முருகப்பெருமான் ஆலயங்கள் : வில்பட்டி முருகன் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : வில்பட்டி முருகன் ஆலயம்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே மலையில் அமைந்துள்ளது இந்த வில்பட்டி வெற்றி வேலப்பர் ஆலயம், இது தமிழக முருகப்பெருமான் ஆலயங்களில் மகா தொன்மையானது.

எவ்வளவுக்குத் தொன்மையானது என்றால் அகத்தியர் போகர் காலத்தில் உருவான ஆலயம் இது, இரு வகையில் இது தொன்மையானது.

இந்த மலையில்தான் அகத்தியரின் சீடரான போகர் வசித்தார், இங்கு நிரம்பியிருக்கும் மூலிகைகளை ஆராய்ந்து மருந்து செய்வது, மானுட இனத்துக்காய்ப் பெரிய தவத்தை இயற்றுவது எனப் போகர் இப்பக்கமே தன் ஆசிரமம் அமைத்துத் தவ வாழ்வு வாழ்ந்துவந்தார்.

அவர் இங்கிருந்துதான் நவபாஷான சிலைகள் மூன்றைச் செய்து ஒன்றை பூம்பாறையிலும், இன்னொன்றைப் பழனியிலும் ஸ்தாபித்தா.ர் இன்னொரு சிலை மதிகெட்டான்சோலை எனுமிடத்தில் உண்டு என்பது செய்தி.

போகர் தன் பெரும் ஆராய்ச்சிகளை எல்லாம் செய்தபோது இந்த முருகப்பெருமானையே வழிபட்டார், அப்படியே இங்கிருக்கும் வேடுவர் குல மக்களாலும் இங்கு வேல் ஏந்திய முருகன் கொண்டாடப்பட்டார், மிகத் தொன்மையான காலத்திலே குறிஞ்சி நில தெய்வமான முருகனுக்கு இங்குச் சிறிய ஆலயம் அமைக்கப்பட்டது அதைச் செய்தவர் போகர்.

இந்த மகா சிறப்பான ஆலயம் இரு வகையில் புராணத்தோடு பிணைந்தது.

முதலில் இடும்பன் எனும் அந்த அசுரன் முருகனை நோக்கி தவமிருந்து அவரை வழிபட்ட இடம் இது. இடும்பம் வரலாறு எல்லோரும் அறிந்தது. பெரும் அசுரனனான அவன் சூரபத்மனின் மகன்களுக்கு வில்பயிற்சி அளிக்கும் குருவாய் இருந்தான். முருகப்பெருமானால் சூரனின் குலம் அழிக்கப்பட்டபின் அவன் மனம்மாறி சிவனிடம் அடைக்கலமானான், அவனை அகத்தியரிடம் அனுப்பினார் சிவபெருமான்.

அகத்திய பெருமான் அவனை முன்பு கந்தகிரி எனும் வானலோலகத்தில் இருந்து எடுத்து வந்த சிவமலை சக்தி மலை எனும் இரு மலை சிகரங்களை இமாலயத்தின் பக்கம் வைத்திருந்தார். அதனைத் தென்னகத்துக்கு எடுத்து வரச் சொன்னார்.

அதன்படி அவன் பிரம்மதண்டத்தின் இரு முனைகளில் பிரத்தியான நாங்களால் அம்மலைகளை இருபக்கமும் கட்டி காவடியாய்ச் சுமந்து தென்னகம் நோக்கி வந்தான், அவன் களைப்பால் அம்மலைகளைக் கீழே வைத்தான், அந்த மலைமேல் ஒரு குழந்தை வந்து ஆடி சிரித்தது.

அகத்தியர் எடுத்து வரச் சொன்ன மகா புனிதமான மலையில் ஒரு குழந்தை விளையாடுவதைக் கண்ட இடும்பன் அதனை விரட்ட விரும்பினான், அப்போதுதான் தான் முருகப்பெருமான் என்பதைப் பெருமான் காட்டினார், அங்கே அவரைப் பணிந்தான்.

அந்த மலைதான் பழனிமலை ஆயிற்று, அருகே இன்னொரு மலை இப்போதும் உண்டு.

அப்படியான இடும்பன் இப்பக்கமே வாழ்ந்து முருகப்பெருமானுடன் கலந்தான். அவன் காலத்தில் வேலோடு நின்று அவனுக்கு அருள்பாலித்தார் முருகப்பெருமான், இப்படித் தொடங்குகின்றது அதன் வரலாறு.

இரண்டாம் வரலாறு பாண்டியர் காலத்தில் இருந்து தொடங்குகின்றது, பாண்டவர்கள் வனவாச காலத்தில் இம்மலையில் தங்கியிருந்தார்கள், அதன் அடையாளமும் சுவடும் இப்போதும் உண்டு, இன்னும் அர்ஜூனன் தவம் செய்த இடம் இந்த மலையில் உண்டு.

