காளிதாசனின் ரகுவம்சம் : 76-80
காளிதாசனின் ரகுவம்சம் : 76
அந்தத் தேவநீகனுக்கு அஹிகு என்றொரு மகன் பிறந்தான், அவன் தன் இனிய மொழியாலும் நடத்தையாலும் தன்னை சார்ந்தோரை மட்டுமல்லாமல் எதிரிகளையும் வசமாக்கினான். அஞ்சி ஓடும் இயல்புடைய மான்களும் இனிய மொழிக்கும் இசைக்கும் மயங்கி அருகே வருவது போல அவன் தன் இனிமையான சொற்களால் பகைவரையும் வளைத்து நல்லாட்சி செய்தான்.
அஹீகு எனும் அந்த அரசன் குறையாத தோள்வலிமை உடையவன், இளம்வயது ஆயினும் அவன் கீழோருடன் நட்பு கொண்டிருக்கவில்லை. அதனால் குடி சூது என எந்தத் தீய பழக்கமும் அவனை அண்டவில்லை, அவன் இந்த உலகு அனைத்தையும் தன் குடைக்குக் கீழ் ஆட்சி செய்தான்.
தக்கவர் தகாதவர் என அறிந்து மனிதரின் தராதரத்தை அறிந்து அவன் ஆட்சி செய்தான். இதனால் பூமியில் அவதரித்த திருமாலை போல சாம, பேத, தான, தண்டம் எனும் நான்கு வழிகளை உபயோகித்து நான்கு திசைகளையும் தந்தைக்குப் பின் ஆட்சி செய்து வந்தான்.
அஹீகு தேவலோக யாத்திரை அடைந்ததும் வணங்காமுடி கொண்டவனும் பாரியாத்ர மலையினைத் தன் வலிமையால் வென்றவனுமான பாரியாத்ரன் எனும் அவன் மகனை ராஜலட்சுமி அடைந்து அரசனாக்கினாள்.
அந்தப் பாரியாத்ரனுக்கு அகன்ற மார்பும் ஆழ்ந்த பொருளோடு கூடிய மனமும் கொண்ட சிலன் எனும் மகன் பிறந்தான், அவன் பகைவர்களை எல்லாம் வென்றதால் ஏற்பட்ட புகழ்மொழியினைக் கேட்டு நாணம் கொண்டான்.
சிறைபட்டு கிடப்போர்க்கு எந்தச் சுதந்திரமுமில்லை, அவ்வாறே ராஜரீகத்தை ஏற்ற அரசனும் தன் கடமையிலிருந்து வெளிவரமுடியாது, அதன் வசம் சென்று சிக்கிக் கொள்வான். அப்படி ராஜரீகத்தில் சிக்கிக் கிடந்த பாரியாத்ரனும் தன் மகன் சிலனிடம் உரிய காலம் அரசை ஒப்படைத்த பின்பே இன்ப வாழ்வினை அனுபவிக்க ஆரம்பித்தான்.
பாரியாத்ரன் உலக இன்பங்களை அனுபவிக்க தொங்கினான். அதிலே திருப்தியற்றவனாய் மூழ்கிக் கிடந்தான், அவன் இளம்பெண்களுடன் கூடி மகிழ்வதைக் கண்டு பொறாமைப்பட்ட கிழ பருவம் அவனை அடைந்தது, அவனைப் பலவீனனாக்கிற்று
அந்தச் சிலனுக்கு ஆழ்ந்த தொப்புளைக் கொண்டவனும் விஷ்ணுவின் சாயல் கொண்டவனுமான உந்நாபன் எனும் மகன் பிறந்தான், அவன் பன்னிரண்டு வகை அரசர்களுக்கும் தலைவனாய் வீற்றிருந்தான்.
உந்நாபனுக்குப் பின் இந்திரனைப் போல பலசாலியும் இடியோசை எழுப்புதல் போல போர் செய்பவனுமான வஜ்ரநாபன் எனும் அவன் மகன் அரியணை ஏறினான், வஜ்ரம் எனும் இடியோசையால் வாழும் பூமிக்கு அவன் அரசனாய் இருந்தான்.
வஜ்ரநாபன் தன் புண்ணியத்ததால் சொர்க்கம் அடைந்தபின் அவன் மகன் சங்கண்ணன் அரசனானன், அவனுக்குக் கடல்களை எல்லையாக உடைய இந்தப் பூமி தன் சுரங்கங்களின் ரத்தினத்தால் மணிகளை அளித்து மகிழ்ந்தது.
சங்கண்ணனுக்கு சூரியனைப் போன்ற ஒளியுடையவனும் அஸ்வினி தேவர்களின் அம்சம் கொண்ட மகன் பிறந்தான், அவனின் பெரிய ராஜ்ஜியத்தின் கடலோரம் காலாட்படை வீரர்களும் குதிரைபடை வீரர்களும் வசித்தார்கள், விய்ஷிதாஜ்வன் எனும் பெயர்கொண்ட அவன் எதிரிகளின்றி உலகை ஆண்டான்.
அந்த வியுஷிதாஜ்வன் காசியில் கோவில் கொண்ட விஸ்வநாதரை வழிபட்டு உலகிற்கெல்லாம் நண்பனான விஸ்வஹசன் எனும் மகனைத் தன் மரு உருவாகப் பெற்றான்.
நீதி சாஸ்திரம் அறிந்த விஸ்வஹசனுக்கு ஹிரண்யநாபன் எனும் மகன் பிறந்தான், நெருப்பு காற்றுடன் கூடிக் காட்டை அழிப்பது போல் தன் மகனுடன் கூடி பகைவரை அழித்தான் விஸ்வஹாசன், காட்டு நெருப்பை காற்றோடு தாங்கமுடியா மரங்கள் போல பகைவர்கள் அவனோடு வீழ்ந்து அழிந்தார்கள்.
