முருகப்பெருமான் ஆலயங்கள் : விருதுநகர் அருகில் தென் திருவண்ணாமலை நரிப்பாறை முருகன் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : விருதுநகர் அருகில் தென் திருவண்ணாமலை நரிப்பாறை முருகன் ஆலயம்.

இந்தியா சூட்சுமச் சக்தி நிறைந்த சனாதன பூமி. காலங்காலமாகப் பிரபஞ்ச சக்தி தேர்ந்தெடுத்து நடத்திக் கொண்டிருக்கும் பூமி, இங்கு எக்காலமும் சித்தர்களும் அவர்களுக்கு வழிகாட்டும் முருகப்பெருமானும் நின்று, அற்புதம் பல செய்து மகா ஞானமான வழியில் மக்களுக்கு ஞானவழி காட்டி லௌகீக வாழ்வில் கர்மம் கழித்து நல்லபடியாக முக்தி பெற வழிகாட்டி நிற்கும் பூமி.

அந்த ஞான மார்க்கம் ஏகப்பட்ட இடங்களைத் தனக்கென தேர்ந்து கொள்ளும், முருகப்பெருமானும் தன் அடியார்கள் மூலம் சித்தர்கள் மூலம் அருள்பாலித்துக் கொண்டே இருப்பார்.

இந்த வானில் எல்லா இடமும் காற்று உண்டென்றாலும் விமானம் பறக்கும்படி வழித்தடம் சில மட்டுமே உண்டு, கடல் ஒரே போல் தெரிந்தாலும் கடலிலும் பயணப் பாதைகள் சில மட்டுமே உண்டு. அப்படி இந்தச் சூட்சும உலகில் சில இடங்களில் மட்டுமே அபரிமிதமான அருள் பெருகும், சக்தி குவியும். பூமியின் அடியில் எல்லா இடமும் நீர் இராது எல்லா இடமும் கச்சா எண்ணெய் இராது என்பது போல் சில இடங்களில்தான் அந்தப் பிரபஞ்சத்தின் அருள் ஊற்று பெருகும்.

அதனைத் தங்கள் ஞானத் திருஷ்டியால் தெய்வத்தின் அனுக்கிரகத்தால் அறிந்தவர்கள் சித்தர்கள், அப்படி ஏகப்பட்ட சித்தர்களால் அடையாளம் காணப்பட்டு அவர்களால் உருவான ஆலயம் நரிப்பாறை முருகப்பெருமான் ஆலயம்.

இதன் வரலாறு சித்தர்களில் சிறந்தவரான கோரக்கரிடம் இருந்து தொடங்குகின்றது, அவர் தன் தவசக்தியால் ஒவ்வொரு மலைக்கும் சென்று ஒரு நூலை எழுதினார், “மலை வாகனம்” என அதற்கு பெயர்

அவர் இம்மலையினை “நரிபடவு” எனச் சொல்லி அதன் வரலாற்றையும் சொல்கின்றார். படவு என்றால் குன்று எனப் பொருள், படவு எனும் சொல்தான் படப்பு என்றாகி இன்றும் வைக்கோல் படப்பு எனக் கிராமங்களில் சொல்லப்படும்.

கோரக்கர் இந்த மலையில் தங்கியிருந்து முருகனை நோக்கித் தவமிருந்து பல விஷயங்களைப் பெற்றுக் கொண்டார், அப்படி அவர் பெற்ற சூட்சும விஷயங்கள் மூலம் முருகப்பெருமானும் சிவனும் வேறல்ல என்பதை அறிந்து மிக நுணுக்கமான ஏற்பாடு ஒன்றை இங்குச் செய்தார்.

அதாவது சிவலிங்கத்தில் முருகனையே நிறுத்தினார். ஆவுடை மேல் முருகப்பெருமானை அமர்த்தி சிவலிங்கத்துக்குப் பதிலாக முருகனே அருள் பாலிக்கும் தலம் இது, ஆவுடை மேல் முருகப்பெருமான் நிற்கும் தலம் உலகில் இது ஒன்றுதான்.

