங்களின் நிறம் இழக்கபட்டு நிற்கின்றன, இப்படி அங்கு அங்கு சித்திர யானைகள் சிம்மங்களால் நொறுக்கப்படுகின்றன.
மாளிகைகளில் அழகுற அமைக்கப்பட்ட பெண்களின் சிலைகள் மேல் நாகங்கள் ஊர்ந்து சென்றபோது அவற்றின் தோல் உரிந்து அந்தச் சிலைகள் மேலே படிந்தன, இவை அந்தப் பெண்சிலைகளுக்கு மார்பில் அணியும் வஸ்திரம்போல் காணப்படுகின்றது.
முன்பு சந்திர ஒளியில் மின்னும் அந்த மாளிகைகள் இப்போது அவை சுண்ணாம்பு பூச்சின்றி கறுத்துவிட்டதாலும் மாளிகை சுவரில் புற்களும் செடிகளும் வளர்ந்துகிடப்பதாலும் வெண்ணிறமான சந்திர ஒளியில் மின்னுவது இல்லை.
முன்பு அழகிய பெண்கள் மெல்ல வளைத்து மலர்களைப் பறித்த கொடிகள் இப்போது வேடர்களாலும் குரங்குகளாலும் கசக்கப்படுகின்றன.
அந்த அயோத்தியின் வீடுகளின் ஜன்னல்கள் பகலிலே பெண்கள் முகத்தாலும் இரவிலே விளக்கின் ஒளியாலும் சந்திப்பொழுதில் இனிமையான மணம் கொண்ட புகையாலும் அழகு பெற்றன அப்படியான ஜன்னல்கள் இப்போது சிலந்தி வலைகள் பின்னிக்கிடக்கும்படி ஒளியிழந்து கலையிழந்து போயின.
பூஜைகள் செய்வார் இல்லை என்பதால் சரயு நதிகரையில் பூஜைக்குரிய மலர்கள் இல்லை, நீராட யாரும் இல்லாததால் வாசனைப்பொடிகள் நீரில் கலப்பதில்லை அதனால் நீருக்கு மணமுமில்லை, நதிகரையின் அழகிய அவிசாரிகள் வாழ்ந்த உல்லாச வீடுகள் காலியாகி அழிந்து கிடக்கின்றன, கலை இழந்த சரயு நதியின் இந்நிலைகண்டு நான் மிக வருந்துகின்றேன்.
அதனால் மன்னா உன் தந்தை ஏதோ ஒரு காரணத்துக்காக எடுத்த மானிட உடலை நீங்கித் தன் திவ்யதேசம் சென்றதுபோல் நீயும் இக்குசாவதி நகரைவிட்டுவிட்டு உன் முன்னோர்களின் ராஜதானியாகிய அயோத்தியினை அடைதல் வேண்டும்” என்றாள்.
(தொடரும்..)
காளிதாசனின் ரகுவம்சம் : 68
அயோத்தியின் தேவதை இப்படிச் சொன்னதும் குசன் தான் மீண்டும் அயோத்திக்கு வருவதாக வாக்களித்தான், அதைக் கேட்டு அவனை வணங்கி நன்றி சொன்னபடி அந்த உருவம் மறைந்தது.
மறுநாள் தன் அவையினைக் கூட்டி வசிஷ்டர் முதலான மகா ஞானியர் முன் நடந்த சம்பவத்தைச் சொன்னான் குசன். அதைக் கேட்ட யாவரும் வியந்து ராஜதானியின் நகரைக காக்கும் அதிதேவதைகளின் தரிசனம் பெறுவது அரிதினும் அரிது என்ற அவையினர் அவன் பெற்ற பாக்கியத்தைக் கொண்டாடினார்கள்.
அவன் குஷாவதி நகரை வேதம் ஓதும் பார்ப்பனர்களிடம் கொடுத்துப் பாதுகாக்கச் சொல்லிவிட்டு அயோத்தி நோக்கிச் சென்றான். காற்று செல்லுமிடமெல்லாம் செல்லும் மேகம்போல் அவனின் சேனைகளும் அமைச்சும் அரண்மனை சேவகர்களும் எல்லாரும் அவனைப் பின் தொடர்ந்து சென்றனர்.
அவன் தன் சேனைகளுடன் நடந்து சென்ற காட்சி அவன் தலைநகரே நடப்பது போல் இருந்தது, பெரிய கொடிக்கம்பங்கள் அங்குப் பறந்தன, கருத்த யானைகள் மாடங்கள் போல் விளங்கின, அழகிய தேர்கள் வீடுகள் போல் தென்பட்டன என்பதால் அப்படித் தோன்றிற்று.