மகனைப் பெற்றதால் பித்ருக்களுக்கான கடன் தீர்ந்தது என நிறைவு கொண்ட விஸ்வஹசன் மகன் ஹிரண்யகாபனை அரசனாக்கிவிட்டு மோட்சத்தை அடைய விரும்பி கானகம் சென்று மரவுரி தரித்துத் தவத்தில் அமர்ந்தான்.
கோசலநாட்டு அரசனனும், சூரியகுலத்துக்குச் சிறப்பை தந்தவனும், சோம யாகம் பல செய்தவனுமான ஹிரண்ய நாபனுக்கு சந்திரன் போன்ற அழகான மகனாக மூத்த மனைவியிடம் இருந்து கௌசல்யன் பிறந்து தந்தைக்குப் பின் ஆட்சி செய்தான்.
தேவர்களும் புகழும் வல்லமை கொண்ட அந்தக் கௌசல்யன் தெய்வ ஞானம் உடைய தன் மகனான பிரம்மிஷ்டன் என்பவனை அரசனாக்கிவிட்டு மோட்சத்தை அடைந்தான்.
தன் ரகுவம்சத்துக்கு மாலை போன்றவனும் நல்ல புதல்வனை உடையவனுமான அந்த அரசன் பிரம்மிஷ்டன் சாசனங்களை அடிப்படையாக கொண்டு நீதிபரிபாலனம் செய்து வந்தான், இதனால் ஆனந்த கண்ணீர் பெருக்கு கொண்ட கண்களுடன் மக்கள் நீண்ட காலம் மகிழ்ந்திருந்தனர்.
கருடக்கொடி ஏந்தும் திருமாலுக்குச் சமமானனும், தாமரை இதழ் போன்ற கண்களைக் கொண்டவனுமான பிரம்மிஷ்டனுக்கு புத்திரன் என்ற புதல்வன் பிறந்தான், அவன் தன் பணிவிடையாலும் நல்ல நடத்தையாலும் தன் தந்தை புத்திரனைப் பெற்றவருள் முதலானவராக இருக்கும்படிச் செய்தான்.
(தொடரும்..)
காளிதாசனின் ரகுவம்சம் : 77
பிரம்மிஷ்டன் இன்பம் கொடுக்கும் விஷயத்தில் எல்லாம் விலகியதால் சொர்க்கம் சென்று இந்திரனைச் சந்திக்கும் தகுதி பெற்றான். அதனை இன்னும் உறுதிப்படுத்த திரிபுஷ்கரம் எனும் திரிவேணி சங்கமமான பிராயகையில் நீராடித் தூய்மைப் பெற்று புண்ணியம் பல பெற்றான், அந்தப் புண்ணியங்கள் அவனைச் சொர்க்கலோகம் எடுத்துச் சென்றன, அவன் அரியணை மகன் புத்திரனுக்கு வந்தது.
புத்திரனின் மனைவி புஷ்ய (பூச) நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடிய நாளில் (தைப்பூசம்) பௌர்ணமி ஒளியால் மின்னும் புஷ்பராக கல் போன்ற பொலிவுடன் ஒரு மகனைப் பெற்றாள். அவன் புஷ்யன் என்றானான், பூச நட்சத்திர நாளில் மக்கள் விரும்பியதெல்லாம் கிடைப்பது போல அவனால் குடிகள் தாங்கள் விரும்பிய எல்லாமும் பெற்று வந்தார்கள்.
அவனை அரசனாக்கிய புத்திரன் தன் மறுபிறப்பினை எண்ணி அஞ்சினான். அதனால் ஜைமினி எனும் முனிவரின் சீடனாகக் கானகம் சென்றவன், அவரிடம் சீடனாகி யோகமும் தவமுமாய் வாழ்ந்த அவன் பிறப்பற்ற நிலைக்காய் தவம் செய்து முனிவரின் வழிகாட்டலில் யோகத்தினால் முக்தியினை அடைந்தான்.
புஷ்யனுக்குப் பின் அவன் மகனும் துருவ நட்சத்திரத்தை ஒத்தவனுமான துருவஸந்தி அரியணை அடைந்தான், அவன் ஒரே நிலைபாட்டில் இருந்ததால் அவன் ஆட்சியில் பகைவர்கள் எந்த ஒப்பந்தத்தையும் நிறுத்தாமல் தொடர்ந்தனர், இதனால் மாறுபாடே இல்லா ஆட்சியினை நடத்தியவன்.
அவனுக்கொரு மகன் இருந்தான். அந்த பாலகன் சுக்லபட்ச பிரதமையில் மின்னும் நிலவுபோல் அழகுடையவனாக இருந்தான், துருவசந்தி ஒருமுறை வேட்டைக்குச் சென்றபோது தைரியமாகக் சிங்கத்துடன் வெறும் கையால் மோதியபோது அதனால் கொல்லப்பட்டான்.
சிங்கத்தால் சொர்க்கம் அடைந்தான் துருவசந்தி. அதனால் தேசம் அரசனற்று போயிற்று, அதனால் பாலகனான அவனுக்குப் பருவம் வரவில்லை என்றாலும் ரகுவம்சத்தின் நூலாக வந்த அவனை அயோத்திக்கு அரசனாக்கி மந்திரிகள் புடைசூழ ஆள ஆரம்பித்தனர்.
பிரசித்தியான அரசவம்சமான ரகுவம்சம் அவனால் பிறை நிலவினைக் கொண்ட வானம் போலவும், குட்டி சிங்கத்தைக் கொண்ட கானகம் போலவும், மலராத மொட்டை கொண்ட தாமரை மலர்ப்போலவும் இருந்தது, எதிர்காலம் நோக்கிக் காத்திருந்தது.
