முருகப்பெருமான் ஆலயங்கள் : குன்றத்தூர் முருகப்பெருமான் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : குன்றத்தூர் முருகப்பெருமான் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்களில் புகழ்பெற்றதும் தொன்மையானதுமான இந்த ஆலயம் திருப்போரூருக்கும் திருத்தணிகை மலைக்கும் இடையே சிறிய குன்றில் அமைந்துள்ளது.

இந்தக் கோவிலின் வரலாறு முருகப்பெருமானிடம் இருந்தே துவங்குகின்றது. முருகப்பெருமானின் சிறப்பே அவர் எல்லா வகை போரையும் செய்தார் என்பது. வான் வழி, கடல் வழி , நிலவழி போர் என எல்லாமும் செய்தவர் அவர், அந்த முருகப்பெருமான் திருபோரூரில் சில அசுரர்களை ஒழித்துவிட்டு தணிகை மலை நோக்கி செல்லும் போது இங்கு அமைதி வேண்டி அமர்ந்தார்.

அப்போது ஒரு லிங்கத்தை அவர் கையாலே ஸ்தாபித்து வழிபட்டார், கந்தவேள் வழிபட்ட ஈசன் என்பதால் அந்தச் சிவன் கந்தவேள் ஈஸ்வரர் என்றாகி கந்தழீஸ்வரரனார்.

இப்போதும் அவர் கந்தழீஸ்வரர் என்றே அழைக்கப்படுகின்றார், அந்தச் சிவன் ஆலயத்தோடு சேர்ந்த ஆலயம் இது. அந்தச் சிறிய குன்றின் அடிவாரத்தில் கந்தழீஸ்வரர் சிவன் அமைந்திருக்கின்றார்.

முருகப்பெருமான் இங்குச் சிவனை வழிபட்டு அமைதி கொண்ட தலம் என்பதால் இன்றும் இங்கு வழிபடுவோர்க்குப் பெரும் அமைதி கிடைக்கும், அந்த அமைதி நல்ல நிம்மதியினை, தெளிவைக் கொடுக்கும். அந்தத் தெளிவில் எடுக்கப்படும் முடிவு எல்லாமே சுபமாகும்.

84 படிகள் கொண்ட இந்த ஆலயத்தில் 16 தூண் மண்டபத்துடன் மலையேற வேண்டும், அங்கே எதிர்கொள்ளும் விநாயகர் வில்வ விநாயர், இவரிடம் என்ன கேட்டாலும் அதைத் தருவார்.

உள்ளே முருகப்பெருமான் வழிபட்ட கந்தவேள் ஈஸ்வரர் எனும் கந்தழீஸ்வரர் அருள் பாலிக்கின்றான், அதை அடுத்து முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் அருள் பாலிக்கின்றார்.

இந்த ஆலயத்தின் வெகு சிறப்பு வலப்பக்கம் நின்று முருகனைத் தரிசித்தால் அவர் வள்ளியுடன் காட்சித் தருவார், இடப்பக்கம் நின்று தரிசித்தால் தெய்வானையுடன் காட்சித் தருவார்.

இப்படி ஒரு அமைப்பினை எந்தக் கோவிலிலும் காணமுடியாது, வள்ளியும் தெய்வானையுடன் ஒன்றாக முருகனை காண முடியாது. யாராவது ஒருவரைத்தான் காணமுடியும்.

இது மிகுந்த தாத்பரியமானது, அதாவது இந்த ஆலயத்தில் லௌகீக வாழ்வின் வரங்களைக் கேட்டாலும் நடக்கும். வள்ளி என்பவள் பூலோக வாழ்வின் தத்துவம், அங்கே ஆன்மீக வரம் கேட்டாலும் கிடைக்கும் தேவயானை என்பவள் வானலோக அடையாளம் அதாவது ஆன்மீகத் தத்துவம்.

இந்த ஆலயம் இருவகை பலனையும் தரும்.

இந்த ஆலயம் மிகத் தொன்மையானது, சோழர்கள் பல்லவர்கள், நாயக்கமன்னர்கள் என எல்லா மன்னர்களும் திருப்பணி செய்த இந்த ஆலயத்தின் மிகப் பெரிய அடையாளம் சேக்கிழார் பெருமான்.

அந்தச் சேக்கிழார் இங்குதான் பிறந்தார், அவர் அனுதினமும் இந்தச் சிவனையும் முருகனையுமே வழிபட்டார். இதனாலே அவருக்குப் பெரும் ஞானமும் அருமையான தமிழும் அமைந்தது.

அவர் சோழ மன்னனின் அவையில் முதல் அமைச்சராக இருந்தவர். அதாவது, லௌகீகத்தின் உச்சியில் இருந்தார், அப்படியே ஆன்மீகத்திலும் சிறந்து பெரியபுராணம் இயற்றினார்.

அவருக்காக அவர் வழிபட்ட இந்த ஆலயத்தை சோழமன்னன் திருப்பணிகள் செய்து புனரமைத்துக் கொடுத்தான், குலோத்துங்க சோழன் அதைச் செய்தான், அதுபற்றிய கல்வெட்டு இன்றும் உண்டு.