கோரக்கர் அவ்வளவு நுணுக்கமாக இந்தச் சிலையினை நிறுவினார், கோரக்கர் போகரை போல மருத்துவ ஞானம் மிக்கவர் இதனால் இந்தச் சிலையும் பழனி சிலைபோல் நோய் தீர்க்கும் சக்தி, வினை தீர்க்கும் சக்தி அத்தனையும் கொண்டது.

சிறிய மலைமேல் இந்தக் கோவில் அமைந்திருக்கின்றது. வழியில் விநாயகப் பெருமானுக்கு சந்நிதி உண்டு, மலையின் சிறிய கோவிலில் லிங்கத்துக்கு மேல் சிவனின் வடிவாக முருகப்பெருமான் நின்று சேவல் கொடியுடன் அருள் பாலிக்கின்றார்.

கேட்ட வரம் அத்தனையும் தரும் முருகன் இவர். கோரக்கர் முதல் 18 பெரும் சித்தர்கள் வழிபட்ட தலம் இது, அவர்கள் வழி வந்த‌ ஒன்பது பெரும் சித்தர்கள் அங்கேயே தங்கி இருந்து வழிபட்ட முருகன் அவர் என்பதால் அவரைத் தரிசித்து அந்தச் சந்நிதியில் நின்றாலே தீராத வினை எல்லாம் தீரும், வாராத ஐஸ்வர்யம் அத்தனையும் வரும்.

கோவிலுக்குப் பின்னால் உள்ள குகைகளில்தான் சித்தர்கள் வசித்தார்கள், தவமிருந்தார்கள். அவர்களின் ஜீவசமாதி அங்கே உண்டு, ஒன்பது பெரும் சித்தர்கள் அங்கு ஜீவசமாதி அடைந்திருக்கின்றார்கள்.

சுந்தரானந்தர், நித்தியானந்தர் என ஒன்பது முனிவர்கள் அங்கே காலம் தோறும் வசித்து முருகப்பெருமானுக்கு வழிபாடு செய்து அங்கே தங்கி தவம் செய்து சித்தியடைந்தார்கள், அவர்கள் ஜீவ சமாதி இன்றும் உண்டு. அங்கே சமாதிக்குமேல் ஆவுடையோடு ஒட்டிச் செதுக்கப்பட்ட, மருந்து சாற்றாத லிங்கம் பிரதிஷ்டை செய்யபட்டு வழிபாடுகள் நடக்கின்றன‌.

இங்கு ஒரு குகை சித்தர் குகை என அழைக்கப்படுகின்றது, இங்கு அற்புதங்கள் மிக அதிகம், சூட்சும உலக அற்புதம் ஏராளம். சித்தர்கள் இங்குப் பல வடிவில் காட்சித் தருவார்கள், அங்கு உண்மையான ஆன்மீகம் தேடி ஞானம் தேடி வருவோர் சதுரகிரியில் காண்பது போல, திருவண்ணாமலையில் காண்பது போல் இங்கும் சித்தர்களை அரூபிகளாகக் காணமுடியும்.

பௌர்ணமி அமாவாசை காலங்களில் சித்தர்கள் உண்மையில் ஞானம் தேடி வருவோர்க்குத் தன்னை வெளிப்படுத்துவார்கள், சாமனியர்களுக்கு ஒரு விலங்கின் வடிவில் வருவார்கள், அது வெண்ணிற கீரிப்பிள்ளை.

ஆம், சித்தர்கள் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வடிவில் வருவார்கள். இமாலயத்தில் பறவை வடிவில் சில விலங்கு வடிவில் வருவார்கள், மதுரை திருப்பரங்குன்ற உச்சியில் மச்சமுனி மீன் வடிவில் இப்போதும் வருவார், சில சித்தர்கள் காகங்கள் வடிவில் வருவார்கள், பைரவ அம்ச சித்தர்கள் நாய் வடிவில் வருவார்கள்.

ஏராளமான சித்தர்களுக்கு நாகவடிவம் பொருந்தும். சில சித்தர்கள் கீரிப்பிள்ளை வடிவில் வருவார்கள். கீரி என்பது குபேரனின் வாகனம் என்பது இந்துமதம் சொல்லும் போதனை, அவ்வகையில் இந்தக் குகை கோவில் குபேர லிங்கத்தை வழிபட்டால் வரும் பலன் அத்தனையும் தரும்.