(வளரும் ஒளியாக பலமாக லட்சுமி கடாட்சம் கொண்டவனாக அவன் இருந்தான் என உருவகமாகச் சொல்கின்றார் கவி காளிதாசர்)
சிறிய யானைகுட்டி போன்ற மேகம் காற்றால் பெரிதாவது போல இந்தப் பாலகன் காலத்தால் அவன் தந்தை போல் பெரும் இடம் அடைவான் எனத் தேசம் எதிர்பார்த்தது.
ஆறுவயது நிரம்பியவனாய் அழகிய உடையில் அரசனின் அடையாளத்தோடு மாவுத்தனால் வழிநடத்தப்படும் யானைமேல் அமர்ந்திருந்த அவனை மக்கள் அவன் தந்தையினைக் காண்பது போலவே மரியாதையுடன் கண்டார்கள், வயதில் சிறியவனான அவன் தடுமாறாதபடி மாவுத்தன் காத்துக் கொண்டிருந்தான்.
அவனால் தந்தையின் அரியணையினைத் தன் சிறிய உருவத்தால் நிரப்பமுடியவில்லை எனினும் சிறிய தங்கம் தன் பொலிவினால் தான் இருக்கும் இடத்தை ஒளியால் நிரப்புவது போல் அந்த அரியணையினைத் தன் தேஜஸால் நிரப்பினான்.
அவனின் குட்டி கால்களின் பாதங்கள் அரியணையின் முன் இருந்த பாத பீடத்தைக் கூட எட்டமுடியாமல் தொங்கிக் கொண்டிருந்தன. ஆனால், அந்தப் பாதங்களையும் தங்கள் தலைமேல் வைத்து எதிரிகள் வணங்கினர், சிறிய மிளகு காரம் குறையாதது போல் அவன் சிறியவன் என்றாலும் அவனால் ரகுவம்ச பெருமை குறையவில்லை.
சிறிய அளவுள்ளதாயினும் இந்திரநீலக்கல் அதன் ஒளியால் மஹாநீலம் என்றே அழைக்கப்படும். அதுபோல வயதில் சிறியவனாக இருந்தாலும் அவன் தன் புகழால் மஹாராஜா என அழைக்கப்பட்டான் அது அவனுக்குப் பொருத்தமானதாய் இருந்தது.
சிறிய படகு கடலைக் கடப்பது போல் சிறியவனாக இருந்தாலும் அவனின் உத்தரவு கடல் கடந்த இடங்களிலும் அவனுக்கு வெற்றியினைத் தந்தது.
பொன்னால் ஆன கீரிடத்தைத் தலையில் அணிந்து வெற்றித் திலகம் இட்டு ஆட்சி செய்த அவன் பகைவரின் மனைவியரின் நெற்றியில் திலகமே இல்லாமல் இருந்தது.
அவன் வாகைப்பூவினை விட மிருதுவான தேகத்தைக் கொண்டிருந்தான், ஆபரணங்களை அணிவதில் கூட அவன் சிரமம் அடையும்படி பாலகனாய் இருந்தான், ஆனாலும் இயல்பாய் வம்சமாய் வந்த ஆட்சி அவனுக்குப் பூவுக்குள் மணம்போல் இயல்பாய் வந்தது.
சுதர்சன் என அறியப்பட்ட அவன் பலகையில் எழுதி படிக்கும் வயதுக்கு முன்பே தன்னைச் சூழ இருந்த பெரியோர்களின் துணையால் அறியவேண்டியன அத்தனையும் அறிந்து கொண்டான், அந்த அனுபவம் அவனைப் பலகை முன் இராதபடி ஆட்சியினை நோக்கி அழைத்துச் சென்றது.
அரசர்களின் மார்பை தழுவும் ராஜ்ஜிய லட்சுமி அவனின் சிறிய மார்பைக் கண்டு புன்னகைத்து அவனை நேரடியாக தழுவாமல் தன் வெண்கொற்ற கொடையின் நிழல் மூலம் தழுவிக் கொண்டாள்.
பிஞ்சு கரங்களைக் கொண்ட அவனின் தோள்கள் நுகத்தடி போல வலிமையானது அல்ல, அவனின் கரங்களில் வில்லின் நாணால் வந்த தழும்புகள் இல்லை, அவன் வாளை பற்றியவனுமில்லை. ஆனால், அவனால் பூமி பாதுகாப்பாய் இருந்தது.
அவன் அங்கங்கள் வளர வளர அவனும் ரகுவம்சத்தின் குணங்களோடு வளர்ந்தான், அவனின் ஆட்சிக்கு அக்குணங்கள் பெருமையாய் வளர்ந்தன, சூட்சும வடிவில் அவனுள் இருந்த அந்தக் குணங்கள் மேகம்போல் பெரிதாக உருப்பெற்றன.
அவன் தன் முன் ஜென்ம பலனால் ஆசிரியர்களுக்கு சிரமம் வைக்காதபடி கல்விமுறை அத்தனையும் எளிதில் கற்றுக் கொண்டான், எதுவும் அவனுக்குச் சிரமமாக இல்லை. இதனால் மூவகை அடிப்படை கல்வியான வேதம், கிருமி சாஸ்திரம், ராஜநீதி எனும் மூன்று வித்தைகளை எந்தக் கஷ்டமுமின்றி எளிதில் கற்றுக் கொண்டான். அறிவுடையவனான அவனால் மக்களெல்லாம் மகிழ்ந்தார்கள்.
ஆயுத வித்தையில் அவன் தேறினான், உடலின் மேற்பாதியினை மட்டும் நீட்டி தலையில் கொண்டையிட்ட கோலத்துடனும், காதுவரை இழுக்கப்படும் நாணைக் கொண்ட வில்லோடும் அவன் போர்கலைகளோடு வளர்ந்தான்.
