முருகப்பெருமான் ஆலயங்கள் : காளிபட்டி முருகன் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : காளிபட்டி முருகன் ஆலயம்.

கொங்குநாட்டின் முருகப்பெருமான் ஆலயங்களில் முக்கியமானது காளிபட்டி முருகன் ஆலயம், சேலம் நாமக்கல் எல்லையில் திருச்செங்கோடு மல்லன் சத்திரம் அருகே அமைந்திருக்கின்றது, அந்த அற்புத ஆலயம்.

இதன் வரலாறு பழனி பாலதண்டாயுதபாணியிடம் இருந்தும், அந்தப் பழனிமலையின் பக்தர் ஒருவர் இடமிருந்தும் சில நூறு ஆண்டுக்கு முன் இருந்து தொடங்குகின்றது.

அந்தப் பக்தரின் இயற்பெயர் அறிவாறில்லை, ஆனால் பழனிமுருகன் மேல் அவர் கொண்ட பக்திகாரணமாக பழனி கவுண்டர் என அழைக்கப்பட்டார் , அந்த அளவு பழனி முருகனோடு ஒன்றித்திருந்தார்.

பழனிமலை முருகனைக் காண ஒவ்வொரு தைப்பூசத்துக்கும் விரதம் இருந்து செல்வார், அங்கே பாடுகள் பல கடந்து முருகனைத் தரிசித்து மகிழ்ந்து வருவார்.

இப்படியான அவர் வாழ்வில் முதுமையின் வாசலில் சிக்கல் ஏற்பட்டது, அவரால் பழனிக்குச் செல்லமுடியவில்லை, அழைத்து செல்வாருமில்லை. இதனால் இனி இப்படியே கிடந்து மரணித்து முருகனை அடைவது என முடிவெடுத்தவர் உயிரை விடத் துணிந்தார்.

பழனிமலை காணா வாழ்வு வாழ்வதில் அவருக்கு விருப்பமில்லை.

அப்படி அவர் வைராக்கியமாக இனி மரணம் எனக் கிடந்த நிலையில் கனவில் குழந்தை வடிவில் அவர் காலடியில் நின்று தரிசனமானார் முருகப்பெருமான், தனக்காக நடந்த அந்தக் கால்களை நீவிவிட்டபடியே “பக்தனே, நீ இன்னும் பல காலம் வாழ்வாய், என்னை வணங்க நீ பழனிக்கு வரவேண்டிதில்லை, இங்கே ஒரு ஆலயம் எழுப்பு, நான் பழனியில் தரும் அத்தனை வரத்தையும் இங்குத் தருவேன்” எனச் சொல்லி மறைந்தார்.

அப்படியே பழனி கவுண்டரும் சிறிய முருகப்பெருமான் ஆலயம் கட்டி பழனி போலவே ஒரு முருகனை ஸ்தாபித்தார், பக்தர்கள் அலை அலையாக வர வர அது பிரசித்தியாயிற்று. பழனி கவுண்டர் கடைசி வரை முருகப்பெருமான் அடியாராக வாழ்ந்து அப்படியே அவனோடு கலந்துபோனார்.

அவருக்குப் பின் பக்தர் கூட்டம் அலை மோதியது. அதில் வந்த லட்சுமண கவுண்டர் எனும் பக்தர் இன்று காணும் இக்கோவிலை கட்டிப் பெரிதாக்கினார், பின் தேரும் எல்லாமும் வந்தது.

இந்த ஆலயத்தின் மிகப் பெரிய விஷயம் கொடிய நாகம் கடித்தாலும் இங்குக் குணமடையும் அதிசயம், அடிப்படையில் பழனிமலையின் நவபாஷாண சிலையும் இப்படியானதே, எந்தக் கொடிய நோய், விஷம் என்றாலும் நவபாஷாண சிலையின் அபிஷேக நீர் பட்டால் தீரும்படி போகர் வடிவமைத்திருந்தார், எல்லா விஷமும் முறியும் இடம் பழனி.

அப்படியே இங்கும் அதே மரபு உண்டு, பழனி கவுண்டர் காலமுதல் இன்றுவரை இப்பக்கம் பாம்புக்கடி உள்ளிட்ட விஷங்களுக்கு மருத்தமனை செல்லும் அவசியம் இல்லை, எல்லா விஷமும் முருகப்பெருமான் சந்நிதியிலே திருநீற்றில் முறிபடும் அதிசயம் நடக்கும்.

இதுவரை நாகம் தீண்டிய யாரும் இக்கோவிலுக்குக் கொண்டுவந்து பிழைக்காமல் சென்றதில்லை என்பதில் இந்தக் கோவிலின் சிறப்பும் அதிசயமும் உண்டு.

இங்குத் திருநீறாக வழமையான பசுஞ்சாண விபூதி இலைக்கு மாறாக கரும்பு சக்கை எரிக்கப்படும் சாம்பலே இங்கு விபூதி, இது ஆன்மீக மரபு ஒன்றையும் பின்பற்றுகின்றது.

ஒரு சங்கப்பாடல் உண்டு.

“கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார்
வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்
வருங்கால் பரிவ தில”

கரும்புகாடு எரிகின்றது எனும் செய்தி வந்தால் ஒருவர் பதறி ஓடுவர், ஒருவர் பதறவே மாட்டார். அதாவது, கரும்பை வெட்டி அதன் சாறை பிழிந்துவிட்டு வெறும் தோகையும் சக்கையும் குவித்திருப்பவர் பதறமாட்டார் .
எரியட்டும் என அவர்போக்கில் இருப்பார், யார் இன்னும் கரும்பை வெட்டி சாறு எடுக்கவில்லையோ அவர்தான் அலறி அடித்து ஓடுவார்.