இன்று திருமண வரம், குழந்தை வரம், படிப்பு வரம் என எல்லா வரமும் தரும் ஆலயம் இது, சேக்கிழார் எனும் மகா பெரும் அடையாளம் வந்து இந்த ஆலயத்தின் பெருமையினை உலகுக்குச் சொன்னது இது.

இன்றும் அவருக்கு அங்கு ஆலயம் உண்டு, சேக்கிழார் குருபூஜையின் பொழுது முருகன் மலைக்கோவிலிலிருந்து கீழே உள்ள சேக்கிழார் கோவிலுக்குச் சென்று காட்சிக் கொடுக்கும் வைபவம் நடைபெறும்.

இங்குக் கிருத்திகை நட்சத்திரத்தன்று தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்து இந்த முருகப் பெருமானை வழிபட்டால் எப்படிப்பட்ட வறுமையில் இருப்பவரும் செல்வந்தனாக மாறுவார்.

பூரம் மற்றும் பரணி நட்சத்திரத்தன்று திருமணம் ஆகாதவர்கள் அர்ச்சனை செய்து கோயிலுக்கு வரும் பிள்ளைகளுக்கு உணவும் உடையும் கொடுத்தால் சுபகாரியம் நடைபெறும்.

அனுஷம் நட்சத்திரத்தன்று சுவாமிக்கு அபிஷேகம் செய்து நல்லெண்ணெய் பன்னீர் வாங்கிக் கொடுத்தால் பகைவர்கள் மறைந்து போவார்கள்.

பௌர்ணமி அன்று ஒரு பஞ்ச உலோகத்தில் வேல் செய்து சுவாமியின் கருவறையில் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணிநேரம் வைத்து திரும்பப் பெற்றுக்கொண்டு வீட்டிற்குச் சென்று பச்சரி நிரம்பிய பாத்திரத்தில் பஞ்சலோக வேல் வைத்து வழிபாடு செய்தால் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.

நீண்ட காலம் திருமணம் ஆகாதவர்கள் நீல நிற சங்குப்பூவை 18 எண்ணிக்கையில் எடுத்து மாலை கோர்த்து சுவாமிக்கு அணிவித்து மனதார வேண்டினால் விரைவில் திருமணப் பிராப்தி உண்டாகும்.

பௌர்ணமி அன்றோ அல்லது சனிக்கிழமை அன்றோ சுவாமியைத் தரிசனம் செய்து வாயில்லா ஜீவன்களுக்கு அன்னதானம் அளித்தால் தொழிலில் மேன்மேலும் வளர்ச்சி உண்டாகும்.

மனநிலை பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகளுக்கு ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இத்தலம் மிக மிக பலனைத் தரும்.

பக்தர்கள் செய்யும் நேர்ச்சை கடன் இன்றும் என்றும் அக்கோவில் பக்தர்கள் வேண்டுவதை கொடுக்கும் என்பதற்கு அங்குக் காணிக்கை வைக்கும் பக்தர்களே சாட்சி, அப்படிப் பக்தர்கள் வைத்த தங்கக் கொடி முதல் ஏகப்பட்ட சாட்சி உண்டு, கேட்ட வரத்தை அப்படியே அருளும் முருகன் இவர்.

இங்குள்ள துவார பாலகர்கள் இருவரும் முருகனைப் போலவே கையில் சூலம், வஜ்ரம் ஏந்தி காட்சித் தருக்கின்றனர். இக்கோவில் விமானம் ஷட்கோண அமைப்பில் உள்ளது.

தணிகைமலை செல்லும் போது, திருப்போரூர் செல்லும் போது இந்தக் கந்தவேள் ஈஸ்வரனையும், முருகப்பெருமானையும் தரிசிக்க மறவாதீர்கள், அப்படியே பெரியபுராணம் தந்த சேக்கிழார் கோவிலையும் தரிசிக்கத் தவறாதீர்கள்.

இங்கு வழிபட்டால் பூலோக வாழ்வு ஆன்மீக வாழ்வு என இரண்டுமே முழுமையடையும் , எந்தத் தடை இருந்தாலும் அகலும், முக்கியமாக எது உங்களுக்கு முழு நிறைவும் சந்தோஷமும் தருமோ அது உங்களுக்குக் கைகூடும்.

ஒரு மனிதனின் குறைந்தபட்ச தேவை நிம்மதி, அது அவனின் மனத்தேவை எதுவோ மனம் தேடுவது எதுவோ அதைத் தரும், மானிடர்களின் பெரும் குழப்பம் அவர்கள் மனம் எதைத் தேடுகின்றது எனத் தெரியாமலே அலைவது, அதிலே நிம்மதியற்று போவது.

இங்கு வழிபடுவோர்க்கு மனம் எதைத் தேடும் என்பது தெரியும், அது பூர்த்தியாகும் வழியும் தெரியும், முழு நிம்மதி எல்லா வகையிலும் கிடைக்கும், வாழ்வே பூரணமாகும். இது சத்தியம்.