ஆண்களின் வாலிப காலம் என்பது பார்வையிலே மதுவினை விழுங்குவது போல் பெண்களின் கண்கள் ஆண்மேல் விழும் காலம், அப்படியான பருவத்தை சுதர்சன் அடைந்தான். மன்மதன் எனும் மரத்தின் முதல் பூ பூக்கும் பருவம், யவனக் கொடியின் முதல் தளிர் போல் அவனுள் காதல் உணர்வு இயற்கையின் விதிப்படி பரவ தொடங்கிற்று, கலவி இன்பங்களுக்கு முதல் காரணமான அந்த நிலையினை சுதர்சன் அடைந்தான்.
ராஜ்ஜியத்தை ரகுவம்சம் வழிவழியாக காக்கும் பொருட்டு அவனுக்கேற்ற தூய சந்ததியினை உருவாக்கும் தகுதி கொண்ட அரசகுமாரிகளை மந்திரிகள் உலகெல்லாம் சென்று தேடிக் கொண்டுவந்து அவனுக்கு மணமுடித்தார்கள, அவர்கள் சித்திரத்தில் முழுமையாக வரையமுடியாதபடி பெரும் அழகு கொண்டிருந்தார்கள், அவர்கள் சுதர்சனை மணமுடித்தால் ராஜலட்சுமிக்கும் பூமிக்கும் சக்களத்திளாய் மாறிப்போனார்கள்.
(தொடரும்)
காளிதாசனின் ரகுவம்சம் : 78
கூரிய அறிவு கொண்டவனும் புலன்களையும் வென்றவனுமான அந்தச் சுதர்சனன் முதுமை அடைந்த போது அக்னி போன்ற அம்சமுடைய தன் மகன் அக்னி வர்ணன் என்பவனை அரசனாக்கிவிட்டு தவயோகிகள் வாழும் நைமிசாரண்யத்தினை முக்தி அடையும்படி அடைந்தான்.
அரண்மனையில் வெதுவெதுப்பானதும் வாசனை திரவியங்கள் கலந்த நீரில் நீராடியவனும், மெல்லிய பஞ்சு மெத்தையில் புரண்டவனும் எல்லா இன்ப வாழ்க்கையும் கண்ட அவன் தன் பழைய வாழ்வினை நினையாமல் ஓடைகளில் நீராடி தர்ப்பை புல் மேல் தூங்கி பர்ணசாலையின் எளிய வாழ்வினை மேற்கொண்டான், பழைய அரசபோக வாழ்வினை அவன் கொஞ்சமும் நினைக்கவே இல்லை.
அக்னிவர்ணனுக்குத் தந்தையின் ராஜ்யம் அனுபவிக்க கிடைத்ததே அன்றி பகைவரை அடக்குதல் போன்ற சிக்கல்களைச் சமாளிப்பதற்காக அல்ல, தொல்லை ஏதுமின்றி தகப்பன் விட்டுச்சென்ற ராஜ்ஜியதை அவன் சிரமம் ஏதுமின்றி நடத்தினான்.
சிலகாலம் தன் வம்சப்படி நல்லாட்சி நடத்தியவன் இனி அங்குச் சிக்கல் ஏதுமில்லை என்பதை உணர்ந்து மந்திரிகளிடன் ஆட்சியினை கொடுத்துவிட்டு இளம்பெண்களோடு கூடி இன்பவாழ்வில் மூழ்கினான், ராஜ்ஜியத்தை ஆண்ட அவனைக் காமம் ஆட்சி செய்ய துவங்கிற்று.
அவனின் அரண்மனை இன்ப சுகங்களின் தலமாயிற்று, ஆற்றுநீர்போல் இன்பக் கொண்டாட்டம் இடைவிடாமல் தொடர்ந்தது, இனிய மிருதங்க ஒலி இசைக்க ஆடலும் பாடலுமாக ஒலித்த அந்த அரங்கினில் பின்னால் வந்த கலைகள் ஒவ்வொன்றும் முந்தையதை தோற்கடிக்கும்படி சங்கீதமும் நடனும் அரங்கேறிற்று.
யானை அங்குசத்துக்கு அடங்குவது போல் மானிடரின் ஐம்புலன்களும் ஒடுங்குமிடம் காமம், காமவசப்பட்ட அந்த மன்னன் ஒரு கணம் கூட இந்த இன்பங்களைப் பிரிய மனமில்லாததால் மக்களைச் சந்திக்கக் கூட சில நிமிடம் ஒதுக்க மனமில்லாதவனாய் அந்தபுரத்திலே மயங்கிக் கிடந்தான்.
மன்னனின் முகம்காண ஏங்கியோர்க்கு ஜன்னல் இடையில் அவன் பாதம் மட்டுமே தெரிந்தது, அந்தச் சிவந்த பாதம் சூரிய ஒளிபட்டு மின்னும் தாமரை போல் காலையில் ஜொலித்தது. மக்கள் அதைக் கண்டு வணங்கி மகிழ்ந்தனர், அவர்களின் ராஜபக்தி அப்படி இருந்தது.
இளமைபருவத்தின் உந்துதலால் காமத்தில் மூழ்கிய அக்னி வர்ணன் அரண்மனையின் தடாகங்களில் இளம்பெண்களோடு விளையாடிக் களித்தான், இன்ப அறைகள் சூழ இருந்த அந்தத் தடாகத்தின் தாமரைகள் இளம்பெண்களின் மார்பில் மோதி அசைந்த காட்சியில் மனம் மயங்கிக் கிடந்தான்.
அந்த இளம்பெண்கள் நீரில் அவனோடு விளையாடிய போது அவர்களின் கண்களின் மை கரைந்தது, உதட்டுச்சாயமும் கரைந்தது. ஆனாலும் அப்பெண்கள் இயற்கையிலே அழகு கொண்டவர்கள் என்பதால் கண்களின் கருமையும் இதழின் சிகப்பும் அப்படியே இருந்தது, அந்த அழகான பெண்களின் இயற்கை அழகில் அவன் மயங்கினான்.