அப்படி இந்த உடலாகிய கரும்பை ஏற்கனவே பிழிந்து அதாவது தன்னை வருத்தி இறைவனைக் கண்டோர் தன் உடலுக்கு தன் வாழ்வுக்கு என்ன வந்தாலும் அவர்கள் போக்கில் இருப்பார்கள் காரணம் முழு உண்மையும் அறிந்து இனி தன் ஆத்மா நித்திய ஒளியில் சஞ்சரிக்கும், சதா காலமும் பரம்பொருளுடன் பேரானந்த நிலையிலிருக்கும் என்பதை உணர்ந்ததால் அவர்கள் பதறமாட்டார்கள்.

ஆனால் அப்படி ஒரு அனுபூதி நிலை இல்லாத, கரும்பினை இன்னும் சாறுபிழியாதவன் அது எரியும்போது எல்லாம் போயிற்றே எனப் பதறுவது போல சாமானியர்கள், லௌகீகவாசிகள் ஓடித் திரிவார்கள்.

இந்தக் கரும்பு உவமை இந்துஞானியரிடையே மிகப் பிரசித்தி.

இதைத்தான் ஒளவையும் தன் விநாயகர் அகவலில் “கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி” என்பாள். பட்டினத்தார் தன் கையில் கரும்பு ஏந்தி நின்ற தத்துவம் இதுதான்.

ஒருவகையில் விநாயகப்பெருமானுக்குக் கரும்பு படைக்கும் சூட்சும ஞானமும் இதுதான்.

ஆம், அப்படி ஞானியர் இறைவனை உணர்ந்தோர் தங்கள் மரண வேளையில் அஞ்சமாட்டார்கள் பதற மாட்டார்கள், மாறாக எல்லாம் பிழிந்த உடலில் இனி என்ன உண்டு என்பது போல் இருப்பார்கள், ஞானச்சாறு பெற்றபின் இந்தச் சக்கை எரியட்டும் என அவர்கள் போக்கில் இருப்பார்கள்.

அந்த ஞானம் அல்லாதவர் பதறுவார்கள்.

இந்தத் தத்துவத்தை சொல்லியே இங்குக் கரும்பு சக்கை எரிக்கப்பட்டு விபூதியாக்கப்படுகின்றது, முருகப்பெருமான் சந்நதியில் இது விஷம் முறிக்கும் மருந்தாகின்றது.

இங்குள்ள இடும்பன் சந்நிதியில் கொடுக்கப்படும் மை பில்லி சூனியம் போன்ற சிக்கலுக்கு முழுத் தீர்வாகின்றது.

இதுவும் பழனிபோலவே மேற்கு நோக்கிய ஆலயம், மேற்குப் பக்கத்தில் உள்ள நுழைவாயிலுக்கு மேல் 5 நிலை ராஜகோபுரத்துடன் உள்ளது. அறுபடை வீடு கோவில்களின் சிலைகள் அமைந்த ஒரு அழகிய முக மண்டபம் பக்தர்கள் வந்து செல்ல வசதியுடன் உள்ளது.

வெளியே வடக்குப் பகுதியில் இடும்பன் சந்நதியும் அதைத் தொடர்ந்து வழி விடும் விநாயகர் சந்நிதியும் உள்ளது. கோயில் ஒரே பிரகாரத்தில் அமைந்துள்ளது. நின்ற கோலத்தில் மிகவும் அழகான சிறிய முருகன் கருவறை தெய்வமாக அருள் புரிகிறார்.

ஆண்டுதோறும் இங்கு நடக்கும் தைப்பூச தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. சித்திரை தேர் மற்றும் விநாயக தேர் என அழைக்கப்படும் இந்தத் தேரோட்டங்களைக் காணவும் வடம் பிடித்து இழுக்கவும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்து திரளுவர். தேரோட்டத்தின் போது பக்தர்கள் தங்கள் வயல்களில் விளைந்த தானியங்கள் மற்றும் உப்பு ,மிளகு ஆகியவற்றை தேரில் காணிக்கையாக வீசுவது வழக்கம்.

அன்றைய தினம் பொங்கல் வழிபாடு, உருளுதண்டம், காவடியாட்டம், கரகாட்டம், கும்மியாட்டம் எனக் கொண்டாட்டம் பெரிது,

வைகாசி விசாகம் இன்னும் விமரிசையாக நடக்கும், அந்நேரம் தமிழகத்தின் மிகப்பெரிய மாட்டுச்சந்தை இப்பக்கம் கூடும் இன்னும் அப்பெருமை இங்கு உண்டு.

இந்த ஆலயம் மிக விசேஷமானது, முன்பு லட்சுமண கவுண்டர் முருகனுக்குப் பணிவிடை செய்தபோது , பால் சுரக்காப் பசுமாட்டுக்கு முருகப்பெருமான் அருளால் பல குடம் பாலை வரவழைத்தார், அதுமுதல் இம்முருகனுக்குப் பாலாபிஷேகம் பிரசித்தி.

திருச்செங்கோட்டுப் பக்கம் செல்லும் போது இந்த ஆலயம் செல்லத் தவறாதீர்கள், அங்குச் சென்று நெய்விளக்கேற்றி பாலாபிஷேகம் செய்து முருகனை வணங்கி நில்லுங்கள். அப்படியே அந்தக் கருப்பு திருநீற்றைப் பூசுங்கள், அந்நேரம் உங்கள் எல்லாச் சிக்கலும் அதுவரை வாழ்வில் விஷமாகி நின்ற எல்லாமும் தீரும்.

அதன்பின் வாழ்வு கரும்பு போல் இனிக்கத் தொடங்கும், ஒருமுறை சென்று வணங்குங்கள். உங்களுக்கே வாழ்வு இனிக்கத் தொடங்குவது புரியும். இது சத்தியம்.