அவன் வில் ஊன்றி வைத்த இடமே இந்த வில்பட்டி என்றாயிற்று.

பாண்டவர் வழிபட்ட தெய்வங்களில் முருகப்பெருமானும் ஒருவர். இன்னும் இந்தப் பாண்டவர்க்கும் மதுரை பாண்டியர்க்கும் பல தொடர்புகள் உண்டு, மதுரை இளவரசி ஒருத்தியினை அர்ஜூனன் மணம் செய்திருந்தான், இதனால் அவனுக்குத் துணையாக குருஷேத்திர போரில் பாண்டவரும் பங்குப் பெற்றார்கள்.

அந்த வரலாற்றோடு தொடர்புடைய ஆலயம் இது, பாண்டியர்க்கு எல்லை கோவிலாக இருந்த ஆலயம் இது, காலம் காலமாக அவர்கள் மலையில் வழிபட்ட தொன்மையான ஆலயம் இது.

இப்படிப் போகர் காலம், இடும்பன் காலம், மகாபாரத காலத்தில் தொடர்ந்த இந்தச் சக்திமிக்க ஆலயத்தை திருஞான சம்பந்த பெருமான் காலத்தில் சமணமதத்தில் இருந்து இந்துமதத்துக்கு அவரால் திருப்பப்பட்ட கூன் பாண்டியன் எனும் நின்றசீர் நெடுமாறன் காலத்தில் சிறிய ஆலயம் மலையில் அமைக்கப்பட்டது.

அந்த நின்றசீர் நெடுமாறன் என்பவர் நாயன்மார்களில் ஒருவரானவர், கூன்பாண்டியனாக அவர் சமணரிடம் முடங்கிக் கிடந்த காலத்தில் பாண்டிய நாட்டின் முக்கிய பிரதேசமெல்லாம் சேரர்களால் ஆக்கிரமிக்கபட்டன. குற்றாலம் நெல்லை போன்ற இடமெல்லாம் அவர்கள் கையில் சிக்கிற்று. அப்படி இந்த மலையும் சேரர்களிடம் சிக்கிக் கிடந்தது.

கூன்பாண்டியனைத் திருஞான சம்பந்த பெருமான் குணமாக்கி அவன் கூனை நிமிர்த்தி நின்றசீர் நெடுமாறன் என்றாக்கிய பின் அவர் எல்லா இடமும் மீட்டார், அப்போது இந்த இடமும் மீட்கப்பட்டு ஆலயம் அமைக்கப்பட்டது.

இன்றும் அதுபற்றிய கல்வெட்டும் பாண்டியரின் மீன் சின்னமும் அந்த ஆலயத்தில் உண்டு.

சிறிய ஆலயம் என்றாலும் மிக ஆழமான வடிவில் பெரும் யந்திரங்கள் கோவிலுக்குள்ளும், சக்திவாய்ந்த 9 பீட கல்லும் ஆலயத்தை சுற்றிலும் இடப்பட்டு உருவான சக்திமிக்க ஆலயம் இது.

ஆம். ஆலய வெளிச்சுவற்றில் ஒவ்வொரு பிரகாரம் போன்ற சிற்பம் செதுக்கப்பட்டு அதன் அடியில் சந்த பீட கல் பதிக்கபட்டு 9 ஆலயங்களை ஒரே ஆலயத்தில் நிறுத்திய அற்புதத் தலம் இது.

இந்த ஒன்பது பீடகற்களும் ஒவ்வொரு கிரகத்துகுரியவை. அவை மறைமுகமாக ஒவ்வொரு பெரும் பிம்பத்திலும் நிறுவபட்டுள்ளன‌.

கோவிலின் வெளிப்புறம் விநாயகர் சிற்பம் அமைந்துள்ளது இது கேது பகவானுக்குரியது, அப்படியே பகீரதன் சிற்பமும் உண்டு. பகீரதன் தன் முன்னோர்களுக்கான பித்ரு கடனைச் சரியாக செய்தவன். அதனால் அவனுக்கும் சனி பகவானுக்கும் சம்பந்தம் உண்டு. அந்த பீடக்கல் சனி வழிபாட்டுக்கானது.

வேடுவர் குலம் வழிபட்ட ஆலயம் என்பதால் கண்ணப்ப நாயனார் சிலை உண்டு, இது செவ்வாய் கிரகத்துக்கான பலனைக் கொடுக்கும்.

போகரின் சிலை சுக்கிர வழிபாட்டினைச் சொல்லும், கால பைரவ சிலை ராகுவினை அம்சமாகக் கொண்டது.