வெண் கொற்றக் குடை எழுந்து நிற்கும்படி, பெரிய சேனையுடன் குசன் சென்ற காட்சியானது, பௌர்ணமி காலத்தில் முழு நிலவோடு கடல் ஆர்ப்பரிக்கும் காட்சி போல் இருந்தது, அவன் சேனையின் காலடிகள் கிளப்பிய புழுதி மேல் நோக்கிச் சென்று விஷ்ணுவினால் இரண்டாவதாக அளக்கப்பட்ட வானத்தை எட்டி நின்றன, அது சேனையின் பாரம் தாங்காமல் பூமி வானத்தை நோக்கி முறையிடுவது போலிருந்தது.
அவனின் மிகப்பெரிய சேனையின் ஒரு பகுதி நகர்ந்தது. ஒரு பகுதி ஆங்காங்கே கூடாரமிட்டது. இன்னுமோர் பகுதி குசாவதியில் இருந்து பொருட்களைத் திரட்டிக் கொண்டிருந்தது, இப்படிப் பல பகுதிகளாக அந்தச்சேனை பிரிந்தாலும் மொத்த பெரும்சேனை இதுவோ எனும் அளவு அவற்றின் ஒரு பகுதியே பிரமாண்டமாக இருந்தது.
குசன் சேனையின் யானைகளிடமிருந்து வழிந்த மதநீர் தரையில் விழுந்து சேற்றினை உருவாக்கியது. அதனால் பல இடங்களில் குதிரைகளின் குளம்படி புழுதியினை உருவாக்கவில்லை.
விந்திய மலையில் வழிகளை அமைத்தபடி அச்சேனை சென்றபோது எழுந்த சத்தம் பல கிளைகளாக அப்பக்கம் பாயும் நர்மதா நதி எழுப்பி மலை குகைகளில் எதிரொலிக்கும் சப்தம் போலவே மலையில் எதிரொலித்தது.
விந்திய மலையின் சிவந்த தாதுக்கள் அவன் தேர்ச் சக்கரத்தில் பதிந்த்தால் அவன் தேர்ச் சக்கரம் செந்நிறமானது, அவன் சேனை வீரர்களின் சப்தம் வாத்ய சத்தம் போலிருந்தது, கானகத்து வேடுவர்கள் கொடுத்த காணிக்கை பொருள் பெரிதாக அவன் முன் விந்திய மலை சிகரம் போல் குவிந்திருந்தது.
கங்கையின் வளைவு ஒன்றில் யானைகளை வரிசையாக நிறுத்தி அதன்மேல் நடந்து ஆற்றைக் கடந்தான் குசன், அந்த யானைகள் கல்லணை போல் நிற்க கங்கை அதன் எதிர்திசையில் பாயத் தொடங்கிற்று, இதனால் அன்னப்பறவைகள் அங்கிருந்து வேறு பக்கம் செல்ல அவன் தலைக்கு மேல் வரிசையாகப் பறந்தன, அது அவனுக்கு அவை இனிய சாமரம் வீசுவது போல் இருந்தது.
கபில முனியிடம் சாபம்பெற்ற தம் முன்னோர்களின் சாபம் நீக்கிய கங்கையினை, இப்போது தன் சேனையால் கலங்கடிக்கப்பட்ட கங்கையினை, ரகு வம்சத்தின் குல தேவதையான அந்த மகா கங்கையினை வணங்கினான் குசன்.
அங்கிருந்து சில நாட்கள் பயணம் செய்து தன் முன்னோர்களின் நகரமான சரயு நதிக்கரை அயோத்தியினை அடைந்தான் குசன், அங்கே அம்முன்னோர்கள் நாட்டிய வெற்றி தூண்கள் அவனைப் பெருமையுடன் வரவேற்றன.
அயோத்தி நகர காற்று புஷ்பங்களின் நறுமணத்தை எடுத்து சரயு நதியின் குளிர்ச்சியுடன் கலந்து அவன் மேல் வீசி அவனை வரவேற்றது, அது அவனின் ரகுவம்ச முன்னோர்களின் அன்பான தழுவல் போலிருந்தது.
(தொடரும்..)