இங்கு விளக்கேற்றி பால், பழம், இனிப்புகள், பிஸ்கட் போன்றவை வைத்தால், வைப்பவருக்குச் சித்தர்கள் அருள் இருந்தால் வெள்ளை நிறக் கீரிப்பிள்ளை ஒன்று எங்கிருந்தோ வந்து அதனை உண்ணும், சில நேரம் நாகங்களும் வந்து உண்ணும்.

கீரிப்பிள்ளை பிஸ்கட் போன்ற பொருட்களை உண்பது இங்கு அதிசயம்.

இவை சித்தர் வடிவங்கள், திருபரங்குன்ற மலை உச்சியின் தடாகத்தில் தயிர் இட்டால் மச்சமுனி மீன்வடிவில் வந்து கர்மத்தை ஏற்பது போல இங்குக் கீரி வடிவில் அல்லது நாக வடிவில் வந்து சித்தர்கள் கர்மத்தை ஏற்று வாழ்வளிக்கின்றார்கள்.

ஆம், இந்தத் தலம் ஒருவர் கர்மத்தைப் போக்கும் ஆலயம், அதைச் சித்தர்கள் ஏற்று மக்களுக்கு விடுதலை அளிக்கும் ஆலயம்.

ஒருவனின் நோய் முதல் பலிக்கும் பில்லி சூனியம் வரை வாழ்வில் என்னென்ன கஷ்டம் உண்டோ அத்தனைக்கும் முற்பிறப்பின் கர்ம வினை முக்கிய காரணம், அந்தக் காரணப்படியே இப்பிறப்பில் எல்லா இன்னல்களையும் ஒருவன் அனுபவிக்க வேண்டும், பில்லி சூனியம் பேய் பிசாசு பாதிப்பு கூட முன் ஜென்ம கர்ம தொடர்ச்சியே.

அப்படியான கர்ம வினைகளை இங்குச் சித்தர்கள் பெற்று இங்கு வரும் பக்தர்களுக்கு விடுதலை அளிக்கின்றார்கள், இங்கு நடக்கும் அற்புதங்கள் ஏராளம்.

கோரக்கரால் ஸ்தாபனம் செய்யப்பட்ட இந்த ஆலயம் 18 சித்தர்களாலும் வழிபடப்பட்டு ஒன்பது சித்தர்களாலும் போற்றப்பட்டது, அவர்கள் ஜீவ சமாதியும் இங்குதான் உண்டு.

இன்னும் ஆழமாகச் சொன்னால் ஜாதகம் என்பது கர்மம் தீர்க்கும் வழியினைச் சொல்லும் தத்துவம், ஜாதகம் என்பது அவனவன் கர்மவினைப்படி அமையும், அந்தக் கர்மவினைக்கு ஏற்ப நவக் கிரகங்கள் செயலாற்றும்.

இங்குள்ள ஒன்பது சித்தர்களும் ஒவ்வொரு கிரகத்தின் பாதிப்பைத் தடுப்பார்கள் அதாவது கர்மவினைத் தீர்த்துத் தருவார்கள்.

இத்தலம் தென் திருவண்ணாமலை எனப் பெயரளவில் வந்துவிடவில்லை, திருவண்ணாமலை எப்படி ஞானப்பூமியோ சித்தர்கள் நிரம்பிய அமானுஷ்ய சக்தி பூமியோ, தவமும் முக்தியும் கைகூடும் இடமோ அப்படி இந்த தென் திருவண்ணாமலையும் சக்தி வாய்ந்த இடம்.

சதுரகிரி வெள்ளையங்கிரி மலை போல மஹா சக்திவாய்ந்த இடம்.

இங்குக் கோரக்கர் முருகப்பெருமானை நிறுத்தி நமக்கெல்லாம் வழிபடத் தந்தார், அவருக்குப் பின் எல்லாச் சித்தர்களும் வந்து பெரும் சக்திமிக்க ஸ்தலமாய் இந்தக் கோவிலை மாற்றித் தந்தார்கள்.