தண்டபானி வடிவில் இருக்கும் முருகன் சிலை புதன் கிரஹ பலனைத் தருவார், தட்சணாமூர்த்திக்கான பீடக்கல் குரு பகவானின் அருளைத் தரும்.

ஆக நவக்கிரஹங்களையும் வழிபடும் மிக மிக சூட்சுமமாக இந்த ஆலயத்தை அமைத்திருக்கின்றார்கள் ஞானியர். இந்த ஆலயத்தைச் சுற்றி வந்தால் நவக்கிரக வழிபாட்டை செய்வதற்குச் சமம்.

உள்ளே மயிலானது எங்கும் காணப்படாத அம்சமாய் வாயில் பாம்போடு காட்சியளிக்கின்றது. இது முருகப்பெருமான் நன்மை தீமைக்கு அப்பாற்பட்ட ஞானி, தேவர் அசுரர் என எல்லாத் தரப்புக்கும் சமமானவர், நன்மை தீமை எனும் மாயைகளைக் கடந்த தர்ம சாஸ்தா அவர், தேவரும் அசுரரும் அவர் இயக்கமே என்பதைச் சொல்கின்றது.

இங்கு எங்குமில்லா அதிசயமாய்ச் சிவலிங்கம் மேல் முருகப்பெருமான் காட்சியளிக்கின்றார், இது சிவனும் முருகபெருமானும் ஒன்றே எனும் தத்துவத்தை விளக்கும் பெரும் தாத்பரியம்.

ஆம், இந்த ஆலயம் அந்தப் பெரும் தத்துவத்தை அழகுறச் சொல்லும் ஆலயம், சிவனில் இருந்து உதித்தவர் முருகப்பெருமான், அதனால் முருகனைச் சரணடைவதும், சிவனைச் சரணடைவதும் ஒன்றே.

அதனாலே இடும்பன் இங்குச் சரணடைந்தான், இன்னும் பலர் இங்கு வழிபட்டார்கள், நவக்கிரகங்களும் இங்கு முருகனுக்கு கட்டுப்படும் தாத்பரியமும் அதுவே.

இந்த ஆலயத்தில் இடும்பன் வழிபட்டதன் சாட்சியாக இடும்பன் சிலையும் அவன் மனைவி இடும்பி சிலையும் அவர்கள் அந்த மலைகளைச் சுமந்த கதையும் சிற்பமாக்கப்பட்டிருக்கின்றது.

அருகிருக்கும் இன்னொரு பழங்கால மண்டபத்தில் சிவனுக்குத் தனிச் சன்னதி உண்டு. அங்குப் பிரம்மா விஷ்ணுவுடன் சிவன் அருள் பாலிகின்றார், இங்கும் பாண்டிய மன்னர்களின் மீன் முத்திரை இருப்பதால் இதைக் கட்டியவர்களும் அவர்களே என்பது தெரிகின்றது.

அதாவது மும்மூர்த்திகளும் ஒருவரே. முருகப்பெருமான் அந்த மும்மூர்த்தியின் அம்சம் என்பதை மிக நுணுக்கமாகச் சொல்லும் தத்துவம் இது.

காஞ்சி காமாட்சி ஆலயத்தின் நேர்கோட்டில் வரும் முக்கிய ஆலயமிது. சூட்சும தொடர்புகள் மிக அதிகம்.

போகரால் ஸ்தாபித்து வழிபாடுகள் செய்யப்பட்ட இந்த ஆலயம் அதிகம் வெளித்தெரியவில்லை என்றாலும் மகா சக்தி வாய்ந்தது, பெரும் சூட்சும தத்துவங்களை கொண்டது. உள்ளே பதிக்கப்பட்ட யந்திரமும் வெளியே ஸ்தாபிக்கப்பட்ட ஒன்பது பீடகற்களும் மகா சக்திவாய்ந்தவை, போகர் முதலிய ரிஷிகளால் சக்தி கொடுக்கப்பட்டு எக்காலமும் மிகுந்த அருள் உடையதாய் நிறுவப்பட்டவை.

முருகப்பெருமான் தலங்கள் செவ்வாய் கிரகத்தின் பலனைத் தருவது என்றாலும் இங்கு நவக்கிரகங்களின் பலனை முழுமையாக அடையலாம், அதனை மிகுந்த சூட்சுமமாக ஒவ்வொரு பெரிய பிம்பத்தின் முன்னால் ஸ்தாபித்து ரகசியமாக சொல்லி வைத்தனர் ரிஷிகள்.