காளிதாசனின் ரகுவம்சம் : 69
கோடையால் வறண்ட பூமி மழையால் குளிர்ந்து செழித்து அழகினைத் திரும்பப் பெறுதல் போல குசனின் சிற்பிகளும் கலைஞர்களும் தங்கள் கைவினையால் மீண்டும் அயோத்தியினை அழகுற விரைவிலே எழுப்பிக் கொடுத்தனர்.
ரகுவீரன் எனப் புகழப்பட்ட குசன், சிறந்த கோவில்களைக் கொண்ட புதுப்பிக்கப்பட்ட அயோத்திக்கு உபவாசமிருந்து வேண்டி வாஸ்து அறிந்த மேதைகளைக் கொண்டு உயிர்பலியுடன் பூஜைகளைச் செய்வித்தான்.
காதலன் தனக்கு அன்பான காதலி மனதில் புகுவதுபோல் அந்த அயோத்தியின் அரண்மனைக்குள் குசன் குடியேறினான், தனக்கு அமைக்கப்பட்டது போல அழகிய மாளிகைகளைத் தன் அவையோருக்கும் சேவகருக்கும் அவரவர் தகுதிக்கு ஏற்றபடி அமைத்துக் கொடுத்தான்.
அயோத்தியில் சரயு நதியால் விளைந்த செல்வமெல்லாம் தானியமாக இதர செல்வமாக கொட்டிக் கிடந்தது. அது தெருவெல்லாம் வித விதமான பொருட்களோடு நிறைந்து கிடந்தது, யானை தொழுவத்தில் யானைகள் அணியாக கட்டப்பட்டிருந்தன; உயர்ந்த குதிரைகள் குதிரைலாயத்தில் முறையாக நிறுத்தப்பட்டிருந்தன; இதனால் உடலெங்கும் எல்லா அவயங்களிலும் அணிகலன் அணிந்த பெண்ணைப் போல அயோத்தி நகரம் அழகுற மின்னிற்று.
சீதையின் மகனான குசனால் அயோத்தி மீண்டும் பழைய பொலிவினை எட்டியபோது அது மிகுந்த அழகுற உயர்ந்த செல்வமுற விளங்கிற்று. இதனால் குசன் சொர்க்கத்தின் அரசனான இந்திரனையும் அளகாபுரியின் அரசனான குபேரனையும் ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை.
சில நாட்களில் அவன் மனைவியர் முத்துக்கள் கோர்க்கப்பட்ட நுண்ணிய இடைவெளி உள்ளதும், மார்பின் மேல் புரளும் முத்து மாலைகளைக் கொண்டதும், காற்றினை இழுப்பதுமான வஸ்திரங்களை அணிவதற்குரிய கோடைகாலம் வந்தது.
(முத்து குளிர்ச்சியானது, இதனால் கடும் கோடைக் காலத்தில் அக்காலத்தில் முத்தினால் ஆன உடைகளை மார்பிலும் உடலிலும் அரசகுலத்தவர் சூடியிருப்பர் என்பதைச் சொல்கின்றார் கவி.)
அகத்திய முனிவர் வாழும் தென் திசையினின்று சூரியன் வடதிசை நோக்கி வந்ததால் அந்த உக்கிர வெயிலினால் இமாலயத்துப் பனி உருகி நீர் ஆற்றினில் பெருகிற்று.
பிரயாணத்தினால் மனைவியினைப் பிரிந்து ஏங்கும் கணவன் போல பகல்பொழுது அடங்காத கொதிப்பாகவும் (நீண்டதாகவும்), கணவனை எண்ணி ஏங்கும் மனைவி மெலிந்துவிடுவதை போல அந்தக் கோடைகால இரவு மெலிந்தும் (குறுகியதாக) இருந்தது .
தடாகங்களின் நீர் அந்தக் கோடையினால் வற்றத் துவங்கின, அதனால் நீருக்குள் இருந்த பாசிகள் படிந்த படிகள் கண்களுக்குத் தெரியத் தொங்கின, தாமரை தண்டுகள் நீர் மட்டத்துக்கு வந்தன, நீரின் ஆழம் பெண்களின் இடுப்பளவுக்குக் குறைந்துபோனது.
கோடையின் தொடக்கத்தை அறிவிக்கும் பொருட்டு மாலையில் பூக்கும் மல்லிகை அரும்பிற்று, அந்த அரும்புகள் மேல் தேனை தேடுவதற்காக வந்து அலைந்த வண்டுகளின் செயல் அவை அந்த மல்லிகை மொட்டுக்களின் எண்ணிக்கையினை அறிய விரும்பியது போலிருந்தது.