இங்கு வழிபட்டால் திருத்தணி மலைக்குச் சென்ற பலன் அப்படியே கிடைக்கும் என்பது சித்தர்கள் கொடுத்த உறுதி, அதனால் திருத்தணிக்கு நிகரான தலமாக இத்தலம் போற்றப்படுகின்றது.

இந்தத் தலத்துக்குச் செல்ல எல்லா நாளும் உரியவை என்றாலும் அமாவாசை, பௌர்ணமி காலங்கள் உகந்தவை, அன்று கூட்டம் அதிகம் இருப்பதால் அன்னதானமும் உண்டு.

இங்குள்ள சித்தர் குகையில் இருக்கும் சிவலிங்கத்தின் மேல் விபூதியினைப் பௌர்ணமி அன்று தூவி வைப்பார்கள், அமாவாசை அன்று அது பக்தர்களுக்குக் கொடுக்கப்படும், அந்தத் திருநீற்றை வாயிலிட்டால் தீரா நோயெல்லாம் தீரும், இன்றுவரை அந்த அற்புதம் உண்டு. எக்காலமும் உண்டு.

விருதுநகர் பக்கம் செல்லும் போது அதுவும் அமாவாசை பௌர்ணமி காலங்களில் செல்லும் போது இந்தத் தலத்தைத் தரிசிக்க மறவாதீர்கள். ஆவுடை மேல் லிங்கமாய் நிற்கும்முருகப்பெருமானை வழிபடுங்கள், சில ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய அந்த ஆலயம் அவ்வளவு பழமையானது.

அந்த முருகனுக்கு செவ்வரளி மாலையிட்டு வணங்கி தூபமிடுங்கள், கோரக்கராலும் எல்லா சித்தர்களாலும் வணங்கப்பட்ட எம்பெருமான் உங்களுக்கு நல்லருள் பொழிவார்.

அதன் பின் வழியில் இருக்கும் நாக சந்நிதி கன்னி தெய்வங்களை வழிபட்டு ஒன்பது சித்தர்களின் சமாதியினையும் வணங்குங்கள், அந்நேரம் நவக்கிரக தாக்குதல் கேடுகள் எல்லாம் ஒழிந்து எல்லாம் சுபகிரக அருளாக மாறும்.

சித்தர் குகையில் நெய் விளக்கு ஏற்றிவிட்டு சித்தர்களை வணங்கிவிட்டு பால், பிஸ்கட் போன்றவற்றைப் படைத்து சித்தர்களை மனமார நினையுங்கள், உங்களுக்கு நல்ல பிராப்தம் இருந்தால் வெள்ளைக் கீரி அங்குத் தரிசனமாகிப் படைத்தவற்றை உண்டு அந்த இடத்திலே உங்கள் வாழ்வை மாற்றும்.

ஆம், வெள்ளைக் கீரிவடிவில் சித்தரே உங்களுக்குக் காட்சியளிப்பார். குபேர லிங்கத்தை வணங்கிய பலன் அங்கே முழுக்க உங்களுக்கு கிடைக்கும். முயன்று பாருங்கள் நிச்சயம் முருகப்பெருமான் அருளால் கர்மம் தீரும், வாழ்வே மாறும்.

“நடந்தால் நம்பு என்பது மனிதன் வாக்கு, நம்பினால் நடக்கும் என்பது சித்தன் வாக்கு” என்பது அங்கு எழுதப்பட்டுள்ள வாசகம்.

எக்காலமும் முருகனை நம்பினார் கைவிடப்படார் என்பது எல்லா ஆலயங்களைப் போலவே இங்கும் தாத்பரியம், அவரை நம்பிச் சென்று சிவன் வடிவ முருகனை வணங்கி சித்தர்களை வணங்கி கீரி வடிவில் அவர்களைக் கண்டு வணங்கி எல்லா நல்ல வரத்தையும் வாங்கிக் கொள்ளுங்கள், அந்தக் கருணைமிகு முருகப்பெருமான் தன் சித்தர்களுடனான கீரிவடிவத்தில் அங்கே உங்களை எதிர்பார்த்து காத்தே இருக்கின்றார், அங்கு வருவோர்க்கு அருள்பாலிக்க தயாராக இருக்கின்றார். இது சத்தியம்.