இங்கு தைப்பூசம் அன்று பலிபீடத்தில் பூண்டும் கடுகும் இன்னும் பல மூலிகைகளும் கலந்து செய்யப்பட்டு சாற்றப்படும் சாந்து பெரும் பிரசாதம், அன்று எல்லோரின் சாபங்களையும் பாவங்களையும் முருகர் ஏற்று அவருக்குச் சில குறைவுகள் வருவதாகவும் அதைச் சரிசெய்ய இப்படிச் சாற்றப்படவேண்டும் எனும் பழங்கால வேடர்குல நம்பிக்கை வழி இது செய்யப்படுகின்றது.

ஆனால், இதனால் ஒவ்வொருவர் உடலும் ஆரோக்கியம் நோய் நீங்கி பெரும் ஆரோக்கியம் பெரும் மருத்துவம் முனிவர்களால் அன்றே ஏற்படுத்தப்பட்டது, இந்துமதத்தின் பெரும் தாத்பரியம் அதுதான்.

ஆன்மீகமும், மருத்துவமும் அறிவியலும் கலந்த ஞானமதம் இந்துமதம் என்பது இங்கு மீண்டும் நிருபிக்கப்படும் ஒன்று.

கொடைக்கானல் பக்கம் செல்லும் போது பூம்பாறையோடு நின்றுவிடாமல் இந்த ஆலயத்தையும் தரிசியுங்கள், செந்நிற பூக்களுடைய மாலைகள் இட்டு, நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள், நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும்.

அகத்தியர், போகர், இடும்பர் காலம் பாண்டவர் காலம் தொடங்கி இன்றுவரை அருள்பாலிக்கும் முருகப்பெருமான் அவர், திருஞ்சான சம்பந்தர் முருகப்பெருமானின் அம்சம் என்பதால் அவரால் குணமடைந்த நின்றசீர் நெடுமாற நாயனார் சம்பந்தரின் அருளில் அதாவது முருகப்பெருமானின் அருளில் உணர்ந்து எழுப்பிய தனித்துவமான ஆலயம் இது.

தமிழகத்தின் மிகத் தொன்மையான இவ்வாலயம் முருகப்பெருமானின் முழு அருளைப் பெற்றுத் தரும், நீங்கள் யாராகவும் இருக்கலாம் பாண்டவரைப் போல் பாதிக்கபட்டவராக, இடும்பனைப் போல் மாயையில் சிக்கியவராக ஏன் கூன் பாண்டியனைப் போல் வழி தவறி சென்றவராகவும் இருக்கலாம்.

நீங்கள் யாராக இருந்தாலும் , எவ்வித பெரும் நோயோ இல்லை வறுமையோ இதரப் பெரும் பெரும் துன்பமோ மாயையோ பெரும் சிக்கலோ எதுவோ ஒன்றிலோ இல்லை எல்லாவற்றிலும் சிக்கிக் கிடந்தாலோ, மீளமுடியாப் பெரும் துன்பச் சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்தாலோ இங்கு வந்து வேண்டினால் பெரும் பலன் உண்டு.

அங்கு மயிலின் வாயில் இருக்கும் பாம்பு தத்துவம் உங்கள் வாழ்வின் நல்ல கர்மா தீய கர்மா என இரண்டையும் சரிசெய்யும் தத்துவம், அதன்படி உங்கள் கர்மவினை இங்குத் தீரும், கர்ம வினைக்கெல்லாம்தாண்டி முருகப்பெருமான் அருள்பாலிப்பார்.

என்ன வேண்டுகின்றீர்களோ அது இங்கு வெற்றியாகும்.

அப்படித்தான் போகர் சித்தியடைந்தார், அர்ஜூனனுக்கும் வெற்றி கிடைத்தது, பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறன் நாயன்மார் எனும் பெரும் நிலை அடைந்தார்.

லௌகீக வெற்றியுடன் ஆன்மீக வெற்றி தரும் ஆலயம் இது, உடலின் சக்கரங்களைத் துலங்க வைத்து பெரும் ஞானம்தரும் ஆலயம் இது.

இங்கு அதிசயங்கள் வாடிக்கை, சித்தர்கள் நாகவடிவில் வருவதும் முருகப்பெருமான் குழந்தை வடிவில் வருவதும் இயல்பான ஒன்று.

தன்னை நம்பிவந்து பணியும் பக்தர்களுக்கு முருகப்பெருமானே கனவில் வந்து பலனும் வழியும் சொல்லும் சம்பவமெல்லாம் இங்கு அடிக்கடி நடக்கும். ஒருமுறை சென்று பணிந்து பாருங்கள். அந்த வில்பட்டி முருகன் உங்களையும் தேடி வந்து பேசுவார். உங்களுடனும் உறவாடுவார். உங்கள் வாழ்வில் வெற்றி வேலப்பனால் வெற்றி ஒன்றே வழமையாகும். முக்தி நிலையும் வசமாகும். இது சத்தியம்.