இளம்பெண்களுடன் நீரில் விளையாடிய அந்த அரசன் அப்பெண்களுடன் மது அருந்தும் கூடம் சென்றான், இனிய மது என்பது பார்வைக்கு அழகும் இனிய மணமும் கொண்டதாக இருத்தல் வேண்டும் என்பதால் அப்படியான மதுவினைக் கொண்ட குவளைகள் அங்கே நிரம்பியிருந்தன.
அந்தப் பெண்கள் குவளையில் இருந்த மதுவினை விரும்பாமல் அவன் வாயில் இருந்த மதுவினையே விரும்பினார்கள், அவனும் அவர்கள் இதழோரம் கசியும் மதுவினை அந்த வாயோடு உறிஞ்சி அருந்தவே விரும்பினான்.
மதுவுக்கு எல்லா உணர்வையும் அதிகரிக்கும் சக்தி உண்டு, அங்கே அந்த மது காதல் இன்பத்தை அதிகரித்துக் கொடுத்து அவன் இன்பத்தை இன்னும் தூண்டிற்று.
இனிய நாதங்களை இசைக்கும் வீணை கொண்ட பெண்களும், இனிய பாடலை பாடிய பெண்களும், இன்னும் மயக்கும் கண்களையும் இதழ்களையும் கொண்ட பெண்களும் அவன் மடியில் இருந்து கொண்டே இருந்தார்கள், அவன் மடி காலியாக இருந்ததே இல்லை.
ஆடல் கலையிலும் விருப்பமும் இன்பமும் கொண்ட அம்மன்னன் தன் கையாலே மிருதங்கம் வாசிக்க நர்த்தக பெண்கள் அழகாக ஆடினார்கள், அவன் மிருதங்கம் வாசிக்கும் போது அவன் கைவிரல்கள் காட்டிய லாவகத்திலும் அதனால் அவன் நகைகளும் மாலையும் ஆடிய அசைவிலும் மயங்கிய பெண்கள் நடனத்தில் அபிநயங்களைத் தவறாக செய்து மாட்டிக் கொண்டு வெட்கப்பட்டனர்.
அவர்கள் அவன்முன் ஆடிக் களைத்து அமர்ந்த வேளை, வைத்தியன் தன் வாயினால் இன்னொருவர் வாயினில் ஊதி பலம் கொடுப்பது போல் அப்பெண்களின் வாயில் தன் வாயினால் அன்புடன் முத்தமிட்டான், மன்னனின் அந்த இன்ப முத்தத்தில் பெண்கள் களைப்பு நீங்கி உற்சாகம் அடைந்தனர், இப்படியாக இன்ப வாழ்வில் அவன் குபேரன் இந்திரன் என்போர்களையும் மிஞ்சி நின்றான்.
காமவசப்பட்ட அக்னிவர்மன் அங்குப் பல பெண்கள் மேல் ஆசைகொண்டான், அதை அவர்களிடம் தெரிவிக்க பல ரகசிய சமிக்கைஞகளைச் செய்தான். ஆனால், அவன் மனைவியர் அதை அறிந்து புருவ நெற்றியினை நெரித்து அவனை முறைத்தனர், தங்கள் மேகலையின் மாணிக்கம் கோர்க்கப்பட்ட பட்டு நூலைக் காட்டி எச்சரித்தனர், நாட்டிய பெண்கள் பக்கம் அவன் வீழாமல் குறுக்கே வந்து சென்றனர்.
(தொடரும்..)
காளிதாசனின் ரகுவம்சம் : 79
மனைவியரின் பிடியினால் அந்த நடன நர்த்தகப் பெண்களை சந்திக்க முடியாத மன்னன் அவர்களை முன்பு தொட்ட விரல்களின் ஏக்கம் தீர அவர்களைச் சித்திரமாக வரைந்து பொழுதுகளை மிகுந்த ஏக்கத்துடன் கடந்து சென்றான்.
அரசியர் தங்கள் கணவனான அக்னிவர்மன் தேடும் நடன நங்கையர் மேல் பெரும் கோபம் கொண்டனர், தங்கன் அன்புகுரியவனான அம்மன்னன் நடன மங்கையர் மேல் கொண்ட அன்பால் அவர்கள் மேல் ஆத்திரம் கொண்டிருந்தாலும் தன் அன்பான கணவன் மனம் குளிரும்படி பண்டிகை நாட்களிலும் இதர விசேஷங்களிலும் அவர்களை அரண்மனைக்கு அழைத்து நடனமாடச் செய்து அவன் மனதினை மகிழசெய்தபடியே இருந்தனர்.
அவன் வேறு பெண்களுடன் இரவை கழித்து அவர்களோடு கலந்த அடையாளங்களுடன் காலையில் அவர்கள்முன் வந்து நிற்பான், ஆத்திரமடையும் அவர்களைக் கூப்பிய கையுடன் சமாதானம் செய்வான், ஆனால் மறுநாளும் அதே கோலத்தினைத் தொடர்வான், இதனால் அரசியர் மனம் வருந்தினர்.
அவன் உறக்கத்தில் தன் அரசியர் பெயரைச் சொல்லாது தனக்குப் பிடித்த நடன மங்கையின் பெயரைச் சொல்வதால் அரசியர் கோபத்தில் ஆழ்ந்தனர், அவன் கண் விழித்ததும் வளையலை உடைத்தும், புலம்பியும், தலையினைத் திருப்பியபடி படுத்தும் அவனை அவமரியாதை செய்தார்கள்.
அவன் அரசியருக்கும் அந்தபுர பெண்களுக்கும் தெரியாமல் நந்தவனத்தில் சேடி பெண்களால் மலர்கொடிகளால் வீடு செய்து மலர்களால் படுக்கை செய்து இன்பங்களை நுகர்ந்தான். ஆனால், அப்பெண்களோ அரசியர்க்கு இது தெரிந்தால் என்னாகுமென நடுங்கிக் கொண்டே இருந்தார்கள்.