பெண்களின் கன்னங்களில் அவர்கள் காதலோடு கலவி இன்பம்பெறும்போது ஏற்பட்ட நககீறலின் காயம் இருந்தது, அவைகள் மேல் கோடையினால் உருவான வியர்வைபட்டு ஒரு பசபசப்பு ஏற்பட்டது, அவர்கள் காதில் சொருகி வைத்திருந்த மெல்லிய வாகை பூவின் நுனி இந்தக் காயங்களின் பசைமேல் பட்டு ஒட்டியதால் அவை காதில் இருந்து நழுவினாலும் கீழே விழாமல் இருந்தன.
கோடை வெம்மையினை சமாளிக்கச் செல்வந்தர்கள் வீடுகளில் நீருற்று அமைத்துக் குளிரிவித்தனர், அப்படியே சந்தனம் குழம்பு பூசிய சந்திரகாந்த கல் மேல் படுத்திருந்தனர், அதனைச் சுற்றி நீர் ஓடும்படி எந்திரங்களை அமைத்திருந்தனர்.
தன் துணையான வசந்தகாலம் விடைபெற்றதால் மனமதன் பலம் குறைந்தவனாயிருந்தான். ஆனால், இக்கோடை காலத்தில் பெண்கள் நீராடி தங்கள் அழகிய கூந்தலுக்குத் தூபமிட்டு சிங்காரித்து மல்லிகை சூடி நிற்கும் போது அவன் தான் இழந்த பலத்தை மீண்டும் பெற்றான், காரணம் அந்தப் பெண்களின் அழகிய கோலத்தைக் கண்டவர் மயங்கும்படி மன்மதனின் பலம் அதிகரித்தது.
அந்தக் கோடையில் அர்ஜுன மரத்து பூக்களின் மகரந்தபொடிகள் சிவந்த மஞ்சள் நிறமுடையதாய் விழுந்து கிடந்தன, அது சிவனால் துண்டு துண்டாக வெட்டிப்போடப்பட்ட மன்மதன் வில்லின் நாண் கயிறு போலிருந்தது.
(தொடரும்..)
காளிதாசனின் ரகுவம்சம் : 70
வசந்த பருவத்தில் தாபம், தாஹம், வியர்வை என மூன்றையும் ஒன்றாகத் தந்து பெரும் குற்றமிழைக்கும காலம், கோடையில் மது, மாந்தளிர். பாதிரி பூ என மூன்றையும் ஒன்றாக்கித் தன் தவறைச் சரியாக்குகின்றது.
வசந்த காலத்தில் மதுவில் மணமிக்க மாந்தளிர்களை வெட்டி போட்டு அருந்துவார்கள் அப்போது பாதிரி மலர் பூக்காது, கோடை காலத்தில் பாதிரி பூக்கள் மலர்ந்திருப்பதால் மதுவில் மாந்தளிருடன் அந்தப் பாதிரி பூவும் கலந்து இனிமையினைக் கூட்டுகின்றது.
முதிர்ந்த அப்படியான கோடைகாலத்தில் அம்மக்களின் சிரமத்தை போக்குபவர்கள் இருவர்தான், ஒருவன் குசன் அவன் பாதம் பணிந்த மக்களெல்லாம் ஆறுதல் அடைந்தார்கள். இன்னொருவன் சந்திரன் பகலெல்லாம் கொடிய வெம்மையில் வாடும் மக்கள் இரவில் சந்திரனின் ஒளியால் ஆறுதல் அடைந்தனர்.
அன்னங்கள் விளையாடுவதும் கரையில் அழகிய புஷ்பங்களைக் கொண்டதுமான அந்தச் சரயு நதியில் தன் இளம் காதலிகளோடு நீராட விரும்பினான் குசன், துயரமான நேரத்தில் பகவானின் சந்நிதியில் அமர்வதும் கோடையில் நீரினுள் அமர்வதும் ஆறுதல் தரும் விஷயங்கள்.
மன்னனுக்காக சரயு நதிகரையில் முகாம்கள் அமைக்கப்பட்டன; அவன் அச்சமின்றி நீராட ஏதுவாக அந்நதியின் முதலைகளை எல்லாம் செம்படவர் பிடித்து அகற்றினர்; மன்னன் நீராடி மகிழ்ந்தபின் அவன் பருகி உண்டு மகிழ்வதற்காய் சேவகர் பானங்களும் உணவும் தயாரிக்கத் துவங்கினர்; இப்படி விஷ்ணுவுக்கு நிகரான பராக்கிரமுடைய அவன் சரயு நதியில் நீராட வந்தான்.