அவன் தன் அன்புகுரிய பெண்களின் பெயரை தவறாக இன்னொரு பெண்ணிடம் சொல்லி அழைக்கும் போது பெண்கள் புன்னகைத்தபடி “அவளுக்கு உங்களிடமிருந்து கிடைத்த பெரும் அன்பு எங்களுக்குக் கிடைக்காமல் போயிற்றே” எனச் சொல்லி பரிஹாசம் செய்தாலும் அவனால் அப்பெயர்களைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
அவன் படுக்கை எப்போதும் அவன் நுகர்ந்த இன்பங்களின் சாட்சியாக இருந்தது, பெண்களின் முன்னெற்றியில் இருந்து விழுந்த வாசனைப் பொடி, இன்னும் முகங்களிலும் அங்கங்களிலும் இருந்து உதிர்ந்த வாசனைப் பொடிகளும், தலையில் இருந்து விழுந்த புஷ்பங்ளும், பாதத்தில் இட்டிருந்த செம்பஞ்சு வண்ணமும் படுக்கையில் பதிந்திருந்தன, அவர்கள் இடுப்பின் மேகலை உதிர்ந்து கிடந்தது. இவை எல்லாம் அவன் பலவகைகளில் நுகர்ந்த இன்பத்தின் சாட்சிகளாய் இருந்தன.
அவன் அப்பெண்களின் பாதத்தில் செம்பஞ்சு வண்ணம் பூச தானே ஆவலாய் இருந்தான், ஆனால் அதைப் பூசும்போது அப்பெண்களின் அழகான இடையில் கண்கள் சென்றதால் பாதத்தில் வண்ணத்தை அவன் கவனமாகச் செய்யமுடியாமல் மேகலை அணிவிக்கட்டுமா எனும்படி அடுத்த இடம் தாவினான்.
புதிய பெண்கள் நாணத்தால் அவனைத் தன் கைகளால் தடுத்து முகத்தை திருப்பிக் கொண்டாலும் தடைகள் பல செய்தாலும் அது அவனின் காமத்தைக் குறைக்காமல் இன்னும் இன்னும் வளர்த்தது.
காமத்தினால் பதிந்த நகக்குறிகள் போன்ற கலவியின் அடையாளங்களைக் கண்ணாடியில் கண்டு அப்பெண்கள் நின்ற நேரம் அவன் அவர்கள் பின்னால் நின்று அதைக் கண்டு சிரித்தான். அரசன் தன்னைக் கண்டதைக் கண்ணாடியில் காணும் பெண்கள் வெட்கத்தால் முகத்தை மூடிக்கொண்டார்கள்.
காலையில் அவன் எழுந்து செல்லுமுன் அன்புமுத்தம் தரவேண்டி அவனைக் கழுத்தோடு மெல்லிய ஆலிங்கனம் செய்த பெண்கள், அவன் கால் நுனியோடு தங்கள் கால்களை வைத்து அணைத்தபடி வேண்டினார்கள்.
பெண்களோடு கலந்து கலவி அடையாளம் பல உடலில் பெற்ற அம்மன்னன் அந்தக் குறிகளைப் பெருமையாகக் கருதினான். அழகான தோற்றமுடைய அவன் கண்ணாடியில் தன் உருவினைக் காணும்போது பெறும் மகிழ்வினை விட இதையே பெருமையாகக் கருதினான்.
சில நேரம் அவன் சில பெண்களை விரும்பாமல் அவர்களிடம் இருந்து அகல வேண்டி நண்பனைக் காணச் செல்கின்றேன் என எழுவான். அப்போது அப்பெண்கள் ‘உம் தந்திரம் எமக்குத் தெரியும்” எனச் சொல்லி அவன் சிகையினைப் பிடித்து இழுத்து வைத்துக் கொண்டார்கள்.
அவனின் கடுமை தாங்காத பெண்கள் போலியாக நடித்து அவனின் பரந்த மார்பில் சரிந்து கொண்டனர், இதனால் அவர்கள் பூசிய சந்தனமெல்லாம் அவன் மார்பில் ஒட்டிக் கொண்டது.
உல்லாச வாழ்க்கை வாழ்ந்த அவன் தான் விரும்பிய பெண்ணை அடைய மற்ற பெண்களை ஏமாற்றிச் சென்றான். ஆனால், அதை அறிந்த பெண்கள் தங்கள் சேவகியர் மூலம் அதை அறிந்து அவன் அப்பெண்ணின் வசிப்பிடம் செல்லுமுன் அவனை மறித்து “காமுகனே, எங்களை ஏமாற்றுகின்றாயா? எனச் சொல்லி அவனைத் தங்களுடன் இழுத்துச் சென்றார்கள்.
நிலவு போன்ற பெண்களால் இரவு முழுவதும் தீண்டப்பெறும் அவன் இன்பம் அடைந்தான், அதனால் இரவில் விழித்திருக்கும் அவன் பகலில் தூங்கிவிடுவான். அது ஆம்பல் மலர் இரவிலே மலர்ந்து பகலிலே கூம்பிடும் காட்சிபோல் இருந்ததால் அவன் ஆம்பலுக்கு ஒப்பானவனான்.
அவன் கலவி செய்யும் காலம் பாடகியரின் உதட்டைக் காயப்படுத்தினான். அப்படியே அவர்களின் தொடைகளிலும் நகங்களினால் கீறிக் காயமிட்டான், இதனால் சங்கீதம் பாடவேண்டிய நேரம் அப்பெண்கள் குழல் ஊத முடியாமல் தவித்தனர், வீணை போன்ற வாத்தியங்களை மடியில் வைக்கமுடியாமல் தொடையில் தட்டி தாளமிடமுடியாமல் தவித்து இசைபாட முடியாதவர்களாயினர். அப்போதும் அவர்களைப் பாடும்படி அவன் தூண்டியபோது பாடமுடியாமல் எல்லாவற்றுக்கும் நீதான் காரணம் என அவர்கள் மெல்ல தலைசாய்ந்து அவனை நோக்கினர், அக்காட்சியில் அவர்கள் இன்னும் இன்னும் அழகாகத் தெரிந்தார்கள்.
(தொடரும்..)
காளிதாசனின் ரகுவம்சம் : 80
அந்த அக்னிவர்மன் நடனக்கலையிலும் ஜொலித்தன். உடல் மனம் சங்கீதம் என மூன்றும் இணையும் அந்த நடனக்கலையினைச் சரியான அபிநயங்களோடு தன் அந்தபுர பெண்களுக்கு அவனே கற்றுக்கொடுத்தான். பின், அப்பெண்களை நண்பர்கள் முன் நாட்டியமிடச் செய்து தான் நடன ஆசிரியவர்களுடனும் போட்டியிட தக்கவன் என்பதைக் காட்டிக் கொண்டான்.
அதாவது அவன் மன்னன் என்பதால் தன் நடனக்கலையின் திறமையினைத் தான் ஆடாமல் அந்தபுர பெண்கள் மூலம் உலகுக்குச் சொன்னான்.
மழை காலத்தில் அவன் மருதமலர்கள் மல்லிகை மலர்களைச் சூடிக் கொண்டான். கடம்பமரத்தின் மகரந்தபொடிகளைத் தன் மார்பில் பூசிக்கொண்டு மயில்கள் விளையாடும் சிறிய மணல் குன்றில் தானும் விளையாடிக் களித்தான்.
மழைக்கால இரவில் அவன் தன்னுடனான ஊடலினால் திரும்பிப் படுத்திருக்கும் மனைவியரைச் சமாதானம் செய்ய முயலவில்லை. காரணம், இரவின் இடியோசையில் அவர்களாக தன் மார்பை நோக்கித் திரும்பி ஒட்டிக்கொள்வார்கள் என்பதை அறிந்திருந்ததால் வாளாயிருதான்.
(மனைவியரை அவன் வலிய சென்று சமாதானம் செய்யவில்லை என்கின்றார் கவி)
அவன் ஐப்பசி கால இரவினில் பெண்களோடு மகிழ்ந்திருந்து அந்தக் களைப்பை நீக்க விதானத்து உப்பரிகையிலே நிலவொளியினை அனுபவித்தான். எல்லாக் களைப்பினையும் நீக்கும் நிலவொளி இன்பத்தினால் வந்த அவனின் களைப்பையும் நீக்கிற்று.
குளிர்க்காலத்தில் வெள்ளம் வற்றி சரயூ நதியில் கரையில் மணல் திட்டுக்கள் தோன்றும். பெண்களின் இடுப்பின் அழகான மடிப்பு போலிருக்கும் அந்த மணல் திட்டுக்களில் நடமாடும் அன்னங்கள், அழகான பெண்களின் இடையில் மின்னும் மேகலையினை அழகைக் கொண்டிருந்தன.
பனிக்காலத்துக்கு ஏற்ற ஆடைகளை அப்பெண்கள் அணிந்திருந்தனர். அவை முறுமுறுப்பு கொண்டவை என்பதால் காற்றில் ஒலி எழுப்பின. இன்னும் அவை காற்றில் ஆடி அவர்களின் மேகலை அணிந்த இடுப்பினை அவனுக்குக் காட்டின. எப்போதும் முடிச்சு அவிழும் என்பதுபோல, களைய எளிதானது என்பதுபோல அவை அவனுக்குச் சைகை செய்தன, அப்படியான ஆடை கொண்ட பெண்கள் அவனை வசீகரித்தனர்.
குளிர்க்காலத்தின் நீண்ட இரவுகளில் அசைவற்று எரியும் சுடர்கள் நீண்ட நேரம் எரிந்தன. அவன் காமத்தின் எல்லா வகை இன்பத்தையும் அந்த இரவில் பெற்றதால் அவை அவனுக்குச் சாட்சியாக நின்றன.
வசந்த காலம் வந்ததும் தென்றல் இதமாக வீசிற்று. மாமரங்களில் தளிரும் பூக்களும் தோன்றின. அந்த அழகிய காலத்தில் மனதில் பலவகை ஆசைகள் தோன்றிய பெண்கள் அவனிடம் கோபப்பட்டு சென்ற நிலை மாறி அவனைத் தாமாகவே வந்து சமாதானப்படுத்தினார்கள்.
அப்படி வந்த பெண்களை மடியில் வைத்தபடி அவன் ஊஞ்சல் ஆடினான், அப்படி ஆடும்போது அவன் கையினைக் கயிற்றில் இருந்து எடுத்து அவர்களுக்கு அச்சமூட்டினான், அதனால் மிகுந்த அச்சமுள்ள பெண்கள் அவன்மேல் இன்னும் இறுக்கமாக ஒட்டிக்கொண்டார்கள்.
கோடைக்காலத்தில் அவன் காதலியர் அதற்கேற்ற அலங்காரம் செய்திருந்தனர். சந்தனத்தைக் குழைத்து மார்பில் பூசியிருந்தனர்; அதன் மேல் குளிர்ந்த முத்துமாலைகளை அணிந்திருந்தனர்; இடையில் முழுக்கத் தங்கம் அணியாமல் கோமேதகமும் மரகதமும் கலந்து அணிந்திருந்தனர்; இதனால் அவர்கள் அவனை மிகவும் கவர்ந்து கொண்டனர்.
வசந்தகாலம் சென்றதால் அவன் காமத்தில் சற்று விருப்பம் குறைந்துபோனான். ஆனாலும், மாமரத்து பூவும், செம்பருத்தி பூவும் கலந்த மது அவனின் காமத்தைப் பெருக்கிற்று.