குசன் மனம் கவர்ந்த பெண்கள் பலர் ஒரே நேரத்தில் அவனோடு நீராட படித்துறையில் நெருக்கிக் கொண்டு தோள்களை இடித்துக் கொண்டு பாத சிலம்பு ஒலிக்க நதியில் இறங்கினார்கள். திடீரென உருவான அந்தச் சத்தத்தால் நதியில் நீந்தி கொண்டிருந்த அன்னங்கள் அச்சம் கொண்டன.
அப்பெண்கள் நீரில் விளையாடும் அழகு அன்னங்களாலும் தரமுடியாதது என்பதால் அதனைக் காண விருப்பம் கொண்டு படகு ஒன்றில் அமர்ந்து கொண்ட குசன், தனக்கு அங்குச் சாமரம் வீசும் வேடுவப்பெண்ணிடம் சொல்லத் தொடங்கினான்.
“என் அந்தபுரத்தின் நூற்றுகணக்கான பெண்கள் இந்த ஆற்று நீரில் இறங்கியதில் அவர்கள் உடலில் பூசப்பட்ட பொடிகள் நீரில் கலந்துவிட்டன, அது சந்தியா பொழுதின் மேகங்கள் போல் பல வண்ண ஓவியமாய்த் தெரிகின்றது.
ஹா… அந்தச் சரயு நதி அந்தப் பெண்களின் அழகான கண்களில் பூசப்பட்ட மையினை அழித்தாலும் அவர்கள் கண்களுக்குச் சிவப்பு வண்ணம் பூசிவிடும் அலங்காரப் பெண்ணாகிவிட்டாள், அவள் ரசனையானவள்.
அப்பெண்களின் இடையோ சிறியது அவர்களின் ஸ்தனங்களோ பெரியது, மிகச் சிறிய இடையால் அந்த ஸ்தனங்களைச் சுமக்கமுடியாதவர்களாய் ஆற்று நீரில் கழுத்துவரை புதைந்துபோயினர்.
இறுக்கக்கட்டிய அணிகலனைக் கொண்ட தோள்களை அசைத்தபடி அவர்கள் நீரில் ஆடும் ஆவலை கொண்டிருப்பதால் இடைசிறுத்து அடியும் மடியும் பருத்த அப்பெண்கள் உற்சாகம் கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் காதில் உள்ள வாகைமலரின் கொழுந்தினை பாசி என நினைத்து உண்ண வரும் ஆற்றுமீன்கள் ஏமாற்றமடைந்து திரும்பின.
அப்பெண்கள் கைகளினால் நீரை அடித்து விளையாடியபோது அவர்கள் மார்பில் முத்து முத்தாய் நீர் துளிகள் படிந்தன, இதனால் கழுத்தில் இருக்கும் முத்துமாலை நழுவி வீழ்ந்தாலும் கழுத்தில் முத்துமாலை கிடப்பதுபோலவே அப்பெண்கள் உணர்ந்து கொண்டார்கள்.
பெண்களின் அழகுக்கு ஒப்பிடப்படும் எல்லாமும் அங்கே ஆற்றில் இருந்தது, அவர்களது வயிற்று தொப்புள் போல ஆற்றில் சுழிகள் இருந்தன, அவர்கள் புருவத்தின் அசைவினைப் போல சிற்றலைகள் எழுந்து விரிந்தன, அவர்களின் இணைந்த ஸ்தனங்களைப் போன்றதான சக்கரவாக பறவைகள் இணையாக அங்கே அமர்ந்திருந்தன.
அப்பெண்கள் நீரில் கைகளை அடிக்கும்போது எழும் ஒலியானது மிருதங்கத்தின் இனிய ஒலிபோல் இருந்தது, அத்தோடு அப்பெண்களின் சிரிப்பொலி இனிய சங்கீதமாய் இருந்தது, இதைக் கேடடு சற்றுத் தள்ளியிருந்த மயில்கள் அவை மேகத்தின் ஒலி என மகிழ்ந்து தோகைவிரித்து ஆடத் தொடங்கின, எப்போதும் தன் அழகான தோகையால் அப்பெண்களின் அழகுடன் போட்டியிடும் மயில்கள் அவர்களின் சிரிப்பொலிக்குப் போட்டியாக அகவலும் செய்தன.
(தொடரும்..)