இவ்வாறு ஆறுபொழுதிகளிலும் அவன் வேறு பணி எதுவும் நோக்காது புலன்களுக்கு இன்பமளிக்கும் விஷயத்திலே விளையாடிக் களித்தான். ஆறு பொழுதிகளையும் அதனதன் இயல்பில் இன்பமாகவே களித்தான்.
அவன் இப்படி ஸ்திரீ லீலைகளில் சிக்கிக் கிடந்தாலும் அவன் பகைவர் அவனைத் தொட முயலவில்லை, அவன் எல்லாவகையிலும் பலம் கொண்ட மன்னனாகவே அறியப்பட்டான். ஆனால், மிகுந்த காமவிளையாட்டுக்களினால் சாபம் பெற்ற சந்திரன் மெலிவதை போல் அவனும் கலவியின் நோயினால் உடல் மெலியத் தொடங்கினான்.
வைத்தியர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவன் பெண்களிலும் மதுவிலும் மூழ்கிக் கிடந்தான், புலன்கள் வசம் சென்று இன்பத்துக்கு அடிமையான மனதைத் திருப்புதல் கடினம் என்பதால் அவனால் இதிலிருந்து மீள முடியவில்லை.
நோயினால் அவன் முகம் மிகவும் வெளிறிற்று, உடல் சயரோகத்தால் மெலிந்து போயிற்று, அவன் அணிகலன்களை அணியக் கூட சக்தியற்றுப் போனான். நடக்கக் கூட அவனால் முடியாததால் சேவகர்கள் அவனைத் தாங்கிக் கொண்டனர். அவன் குரல் கூட மிகவும் ஈனமாக ஒலித்தது.
அவன் இப்படியான நோயினில் வீழ்ந்துவிட்டதால் வம்சம் என எதுவுமில்லை, அவன் மிக மோசமாக உடல் இளைத்துக் கிடந்தான். இதனால் அமாவாசைக்கு முந்தைய நிலவு போலவும், கோடையில் ஒரு கை அளவு சுருங்கிவிட்ட குளம் போலவும், சிறிய ஜூவாலை கொண்ட விளக்குப் போலவும் ரகுவம்சம் தோன்றிற்று.
ஜனங்கள் இதுபற்றி சந்தேகமும் கவலையும் கொண்டிருந்தபோது அவனின் மந்திரிகள் மக்களிடம் மன்னர் புத்திரபேற்றுக்கான யாகங்களைச் செய்கின்றார், புத்திர காமேஷ்டி யாகம் செய்கின்றார் எனச் சொல்லிக்கொண்டனர்.
பல மனைவியர் இருந்தும் அவனுக்கு ஒரு மனைவியாலும் வாரிசே இல்லை, பெரும் காற்றுக்கு விளக்கு தப்பாது என்பது போல அந்தக் கொடிய நோய்க்கு அவனும் தப்பமுடியவில்லை.
அரசன் இறந்தால் அதனை வெளியில் உடனே சொல்லக் கூடாது என்பது ராஜவிதி, அதனால் அமைச்சர்கள் அதனை யாரிடமும் சொல்லாமல் மக்களுக்கே தெரியாமல் மறைத்து அவன் யாகம் செய்வதாக சொன்ன இடத்தின் யாக நெருப்பிலே அவனை இட்டார்கள், அவனை நெருப்பு எடுத்துக் கொண்டது.
அடுத்து என்ன ன்ன செய்வது எனத் தவித்த மந்திரிகள் அவனின் மனைவியரில் ஒருத்தி கர்ப்ப அறிகுறி கொண்டிருந்ததை கண்டு அவளை அரசுக்குரியவளாக்கினார்கள்.
அரசனின் இறப்பால் கண்ணீர் வடித்து உடல் உஷ்ணமானதால் தவித்த அந்தக் கரு, அரசிக்குரிய அபிஷேகங்களை செய்தபோது குளிர்ந்து அமைதி கொண்டு தங்கிற்று.
ஆவணியில் விதைக்கப்படும் விதையினைப் பூமி தனக்குள் தாங்கிக் கொள்வதுபோல அந்த அரசி உலக நன்மைக்காக கர்ப்பத்தைத் தன் வயிற்றில் வைத்துக் கொண்டு மந்திரிகள் துணையுடன் ஆட்சியினைத் தடையின்றி செலுத்தினாள்.
(முடிந்தது)
இத்தோடு காளிதாசன் அந்தப் பிரசித்தியான ரகுவம்சத்தினை நிறைவுச் செய்கின்றார். திலீபனில் ஆரம்பித்த அந்த வம்சம் ராமபிரான் காலத்தில் உச்சம் பெற்று அக்னிவர்மன் காலத்தில் முடிந்துபோனது. அக்னிவர்மனுக்கு சரியான வாரிசு இல்லை என்பதை இப்படி முடிக்கின்றார் காளிதாசர். அதாவது அக்னி வர்மனுக்கு வாரிசு இல்லாததால் மனைவி ஒருத்தி கர்ப்பவதி என ஆட்சியில் அமர்த்தினார்கள் அமைச்சர்கள், உண்மையில் அவள் கர்ப்பமில்லை அதனால் ஆட்சியில் அவளை அமர்த்த அப்படி ஒரு நாடகம் ஆடினார்கள்.
ஆக அக்னி வர்மனுக்கு வாரிசு இல்லாததால் அவனுக்குப் பின் அவன் மனைவி அரசாள வந்தாள் அவளோடு ரகுவம்சம் முற்றுப்பெற்றது என்பது காளிதாசர் சொல்வது.
மிக நீண்ட இந்தச் சரித்திரத்தை சில மாதங்களாக பார்த்துவிட்டோம். அடுத்து காளிதாசனின் இன்னொரு காவியத்தினைத் தேடுவோம்.